மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 20 அக் 2020

ஆம்புலன்ஸை நிறுத்தி பக்கோடா வாங்க சென்ற கொரோனா பெரியவர்!

ஆம்புலன்ஸை நிறுத்தி பக்கோடா வாங்க சென்ற கொரோனா பெரியவர்!

புளியங்குடியில் கொரோனா பாதிப்புக்குள்ளான பெரியவர் ஒருவர் வீட்டுக்கு வந்த ஆம்புலன்ஸை நிறுத்தி காத்திருக்க வைத்துவிட்டு பக்கோடா வாங்கச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து புளியங்குடியில் 40 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள பழைய மார்க்கெட் பகுதியான சிதம்பர விநாயகர் கோயில் தெருவில் 26 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் அது தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு தடுப்புகளால் அடைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பழைய மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த ஒரு பெரியவருக்கும் இரு பெண்களுக்கும் கொரோனா தொற்று உறுதியான நிலையில் அவர்களை அழைத்து செல்ல வந்த 108 ஆம்புலன்ஸ் சாலையில் காத்திருக்க, தங்களுக்குத் தேவையான உடமைகளை பைகளில் எடுத்துக் கொண்டு மூன்று பேரும் ஒருவர் பின் ஒருவராக நடந்து சென்றனர். அவர்களுடன் காவலர் ஒருவரும் சென்றார்.

இதில் கடைசியாக கட்டைப்பையைத் தூக்கிக்கொண்டு சென்ற பெரியவர், ஆம்புலன்ஸைக் காத்திருக்க வைத்ததோடு உடன் வந்த காவலரைத் தனது கட்டைப்பைக்குக் காவலாக நிறுத்திவிட்டு அருகில் இருந்த மிட்டாய்க்கடைக்குச் சென்றார். அங்கு பக்கோடாவை பெரிய பார்சலாகக் கட்டி வாங்கிக் கொண்டு தனது பையில் பத்திரமாக வைத்தார்.

இதை உடன் வந்த சுகாதார அதிகாரிகள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மிட்டாய் கடை அருகில் நின்ற பொதுமக்களும் சர்வசாதாரணமாக கொரோனா உறுதிசெய்யப்பட்ட பெரியவருக்கு அருகில் நின்றுகொண்டு இருந்தனர். கொரோனா பரவலைத் தடுக்க சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும், வீட்டிலிருக்கவும், தனித்திருக்கவும் அறிவுறுத்தி வரும்நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்காக அழைத்துச்செல்லப்பட்ட பெரியவர், ஆம்புலன்ஸைக் காத்திருக்க வைத்துவிட்டு பக்கோடா வாங்கிச் சென்ற சம்பவம் அலட்சியத்துக்குச் சாட்சியாக அரங்கேறியுள்ளது.

-ராஜ்

வெள்ளி, 17 ஜூலை 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon