மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 22 அக் 2020

கல்விக் கட்டணம்: தனியார் கல்லூரிகள் பள்ளிகளுக்கு உத்தரவு!

கல்விக் கட்டணம்: தனியார் கல்லூரிகள் பள்ளிகளுக்கு உத்தரவு!

தமிழகத்தில் தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணம் வசூலிப்பது தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஜூலை 17) இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

கொரோனா ஊரடங்கால் கல்வி நிறுவனங்கள், ஆன்லைன் மூலம் வகுப்புகளை எடுத்து வருகின்றன. இதற்காகக் கல்விக் கட்டணங்களையும் பள்ளிகள் வசூலித்து வந்தன. இதற்குப் பெற்றோர்கள் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், தனியார் கல்வி நிறுவனங்கள் கல்விக் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதே சமயத்தில் ஆசிரியர்களுக்குச் சம்பளம் வழங்கப்படுவது தடைப்படக்கூடாது என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அரசின் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு, அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கே.பழனியப்பன், செயிண்ட் ஜோசப் பள்ளி நிர்வாகம், வேலம்மாள் கல்வி நிறுவனம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. இந்த வழக்கு இன்று (ஜூலை 17) நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கல்விக் கட்டணம் வசூலிக்கவில்லை என்றால் ஆன்லைன் வகுப்புகள் எடுக்கும் ஆசிரியர்களுக்கு எப்படி ஊதியம் வழங்குவது என்று கேள்வி எழுப்பியதுடன், தவணை முறையில் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக அரசுக்குக் கோரிக்கை மனு அனுப்ப வேண்டும் என்று மனுதாரர் தரப்புக்கு அறிவுறுத்தியது.

இந்த வழக்கு மீண்டும் இன்று (ஜூலை 17) நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. காலை நடைபெற்ற விசாரணையின் போது அரசுத் தரப்பில், தனியார் பள்ளிகளைப் பொறுத்தவரை 75 சதவிகித கல்விக் கட்டணத்தை மூன்று தவணையாகப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும், முதல் தவணையாக ஊரடங்கு காலத்தில் 25 சதவிகிதம், பள்ளிகள் திறந்த பின் 25 சதவிகிதம், பள்ளிகள் திறந்து மூன்று மாதங்களுக்குப் பின் 25 சதவிகிதமும் வசூலிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டது.

மேலும் இந்த ஆண்டு கல்விக் கட்டணம் எவ்வளவு என்பதை முடிவெடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான கட்டண நிர்ணய குழு அமைக்கப்பட்டுள்ளது . மாணவர்கள் தாமதமாகக் கல்விக் கட்டணம் செலுத்தினாலும் மாணவர்களைப் பள்ளிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒருவேளை மாணவர்கள் தண்டிக்கப்பட்டால் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கட்டண நிர்ணய குழுவுக்கு உதவிக்கரமாகக் கல்வியாளர்களை அந்த குழுவில் சேர்க்கலாமே என்று கேள்வி எழுப்பினார். இதற்கு அரசுத் தரப்பில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதால், கல்வியாளர்களைச் சேர்ப்பதற்கான அவசியம் இல்லை என்று விளக்கமளிக்கப்பட்டது.

இதையடுத்து கல்வி நிறுவனங்கள் சார்பில், இந்த ஆண்டு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என இடைக்கால உத்தரவில் ஆணை பிறப்பிக்க வேண்டும். மாணவர்களின் நலன் கருதி இலவசமாகப் புத்தகங்கள் வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

அரசின் உத்தரவுக்கு ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகவும், கல்வி நிறுவன கட்டிடங்களின் சொத்து வரி தொடர்பாக அரசிடம் கொடுத்த மனுவைப் பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என்று கல்வி நிறுவனங்கள் கேட்டுக்கொண்டன.

இதற்கு அரசுத் தரப்பில், சொத்து வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகள் எல்லாம், தற்போதைய சூழலில் சாத்தியமில்லை. பல பெற்றோர்களிடம் இருந்து தற்போதைய சூழ்நிலையில் கட்டணம் செலுத்த முடியாது என்று கூறி மனுக்கள் வந்துள்ளது. அரசைப் பொறுத்தவரைப் பெற்றோர்கள், மாணவர்கள், கல்வி நிறுவனங்கள் என அனைத்து தரப்பினரையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது,

இன்று காலை அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இடைக்கால உத்தரவை இன்று மதியம் 2.15 மணிக்கு பிறப்பிப்பதாகத் தெரிவித்தார். அதன்படி மீண்டும் இவ்வழக்கு மதியம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது நீதிபதி, “கொரோனா பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வந்தாலும், ஒவ்வொரு நாளும் புதிய கோணத்தில் கொரோனா பாதிப்பு தொடர்கிறது. இந்த வைரஸ் தொற்று எப்போது குறையும் என்றே தெரியாத நிலை இருக்கிறது.

இந்த நேரத்தில் கல்விக் கட்டணத்தைச் செலுத்த முடியாத சூழ்நிலையில் இருப்பதாகப் பெற்றோர்கள் கூறுகின்றனர். மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பது தான் அனைவரது கவனமாகவும் உள்ளது.

அரசைப் பொறுத்தவரை 75 சதவிகித கல்விக் கட்டணம் வசூலிக்கலாம். தவணைக்கு 25 சதவிகிதம் என்ற அடிப்படையில் மூன்று தவணையாகப் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறுகிறது. இரண்டாம் தவணை 25 சதவிகிதத்தைப் பள்ளிகள் திறக்கும் போது வசூலித்துக்கொள்ளலாம் என்று கூறப்படும் நிலையில், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று தெரியாத நிலை இருக்கிறது.

எனவே அரசு உதவி பெறாத அனைத்து கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் 2020-21ஆம் கல்வியாண்டில், முதல் தவணையாக 25 சதவிகிதத்துக்குப் பதில் 40 சதவிகிதம் வசூலித்துக் கொள்ளலாம். ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் இந்த கட்டணத்தை வசூலித்துக் கொள்ளலாம். மீதமுள்ள தொகையைச் சூழ்நிலையைப் பொறுத்து வசூலிப்பது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

மேலும், கட்டண நிர்ணய குழு ஆகஸ்ட்டிலிருந்து 8 மாதங்களுக்குள் தனது பணியை முடிக்க வேண்டும். இன்று பிறப்பித்துள்ள உத்தரவு, மறு உத்தரவு வரும் வரை பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்து அரசு உதவி பெறாத நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

அதுபோன்று இந்த ஆண்டு ஆசிரியர்கள் ஊதிய உயர்வு கேட்கக் கூடாது. மாணவர்களின் நலன் கருதிப் பாடப்புத்தகங்களை இலவசமாகவோ அல்லது விலை குறைவாகவோ வழங்க அரசு முடிவெடுக்க வேண்டும் என்று கூறி வழக்கை வரும் அக்டோபர் 5ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

-கவிபிரியா

வெள்ளி, 17 ஜூலை 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon