மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 22 அக் 2020

சென்னை டூ நாங்குநேரி : முதியவரின் சைக்கிள் பயணம்!

சென்னை டூ நாங்குநேரி : முதியவரின் சைக்கிள் பயணம்!

கொரோனாவால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், வெளியூர்களுக்குச் சென்ற பலர் இன்னும் வீடு திரும்ப முடியாமல் சிரமப்படுகின்றனர்.இ-பாஸ் கிடைக்காதவர்களும், வாங்கத் தெரியாதவர்களும் பல நூறு கிலோ மீட்டர் கால் நடையாகவும், சைக்கிள்களிலும் பயணம் மேற்கொள்கின்றனர்.

அந்தவகையில், திருநெல்வேலியைச் சேர்ந்த 73 வயதான முதியவர், சென்னையிலிருந்து தனது சொந்த ஊரான நாங்குநேரிக்கு சைக்கிளிலேயே சென்றுள்ளார். நாங்குநேரி அருகில் உள்ள தெய்வநாயகப்பேரியைச் சேர்ந்த இந்த முதியவர் பெயர் பாண்டியன். கேரள மாநில சங்கனாச்சேரியில் உள்ள ஒரு உணவகத்தில் காசாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு இரு மகன்கள் உள்ளனர். ஒருவர் கத்தாரிலும், மற்றொருவர் சென்னையிலும் பணியில் உள்ளனர். சென்னையில் உள்ள இளைய மகன் தாம்பரத்தில் வீடு எடுத்துத் தங்கியிருக்கிறார்.

அவருடன் பாண்டியன் மனைவி தங்கியுள்ளார். கொரோனா பரவலுக்கு முன்னதாக இளைய மகனிடம் இருந்து உடல் நிலை சரியில்லை என்று போன் வந்துள்ளது. மனசு கேட்காமல் கேரளாவிலிருந்து சென்னை வந்து பார்த்துள்ளார் பாண்டியன். அப்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பாண்டியனால் சொந்த ஊர் திரும்ப முடியவில்லை.

வயல்வெளி, கோயில், குளம் என பார்த்துப் பழகிய பாண்டியனுக்கு, சென்னையில் 4 சுவற்றுக்குள்ளே அடைந்து கிடக்க முடியவில்லை. இ-பாஸ் பெற்று ஊர் திரும்புவதற்கான வழிமுறைகளும் அவருக்குத் தெரியவில்லை. சொந்த ஊருக்கு திரும்ப வேண்டும் என்று தனது மகன்களிடம் சொல்லிக் கொண்டே இருந்திருக்கிறார்.

இந்நிலையில் ஜூன் 23ஆம் தேதி சென்னையில் இருந்து கிளம்பிய அவர் காற்று மழை என பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் சைக்கிளிலேயே பயணம் செய்து ஜூலை 1ஆம் தேதி சொந்த ஊரை அடைந்துள்ளார். ஊரருகே உள்ள கோயிலில் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்ட பாண்டியன் நேற்று (ஜூலை 16)தான் தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.

இந்த அனுபவமிக்க மற்றும் சுவாரஸ்யமான பயணம் குறித்து பாண்டியன் கூறுகையில், “ஊரடங்கால் சென்னை மயானம் போல் காட்சியளிக்கிறது. கிராமத்து வாழ்க்கையை அனுபவித்த என்னால் எத்தனை நாள் தான் நான்கு சுவற்றுக்குள்ளே அடைந்து கிடக்க முடியும். ஊருக்குப் போக வேண்டும் என்று மகன்களிடம் சொன்னேன், பெரிய மகன் கத்தாரிலிருந்து பணம் அனுப்பினார். ஜூன் 23ஆம் தேதி திண்டிவனத்திலிருந்து திருநெல்வேலிக்கு ஒரு பேருந்து புறப்படுவதாகத் தகவல் கிடைத்தது. இதனால் பேரனின் சைக்கிளை எடுத்துக் கொண்டு திண்டிவனம் சென்றேன்.

திண்டிவனத்தில் நின்ற பேருந்தில் சைக்கிளை ஏற்ற முடியாது என்றனர். அங்கிருந்தவர்கள் விழுப்புரம் சென்றால் சைக்கிளைப் பேருந்தில் ஏற்றிக் கொள்வார்கள் என்று கூறினர். எனவே விழுப்புரத்தை நோக்கி சைக்கிளை மிதித்தேன், அங்கும் பேருந்து கிடைக்கவில்லை.

விழுப்புரத்திலும் பேருந்து கிடைக்காததால் ஏமாற்றத்துடன் நின்றிருந்த என்னைப் பார்த்த ஒருவர் 50 ரூபாயும், ஒரு பாட்டில் தண்ணீரும் கொடுத்தார். அங்கிருந்து மீண்டும் சைக்கிளை மிதிக்கத் தொடங்கினேன். உளுந்தூர்பேட்டையில் ஒரு ஹோட்டல் இருந்தது. அது எங்கள் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் என்பவரது ஹோட்டல். என்னைப் பார்த்ததும் அவர் அடையாளம் கண்டுகொண்டார்.

என் தந்தை நிறைய சமூக சேவை செய்தவர். அவரை ஊரில் காமராஜர் என்றுதான் அழைப்பார்கள். எனவே, காமராஜர் மகன் உங்களுக்கு ஏன் இந்த நிலைமை? என்று கேட்டார் ஜெயராமன். அதோடு சாப்பிட சொன்னார். வேண்டாம் என கூறி ஒரு காபி மட்டும் குடித்தேன். பின்னர், கிளம்பும் போது 1000 ரூபாய் பணம் கொடுத்து அனுப்பினார்.

அங்கிருந்து புறப்பட்டதும், ஒரு காய்கறி வண்டி திருச்சி நோக்கி செல்வது தெரியவந்தது. அதில் சைக்கிளை போட்டுக்கொண்டு திருச்சியை அடைந்தேன்” என்று தனது பயண அனுபவத்தைத் தொடர்ந்து கூறுகிறார் பாண்டியன்.

”திருச்சியிலிருந்து விராலிமலைக்கு மீண்டும் சைக்கிளை மிதித்தேன். அங்கிருந்த தேநீர் கடையில் டீ மற்றும் பிஸ்கட் சாப்பிட்டேன். நான் இவ்வளவு தூரம் சைக்கிளில் பயணிப்பதை கேட்டறிந்த டீ கடைக்காரர், அன்றிரவு கடை வாசலில் படுக்கச் சொல்லி இடம் கொடுத்து உதவினார். பின்னர் காலை புறப்பட்டதும், மதுரை , விருதுநகர் பகுதிகளில் நல்ல மழை கொட்டியது. கடுமையான காற்று. இதனால் சைக்கிளை உருட்டிக்கொண்டே நடந்தேன். ஒருவழியாகத் திருநெல்வேலி புது பேருந்து நிலையத்தை சென்றடைந்தேன். அங்கு இரவு முழுவதும் உறங்கிவிட்டு காலையில் எழுந்து பயணித்து சொந்த ஊரை அடைந்தேன்” என்றார்.

”நான் சென்னையிலிருந்து கிளம்பியது முதலே என் மனைவி விடாது போன் செய்து கொண்டே இருந்தார். அவரது போனை நான் எடுக்கவில்லை. எடுத்தால் திரும்பி வர சொல்லுவார். மனைவியிடம் இருந்து 75 மிஸ்டு கால் இருந்தது” என்று கூறிய பாண்டியன், இன்னும் நம்ம ஊரில் நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள். மனிதநேயம் உள்ளது என்று வழிநெடுகிலும் கிடைத்த உதவியைக் குறிப்பிட்டு மகிழ்ச்சி தெரிவித்தார்.

ஜூலை 1ஆம் தேதி பாண்டியன் சொந்த கிராமத்தை சென்றடைந்தாலும், கிராமத்துக்குள்ளோ, வீட்டுக்கோ போகவில்லை. மற்றவர்கள் நலன் கருதியும், அரசு விதிமுறைகளைப் பின்பற்றும் வகையிலும், ஊர் எல்லையில் இருக்கும் சுடலைமாட சுவாமி கோயிலில் தன்னை 15 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டார். ஜூலை 1 முதல் 15ஆம் தேதி வரை சுய தனிமைப்படுத்தலிலிருந்த அவருக்கு, அவரது உறவினர் ஒருவர் கட்டில் மற்றும் சாப்பாடு கொடுத்து உதவியிருக்கிறார். 15 நாட்கள் தனிமைப்படுத்தல் முடிந்து நேற்று தனது வீட்டுக்கு சென்றுள்ளார் பாண்டியன்.

நன்றி : தி இந்து

கவிபிரியா

வெள்ளி, 17 ஜூலை 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon