மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 20 செப் 2020

கந்த சஷ்டி கவசம் சர்ச்சை: சுரேந்திரன் கைது!

கந்த சஷ்டி கவசம் சர்ச்சை: சுரேந்திரன் கைது!

கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், மற்றொருவர் புதுச்சேரி காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரையும் புதுச்சேரி சென்று சென்னை போலீஸ் கைது செய்துள்ளது.

கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறாகச் சித்தரித்து வீடியோ வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வீடியோவை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக உள்ளிட்ட கட்சிகள் அழுத்தம் கொடுத்தன. தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் அக்கட்சியினர் முருகன் படத்துடன் தங்களது வீடுகளுக்கு முன்பு இன்று (ஜூலை 16) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“கறுப்பர் கூட்டம் சேனலுக்கு தடைவிதிக்க வேண்டும். அதில் உள்ள அனைத்து காணொளிகளையும் நீக்க வேண்டும்” என்று எல்.முருகன் வலியுறுத்தியிருந்தார். இதனிடையே யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பியதாக வேளச்சேரியைச் சேர்ந்த செந்தில் வாசனை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நேற்று இரவு கைது செய்தனர்.

இந்நிலையில் கறுப்பர் கூட்டம் சேனலை சேர்ந்த சுரேந்திரன் நடராஜனை, கந்த சஷ்டி கவசம் சர்ச்சை விவகாரத்தில் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வலுத்தது. சுரேந்திரன் தலைமறைவாக இருந்து வந்ததாகக் கூறப்பட்ட நிலையில் தற்போது தாமாக வந்து சரணடைந்துள்ளார். புதுச்சேரி அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் இன்று மதியம் சரணடைந்த அவரை சென்னை காவல் துறை புதுச்சேரி சென்று கைது செய்துள்ளது.

முன்னதாக சுரேந்திரன் நடராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-கவிபிரியா

வியாழன், 16 ஜூலை 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon