wஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க மறுப்பு!

public

ஆன்லைன் வகுப்புகளுக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில், ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளும் போது ஆபாச இணையதளங்களால் மாணவர்களுக்குக் கவனச் சிதறல் ஏற்படும். எனவே ஆன்லைன் வகுப்புகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று சென்னையைச் சேர்ந்த சரண்யா என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

அதுபோன்று, விமல் மோகன் என்பவர், ஆன்லைன் வகுப்புகளால் தொடர்ந்து லேப் டாப் மற்றும் கணினியை பார்ப்பதன் மூலம் மாணவர்களுக்குக் கண்களில் பாதிப்பு ஏற்படும். எனவே 1-5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பை தடை செய்ய வேண்டும். 6-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு மணி நேரம் மட்டும் பாடம் நடத்த உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இந்த வழக்கில் அரசு கண் மருத்துவமனை டீன் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்த போது அறிக்கை தாக்கல் செய்ய அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், மனுதாரர்கள் சார்பில் இன்றும், கண் மருத்துவமனை டீன் அறிக்கை தாக்கல் செய்யவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டது.

மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் சங்கரநாராயணன், ஆன்லைன் வகுப்புகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக மத்திய அரசு வரும் ஜூலை 15ஆம் தேதிக்குள் புதிய வழிமுறைகளை வெளியிடவுள்ளது என்று தெரிவித்தார்.

இதை விசாரித்த நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா, ஆன்லைன் வகுப்புகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுப்புத் தெரிவித்ததோடு வழக்கு விசாரணையை வரும் ஜூலை 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

**-கவிபிரியா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *