என்.எல்.சி விபத்து: பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?

public

கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள என்.எல்.சி நிறுவனத்திலுள்ள அனல் மின் நிலையத்தில் நேற்று முன்தினம் பாய்லர் வெடித்த விபத்தில் ஆறு ஒப்பந்தத் தொழிலாளிகள் இறந்தனர். 17 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தச் சம்பவத்தை அடுத்து என்.எல்.சியை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்ட இறந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் தொழிலாளர்கள், ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதியும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பாக என்.எல்.சி தரப்புக்கும் தொழிலாளர்கள் தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

என்.எல்.சி சேர்மன் ராஜேஷ்குமாருடன் தொழிலாளர்கள் சார்பில் சிஐடியு, தொமுச பிரதிநிதிகள் மற்றும் நெய்வேலி தொகுதி எம்.எல்.ஏ சபா ராஜேந்திரன், திட்டக்குடி தொகுதி எம்.எல்.ஏ கணேசன், புவனகிரி தொகுதி எம்.எல்.ஏ சரவணன், கடலூர் எம்.பி ரமேஷ் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

நேற்று முன்தினம் மாலை 7 மணியிலிருந்து இரவு 10.45 வரையில் பேச்சுவார்த்தை நடந்தது. சேர்மனுக்கு ஆங்கிலமும், இந்தியும் மட்டுமே தெரியும் என்பதால் உள்ளே சென்ற பிரதிநிதிகள் தங்களின் கோரிக்கையை அவருக்கு எடுத்துச் சொல்ல தடுமாறினர். உடனே சேர்மன், “நீங்கள் தமிழில் பேசுங்கள், எங்கள் ஜி.எம் எனக்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்வார்” என்றார்.

உடனே எம்.எல்.ஏ சபா.ராஜேந்திரன் ஆங்கிலத்தில் பேசி சூழ்நிலையை விளக்கினார். “கடந்த மே 7ஆம் தேதி நடந்த விபத்தின்போதே, ஏன் இப்படி ஒரு விபத்து நடந்தது… இனி விபத்தில்லாமல் கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள் என்றோம். நீங்களும் இனிமேல் இப்படி ஒரு விபத்து நடக்காது என்று உத்தரவாதம் கொடுத்தீர்கள். ஆனால், 55 நாட்களில் மீண்டும் அதே அனல் மின் நிலையத்தில் பக்கத்து யூனிட்டில் உள்ள பாய்லர் வெடித்துள்ளது. இதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள்” என்று கூறினார்.

தொடர்ந்து, ஒரு கோடி ரூபாய் நிவாரணமும் குடும்பத்துக்கு ஒருவருக்கு வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. எனினும், சேர்மன் ராஜேஷ்குமார், “அவ்வளவு ரூபாய் கொடுக்க எனக்கு அதிகாரம் இல்ல. மே மாதம் விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும், 25 லட்சம் பணமும் கொடுத்ததுபோல் கொடுக்க ஏற்பாடுகள் செய்கிறோம்” என்று உறுதியளித்துள்ளார்.

தொடர்ந்து, “ஷட்டவுன் செய்திருந்த நிலையில் எப்படி திடீரென எந்திரம் இயங்கியது. பதவிக்கு ஆசைப்பட்டு வரக்கூடிய ஜி.எம்கள் (பொது மேலாளர்கள்) போட்டிப்போட்டுக் கொண்டு மின் உற்பத்தியைச் செய்வதால் சரியான பராமரிப்புகள் இல்லாமல் இப்படி விபத்துகள் ஏற்பட்டுள்ளது” என்று எம்.எல்.ஏ.க்கள் குற்றம்சாட்டினர்.

குடும்பத்துக்கு ஒருவருக்கு வேலை கொடுத்துவிடுவீர்கள். ஆனால், நிதியைக் குறைக்காமல் சொன்ன நிதியை அளிக்க வேண்டும் என்ற எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கைக்கு, “டெல்லியில் உள்ளவர்களிடம் கேட்டுச் சொல்கிறேன்” என்று அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று (ஜூலை 2) நடந்த பேச்சுவார்த்தையில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு 30 லட்சம் நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை வாய்ப்பும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா 5 லட்சம் கொடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய என்.எல்.சி ஊழியர் ஒருவர், “உயிர் பலியானதற்குப் பிறகு கோடிக்கணக்கில் நிவாரணத் தொகைக்குச் செலவிடும் என்.எல்.சி உயரதிகாரிகள், அந்தக் கோடிகளில் பாதியைச் செலவிட்டுச் சரியான பராமரிப்புகள் செய்தால் நிவாரணமும் கொடுக்க வேண்டாம். தொழிலாளிகளின் உயிரையும் பலி கொடுக்க வேண்டாமே” என்று கேட்கிறார்.

**-எம்.பி.காசி, எழில்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *