மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 29 நவ 2020

நவம்பர் வரை ஊரடங்கு... கோடிட்டுக் காட்டும் மோடி

நவம்பர் வரை ஊரடங்கு... கோடிட்டுக் காட்டும் மோடி

மத்திய அரசின் இலவச அரிசி வழங்கும் திட்டம், நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படுகிறது என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதன் மூலம் கொரோனா ஊரடங்கு முற்று முழுதாக முடிய நவம்பர் மாதம் வரை ஆகிவிடும் என்பதை சூசகமாக தெரிவித்துள்ளார் பிரதமர்.

இன்று (ஜூன் 30) மாலை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார். கொரோனா காலத்தில் நாட்டு மக்களுக்கு பிரதமர் ஆற்றும் ஆறாவது உரை இது.

இந்திமொழியில் உரையாற்றிய பிரதமர் மோடி, “கொரோனா வைரஸுக்கு எதிரான போரில், நாம் இப்போது அன்லாக் 2 காலகட்டத்துக்குள் நுழைந்திருக்கிறோம். மேலும் சளி, காய்ச்சல் பொதுவாகவே அதிகம் வருகிற காலகட்டம் இது. அதனால் நாம் கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உலக நாடுகளில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள இறப்பு விகிதத்தை விட நமது நாட்டில் குறைவுதான். நாம் முன்கூட்டியே லாக் டவுனை அறிவித்து செயல்படுத்தியதால்தான் இது சாத்தியமானது” என்று குறிப்பிட்ட பிரதமர் தொடர்ந்தார்.

பிரேசில் நாட்டில் மாஸ்க் அணியாமல் இருந்ததற்காக பிரதமருக்கே கூட அபராதம் விதித்தார்கள். அந்நாட்டின் பெயர் குறிப்பிடாமல் இத்தகவலைச் சொன்ன பிரதமர் மோடி, “பிரதமர் ஆனாலும் சாதாரண குடிமகனாக இருந்தாலும் நம் நாட்டில் அனைவரும் சுகாதாரமாகவும் முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.

நாட்டில் ஊரடங்கு காலத்தில் யாரும் பசியோடு தூங்க செல்லக் கூடாது என்பதற்கான முழு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட உடனேயே அரசு பிரதம மந்திரி கரீப் கல்யாண் யோஜனா என்ற திட்டத்தை அறிவித்தது. இதன் மூலம் ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களில் 31 ஆயிரம் கோடி ரூபாய் மக்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக செலுத்தப்பட்டுள்ளன. அடுத்த ஐந்து மாதங்களுக்கு மத்திய அரசு வழங்கும் இலவச அரிசி, கோதுமை திட்டம் தொடரும். இதன் மூலம் 80 கோடி மக்கள் பயன்பெறுவார்கள்” என்று கூறினார் மோடி.

"பருவ மழை தொடங்கும் நேரம் பண்டிகைகளும் தொடங்கும் காலம். இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டுதான் இலவச உணவு தானியத் திட்டம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. நான் மீண்டும் மீண்டும் உங்களிடம் கேட்டுக்கொள்வது அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு பாதுகாப்பாக இருங்கள். சமூக இடைவெளியை பின்பற்றுதல், மாஸ்க் அணிதல் போன்றவற்றில் உறுதியாக இருங்கள்” என்று வேண்டுகோள் விடுத்தார் பிரதமர் மோடி.

-வேந்தன்

செவ்வாய், 30 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon