மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 25 அக் 2020

விடிய விடிய தாக்குதல், லத்தியில் ரத்தக் கறை: நீதிபதி அறிக்கை!

விடிய விடிய தாக்குதல், லத்தியில் ரத்தக் கறை: நீதிபதி அறிக்கை!

ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் விடிய விடிய தாக்கப்பட்டது நீதிபதியின் அறிக்கை மூலம் வெளிவந்துள்ளது.

சாத்தான்குளத்தில் காவல் துறை விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட செல்போன் கடை உரிமையாளர்கள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் காவல் துறை தாக்குதலால் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மாஜிஸ்திரேட் பாரதிதாசன் நேற்று முன் தினம் விசாரணை நடத்தினார். எனினும், தனக்கு தகுந்த ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும், ஒருமையில் பேசியதாகவும் நீதிபதி புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில் நீதிபதி பாரதிதாசன் தாக்கல் செய்துள்ள விசாரணை அறிக்கையில் பல்வேறு அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்துள்ளன.

நீதிபதியை மிரட்டிய ஏஎஸ்பி

அறிக்கையில், “ஜூன் 28ஆம் தேதி விசாரணைக்காக சாத்தான்குளம் காவல் நிலையத்திற்குள் 12.45 மணிக்குச் சென்றேன். காவல் நிலையத்தில் பொறுப்பில் இருந்த ஏஎஸ்பி டி.குமார், டிஎஸ்பி பிரதாபன் ஆகியோர் ஆய்வாளர் அறையில் இருந்த நேரத்தில் உள்ளே நுழைந்தேன். அந்த சமயம் இருவரும் எந்த வரவேற்பு அறிகுறியும் இல்லாமல், ஒருமுறை கூட முறையான வணக்கம் செலுத்தாமல் அலட்சிய மனப்பான்மையுடன், பொறுப்பற்ற தன்மையுடன் நின்று கொண்டு இருந்தனர்.

உயர் நீதிமன்ற மதுரை கிளை இவ்வழக்கை கவனித்து வருகிறது என்னும் போதிலும் ஏஎஸ்பி குமார் ஒரு மிரட்டும் தொனியிலான பார்வையுடனும் உடல் அசைவுகளுடன் இருந்தார். பொது நாட்குறிப்பேடு மற்றும் இதரப் பதிவுகளைக் கேட்டபோது அவற்றை சமர்பிக்க முறையான நடவடிக்கை எடுக்காமல் குமார், காவல் நிலைய காவலர்களை ஒருமையில் ஏ- அதக் கொண்டு வா, இதக் கொண்டு வா என அதட்டும் தோணியில் கூறிக்கொண்டு அங்கேயே நின்றிருந்தார். பின்னர், அவர்கள் வெளியே இருக்க பணிக்கப்பட்டனர்” என்று குறிப்பிட்டார்.

அழிக்கப்பட்ட சிசிடிவி பதிவுகள்

நான் நண்பகல் 1 மணியளவில் விசாரணையை துவக்கினேன். வழக்கு சம்பந்தப்பட்ட குறிப்புகள், பதிவேடுகள் மற்றும் கோப்புகளை கொஞ்சம் தாமதமான நிலையிலேயே கொண்டுவரப்பட்டு, ஆய்வுகள் செய்யப்பட்டன என்று கூறப்பட்டுள்ள அந்த அறிக்கையில், “சம்பவத்தின் நேரடி சாட்சியமான காவல் நிலைய கண்காணிப்பு கேமராவில் சம்பந்தப்பட்ட பதிவுகளை பதிவிறக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சிசிடிவின் ஹார்டு டிஸ்க் ஆய்வு செய்யப்பட்டது. அதில் போதுமான இடம் இருந்தபோதிலும், பதிவுகள் தினமும் தாமாகவே அழிந்துபோகும் அளவிற்கு செட்டிங் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. சம்பவ நாளான ஜூன் 19ஆம் தேதி முதலான எந்த காணொலி பதிவுகளும் கணினியில் இல்லை. அவை அழிக்கப்பட்ட நிலையில் இருந்தன. முக்கிய நேரடி சாட்சியமான அதன் தரவுகளை பதிவிறக்கம் செய்ய அது என்னால் கைப்பற்றப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது” என்ற தகவலையும் தெரிவித்துள்ளார்.

தலைமைக் காவலரின் முக்கிய சாட்சியம்

தொடர்ந்து, “தலைமைக் காவலர் ரேவதியிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. அப்போது ரேவதி மிகுந்த பயத்துடனும் தான் உண்மைகள் அனைத்தையும் சாட்சியாக சொல்வதை வெளியில் சொல்ல வேண்டாம் என்றும் தான் சாட்சியம் அளித்ததை வெளியில் உள்ளவர்கள் கேட்டுக் கொண்டிருப்பார்கள் என்றும் பயந்தார். அதன்பேரில் நீதிமன்ற ஊழியர்கள் பாதுகாப்பிற்காக வெளியில் நிறுத்தப்பட்டிருந்தனர். சாட்சியம் அளித்தால் தனக்கு மிரட்டல் வரும் என்று மிகுந்த பயத்துடன் காணப்பட்டார்.

ரேவதி தனது வாக்குமூலத்தில் கைதிகள் இருவரையும் அங்கிருந்த காவலர்கள் விடிய விடிய லத்தியால் அடித்ததாகவும் அதில் லத்தி மற்றும் டேபிள் ஆகிய இடங்களில் ரத்தக்கறை படிந்து உள்ளதாகவும் அதனை அவர்கள் அழிக்க நேரிடும் என்றும் அவற்றை உடனடியாக கைப்பற்ற வேண்டும்என்றும் கூறினார்” என்றும் நீதிபதியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தப்பி ஓடிய காவலர்

சாட்சி கூறிய லத்திகளை கைப்பற்றும் பொருட்டு அங்கிருந்த காவலர்களை லத்திகளை கொடுக்கும்படி கூறியும் அவர்கள் காதில் ஏதும் இல்லாதது போல இருந்தார்கள். பிறகு கட்டாயத்தின் பெயரில் அனைவரும் லத்தியை ஒப்படைத்து விட்டார்கள். மேலும் அதில் மஹாராஜன் என்பவர் என்னை பார்த்து, ‘உன்னால் ஒன்றும் புடுங்க முடியாதுடா’ என்று என் முதுகுக்குப் பின்னால் என் காதில் விழும்படி பேசி அங்கு ஒரு அசாதாரண சூழ்நிலையை உருவாக்கினார். மேலும் முதலில் அவரது லத்தியை சொந்த ஊரில் உள்ளது என்றும் பிறகு அவரது போலீஸ் குடியிருப்பில் உள்ளது என்றும் கூறினார். மேலும், அனைத்து பக்கங்களில் நடந்துகொண்டு ஒத்துழைக்க மறுத்ததோடு, இரு வரேன் என்று ஒருமையில் சொல்லி பின் லத்தியே தனக்கு இல்லை என்று கூறி நின்று கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ள நீதிபதி,

இதனால் அவரின் மீது கை வைத்து தள்ளி அழைத்துச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மேலும் அங்கிருந்த காவலர்களில் ஒருவரிடம் லத்தி கேட்டபோது அவர் எகிறி குதித்து தப்பி ஓடிச் சென்று விட்டார். இவை அனைத்தையும் அங்கிருந்த காவலர்கள் வீடியோ எடுத்தனர்.

இந்நிலையில் சூழல் சரியில்லாத நிலையில் அங்கிருந்து கிளம்ப நேரிடும் போதும் கூட சாட்சியமளித்த ரேவதி கையெழுத்திட மறுத்து விட்டார். வெகு நேரத்திற்குப் பின்னர் அவரிடம் பாதுகாப்பு குறித்து உறுதியளித்த பின் அவர் வாக்குமூலத்தில் கையெழுத்து பெறப்பட்டு அங்கு நிலைமை பாதுகாப்பானதாக இல்லாததாலும் போலீசார் ஆங்காங்கே சூழ்ந்து கொண்டு நடக்கும் நிகழ்வுகளை தனது செல்போனில் பதிவு செய்து கொண்டும் நீதிமன்ற ஊழியர்களை மிரட்டி கொண்டும் இருந்தனர். இதனால் அங்கிருந்து புறப்பட்டோம் என்று கூறியுள்ளார்.

எழில்

செவ்வாய், 30 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon