மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 25 அக் 2020

தந்தை, மகன் உடலில் அதிகமான காயங்கள்: நீதிமன்றம்!

தந்தை, மகன் உடலில் அதிகமான காயங்கள்: நீதிமன்றம்!

காவல் துறையினர் மீது வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் உள்ளதாக உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட வணிகர்கள் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல் துறையினர் தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வைத்து விசாரித்து வருகிறது.

இவ்வழக்கு நீதிபதி பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வு முன்பு இன்று (ஜூன் 30) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, உயிரிழந்த இருவரின் முதல் நிலை பிரேத பரிசோதனை அறிக்கை, நீதித் துறை நடுவரின் அறிக்கை மின்னஞ்சல் வழியாக சமர்பிக்கப்பட்டதாக தெரிவித்த நீதிபதிகள், “இறந்த இருவரின் உடல்களிலும் அதிகமான காயங்கள் இருந்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதன் அடிப்படையில் காவல் துறையினர் மீது வழக்குப் பதிவு செய்ய போதிய முகாந்திரம் உள்ளது.” என்றும் குறிப்பிட்டனர்.

சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு

காவல் துறையினர் அனைவரும் மோசமானவர்கள் இல்லை எனவும் ஒருசிலரின் நடவடிக்கைகளால் இதுபோன்ற பிம்பம் ஏற்பட்டுவிடுகிறது என்ற நீதிபதிகள், “பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் நீதியை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள். ஆகவே, ஒரு நொடி கூட தாமதிக்கக் கூடாது. சிபிஐ இந்த வழக்கின் விசாரணையை துவங்கும் வரை நெல்லை சரக ஐஜி இந்த விசாரணையை ஏற்க இயலுமா அல்லது நெல்லை சிபிசிஐடி விசாரணை நடத்த முடியுமா?. ஏனெனில் சிபிஐ முறையான அனுமதி பெற்று விசாரணையை துவங்குவதற்குள் தடயங்கள் அழிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன” என்று குறிப்பிட்டனர். இதுதொடர்பாக 12 மணிக்கு விளக்கம் அளிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்ட நிலையில், அரசு தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, சாத்தான்குளம் வழக்கை சிபிஐ கையில் எடுக்கும் வரை சிபிசிஐடி போலீசார் வழக்கை விசாரிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கை விசாரிக்க சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நீதிபதியை ‘ஒன்னும் புடுங்க முடியாது’ என்று திட்டிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று உயர் நீதிமன்றக் கிளையில் ஆஜரான ஏஎஸ்பி, டிஎஸ்பி, காவலர் மகாராஜன் ஆகியோர் கதறி அழுததாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எழில்

மன அழுத்தத்தில் மாஜிஸ்திரேட்டை திட்டியிருக்கலாம்: அரசு விளக்கம்!

“உன்னால ஒண்ணும் புடுங்க முடியாதுடா”: நீதிபதியையே மிரட்டிய சாத்தான்குளம் போலீஸ்!

செவ்வாய், 30 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon