மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 25 அக் 2020

தென் மாவட்டங்கள்: சர்ச்சைக்கு மத்தியில் ஒரு சந்தோஷம்!

தென் மாவட்டங்கள்: சர்ச்சைக்கு மத்தியில் ஒரு சந்தோஷம்!

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு அதன் பின் சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷன் கொலைகள், நீதிபதிகளுக்கே மிரட்டல் என்று தெக்கத்தி திசையில் இருந்து சர்ச்சை செய்திகளாகவே வந்துகொண்டிருக்கும் நிலையில், ஒரு சந்தோஷ செய்தியும் தெற்கை மையமாக வைத்து வடக்கில் இருந்து வெளியாகியுள்ளது.

இந்தியாவின் தெற்கு கோடியில் இருக்கும் தூத்துக்குடி விமான நிலையத்தில் இனி விமானங்கள் இரவிலும் தரையிறங்கலாம், புறப்படலாம் என்று மத்திய விமான நிலைய ஆணையம் நேற்று (ஜூன் 29) அறிவித்துள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்ட மக்கள் மட்டுமின்றி தென் மாவட்ட மக்களும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

சமீபத்தில் நான்காம் நிலையில் இருந்து மூன்றாம் நிலைக்கு தரமுயர்த்தப்பட்ட தூத்துக்குடி விமான நிலையம் அடுத்த கட்ட முன்னேற்றத்தை அடைந்துள்ளது. இதுபற்றி திமுக மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி தனது ட்விட்டர் பதிவில், “ தூத்துக்குடி விமான நிலையம் இரவு, பகல் என முழு நேரமும் இயங்குவதற்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக பல முறை மத்திய அமைச்சரிடம் நேரிலும், கடிதம் மூலமாகவும் வலியுறுத்தியிருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

விமான நிலையம் அமைந்திருக்கும் தொகுதியின் மக்களவை உறுப்பினர் அந்தந்த விமான நிலைய ஆலோசனைக் குழுவுக்கு தலைவராக இருப்பார் என்பது மத்திய அரசின் கொள்கை. அதன்படி தூத்துக்குடி விமான நிலைய ஆலோசனைக் குழுவின் தலைவர் ஆன கனிமொழி எம்பி. விமான நிலைய தரமுயர்த்தல், விரிவாக்கப் பணிகளில் மேலும் தீவிரமாகவும் வீரியமாகவும் இறங்கினார். மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரிக்கு இது தொடர்பாக கடந்த வருடம் ஜூலை 12, இந்த வருடம் மார்ச் 13 ஆகிய தேதிகளில் கடிதங்களும் எழுதியிருக்கிறார்.

அக்கடிதத்தில், “1992 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையம் 1350 சதுர மீட்டர் நீளமும், 30 மீட்டர் அகலமும் கொண்டது. இந்தப் பரப்புக்குள் அமைக்கப்பட்டுள்ள ஓடுதளம் சிறிதாக இருப்பதால் சிறிய விமானங்களே இந்த விமான நிலையத்தில் வந்து செல்ல முடிகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு இரவு நேரத்தில் விமானங்கள் தரையிறங்கவும், சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தவும் உட்கட்டமைப்பு விரிவாக்கம் செய்ய அனுமதியளிக்க வேண்டும். இதன் மூலம் தமிழ்நாட்டின் திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பெரும் பயனளிக்கும். தென் தமிழகத்தைச் சேர்ந்த வணிகர்களுக்கு இலங்கை, மாலத்தீவு, மலேசியா, சிங்கப்பூர், வளைகுடா நாடுகளுடனான வணிகப் பரிவர்த்தனைகளை மேம்படுத்த உதவும். மேலும் சுற்றுலா பயணிகளுக்கும் தூத்துக்குடி விமான நிலையம் தரமுயர்தல் அதிக பலன்களைத் தரும். இதனால் நாட்டின் பொருளாதாரம் உயரும்” என்று குறிப்பிட்டிருந்தார். கடிதத்தோடு நேரில் சந்தித்தும் கோரிக்கைகள் வைத்தார்.

இந்த நிலையில்தான் திமுக எம்பியின் கோரிக்கையின் முதல் கட்டத்தை நிறைவேற்றி வைத்திருக்கிறது மத்திய அரசு.

-வேந்தன்

செவ்வாய், 30 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon