மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 22 ஜன 2021

மனிதர்கள் எண்ணிக்கை விட கதைகள் அதிகம்: எஸ்.ராமகிருஷ்ணன்

மனிதர்கள் எண்ணிக்கை விட கதைகள் அதிகம்: எஸ்.ராமகிருஷ்ணன்வெற்றிநடை போடும் தமிழகம்

மழைக்காலங்களின் காலை நேரங்கள் அலாதியானவை. அந்தக் கதகதப்பையும் விநோத மனநிலையையும் தனக்குள் பொதித்து வைத்திருப்பவை எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துகள். விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணற்றைச் சேர்ந்த எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள், 80களில் தனது எழுத்துப் பயணத்தைத் தொடங்கியவர். இவரது முதல் கதை ‘பழைய தண்டவாளம்’ கணையாழியில் வெளியானது. அதைத் தொடர்ந்து, தீவிரமாக எழுதத் தொடங்கிய இவர், புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள், குழந்தைகளுக்கான ஆக்கங்கள், பயணம், உலக சினிமா குறித்த அறிமுகம், திரைக்கதை எனப் பல தளங்களிலும் தனது எழுத்தை விஸ்தரித்துக்கொண்டே இருப்பவர். கரிசல் இலக்கியத்தின் மரபில் வந்தவரான எஸ்.ராமகிருஷ்ணன் உபபாண்டவம், சஞ்சாரம், யாமம், உறுபசி என முக்கியமான புதினங்களையும் பல சிறுகதைகளையும் படைத்துள்ளார். எளிமையும் மொழியின் நுண்ணுணர்வும் கொண்ட படைப்புகளைப் படைத்தவர், சஞ்சாரம் எனும் நூலுக்காக 2018ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார்.

நம் மின்னம்பலம் வாசகர்களுக்காக மின்னஞ்சல் வழியே எஸ்.ராமகிருஷ்ணனிடம் உரையாடினோம்.

கொரோனாவில் அதிக பாதிப்புக்குள்ளானது நம் மனித இனம்தான். வரலாறு முழுக்கவே நமது இனம் வைரஸ் நோயால் அழிந்தும், மீண்டெழுந்தும் வந்துகொண்டிருக்கிறது. இந்த நேரத்தில், வரலாற்றில் முக்கியமான பெருந்தொற்றுகளிலிருந்து மீண்ட மனித இனம், அதன் பின்னர் வரலாற்று ரீதியாக எவ்வாறு தன் வாழ்க்கையை மீட்டெடுத்தது? பெருந்தொற்றுக்குப் பிறகான மனித வாழ்க்கை எவ்வாறு மீண்டும் இயங்கும் என நினைக்கிறீர்கள்?

மனித குல வரலாறு என்பது போராட்டங்களால் உருவானது. எந்த வளர்ச்சியும் எளிதாக நடந்துவிடவில்லை. இயற்கை சீற்றம், பெருந்தொற்று, போர் என மனிதர்கள் கணக்கில்லாமல் அழிந்து போயிருக்கிறார்கள். ஆனால், இந்த வீழ்ச்சியிலிருந்து மனிதர்கள் மிகப்பெரும் பலம்கொண்டு மீண்டு எழுந்து வந்ததே வரலாறு. நம்பிக்கைதான் மனிதனின் பெரும்பலம். விலங்குகளுக்கு நம்பிக்கை அவநம்பிக்கை கிடையாது. நாளையப் பற்றிய கனவுகள் கிடையாது. அது மனிதனின் தனித்துவம். வீழ்ச்சி மனிதர்களை முடக்கக் கூடும். ஆனால் மனித நம்பிக்கைகளை அழித்துவிட முடியாது. ஓடுவது தண்ணீரின் இயல்பு. மனிதர்களும் அப்படி முன்னேறிக்கொண்டே தானிருப்பார்கள். மனிதனுக்கும் வேர்கள் இருக்கின்றன. அது பூமியினுள் அரூபமாக வேர்விட்டுள்ளன. அந்தப் பிடிமானம் எளிதானதில்லை. மனிதர்கள் நெருக்கடியிலிருந்து பாடம் கற்றுக் கொள்வார்கள். புதிய வழிகளை, நடைமுறைகளை, நம்பிக்கைகளை உருவாக்கிக் கொள்வார்கள். அதுதான் பிளேக் காலத்தில் நடந்தது. அதுதான் உலகப்போரின் பின்னால் நடந்தது. வரலாறு காட்டும் உண்மை இதுவே.

14ஆம் நூற்றாண்டில் பிளேக் நோயினால் சீரழிந்த இத்தாலியின் ஃபிளாரென்ஸ் நகரில் இருந்து பிறந்த ‘டெக்கமரான்’ கதைகள் போல, நமது நாட்டுப்புறக் கதைகளிலும் கொள்ளை நோய்கள் பற்றிய பதிவுகள் உள்ளனவா? அவ்வாறு இருப்பின் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?

பிளேக் நோயின் பாதிப்பிலிருந்து டெக்கமரான் கதைகள் மட்டும் பிறக்கவில்லை. பல்லாயிரக்கணக்கில் நாட்டுப்புறக் கதைகள் உலகமெங்கும் உருவாகின.

புதிய சடங்குகள், கடவுள்கள் உருவானார்கள். டிராகுலா நாவலில் டிராகுலா எலிகளைக் கூட்டமாக அழைத்துக் கொண்டு லண்டன் மாநகருக்கு வருகிறான். அது பிளேக் நோயின் அடையாளம். டேனியல் டீபோ ஜேர்னல் ஆப் பிளேக் இயர் எழுதியிருக்கிறார். அது முக்கியமான படைப்பு. குஜராத்தியில் பன்னாலால் படேல் எழுதிய நாவலில் கொள்ளை நோயின் தாக்கம் விரிவாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஏ.கே.ராமானுஜன் தொகுத்த இந்திய நாட்டுப்புறக் கதைகள் தொகுப்பில் பிளேக் பற்றிய கதைகள் உள்ளன. பிளேக் மாரியம்மன் நம் ஊரில் உருவானது இதன் தொடர்ச்சி தானே. நானே யாமம் நாவலில் சென்னையை கொள்ளை நோய் தாக்கிய நிகழ்வைப் பதிவு செய்திருக்கிறேன்.

நாளை என்ற ஒன்றின் மீதான நிச்சயமற்றதன்மையோடு நகரங்களில் இருந்து வெளியேறிய புலம்பெயர்ந்தோரின் நிலை குறித்து எழுத்தாளராக உங்களது மனநிலை என்ன?

சாலைகளில் நடந்தே சொந்த ஊர் திரும்பும் புலம்பெயர் தொழிலாளிகளின் துயரக்காட்சிகள் கண்ணீர் வரவழைத்தன. அது ஆறாவடு.

நிர்கதியான அந்த முகங்கள் எங்கள் உழைப்பை சுரண்டிவிட்டு எங்களை ஏன் கைவிட்டீர்கள் என்ற கேள்வியை எழுப்புகிறது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மறு வாழ்க்கை, புதிய வேலை கிடைக்க வேண்டும். அவர்களின் கண்ணீரின் சூடு இந்திய மக்களின் மனசாட்சியை உலுக்குகிறது.

ஒரு 'தேசாந்திரி'யாக தற்போது உங்கள் அக உலகை நிரப்பும் நிலப்பரப்பு எது? இந்த பெருந்தொற்றுக்குப் பின் தாங்கள் செல்ல விரும்பும் முதல் இடம் எது?

தேசாந்திரியாக ஊர் சுற்றி திரிந்த நான் தற்போது நினைவுகளில் சஞ்சாரம் செய்கிறேன். அகத்தினுள் பயணிப்பதும் பயணம் தானே. பழைய சினிமா பாடல்களின் வழியே பள்ளி கல்லூரி நாட்களுக்குப் போய்விடுகிறேன். நினைவுதான் முடிவில்லாத நிலப்பரப்பு. பறவைகள் வானில் பறந்தாலும் அங்கேயே தங்கிவிடுவதில்லை. தனது கூடு திரும்பிவிடுகின்றன. அப்படி தான் வீடும். ஊரடங்கு ஒவ்வொரு மனிதனையும் வீட்டின் முக்கியத்துவத்தைப் புரிய வைத்திருக்கிறது. வீடு என்பது நான்கு பெருங்கரங்கள் நம்மை அணைத்துக் கொள்வதைப் போலிருக்கிறது. லாக் டவுன் முடிந்த பிறகு நான் போக விரும்பும் இடம் ஹம்பி. எப்போதும் அந்த நிலம் ஒரு கனவு வெளி போலவே இருக்கிறது.

தீவிர வாசகரான நீங்கள் இந்த ஊரடங்கு காலத்தில் வாசித்த நூல்கள் என்னென்ன? அவற்றை வாசகர்களுக்கும் அறிமுகம் செய்து வைக்க முடியுமா?

ஊரடங்கு நாட்களில் அதிகமும் வாழ்க்கை வரலாற்று நூல்களையும் கவிதைகளையும் வாசித்தேன். இரண்டும் மனத்துக்கு மிகுந்த நெருக்கம் தந்தன. குறிப்பாக சீனாவின் புகழ்பெற்ற கவிஞர் லீபெய்யின் வாழ்க்கை வரலாற்றை வாசித்தேன். அரசாங்க வேலை தேடி லீபெய் அலைந்து திரிந்து தோற்றுப் போகிறார். அங்கீகாரம் இல்லாத வாழ்க்கை என்பது எவ்வளவு பெரிய துயரம் என்பதை முழுமையாக அந்த நூல் புரிய வைத்தது. ஜி.டி நாயுடுவின் உலகப்பயணம் பற்றிய புத்தகம் ஒன்றை வாசித்தேன். எத்தனை நாடுகள் சென்றிருக்கிறார். எவ்வளவு பரந்த அனுபவம் பெற்றிருக்கிறார் என வியப்பாக இருந்தது.

கவிதை தொகுப்பில் கோயுன் கவிதைகள். சீனப்பழங்கவிதைகள். சமகால கொரியக் கவிதைகள். ரியோகான் கவிதைகள், பால்செலான் கவிதைகள், குறுந்தொகை நற்றிணை, ழாக் பிராவர் கவிதைகள் இவை முக்கியமானவை. மோபிடிக் நாவலை மறுவாசிப்பு செய்தேன். டால்ஸ்டாயின் புத்துயிர்ப்பு நாவலை மறுபடி படித்தேன். கு.அழகிரிசாமி கதைகளையும் ஜி.நாகராஜன் கதைகளையும் முழுவதுமாக மறுவாசிப்பு செய்துள்ளேன். ஜி.நாகராஜன் பகல்கனவு காணுவதை முக்கியமான கருப்பொருளாக கொண்டிருக்கிறார். அவரது கதாபாத்திரங்கள் பகல்கனவில் மூழ்கிகிடக்கிறார்கள். அது தஸ்தாயெவ்ஸ்கியை நினைவுபடுத்துகிறது.

தொடர்ந்து உலக சினிமாவை கவனித்து வருபவர் நீங்கள். சமகால உலக சினிமாக்களை எவ்வாறு பார்க்கிறீர்கள்? சமீபத்தில் உங்களை கவர்ந்த இயக்குநர் அல்லது சினிமா?

உலக சினிமாவின் போக்கு தற்போது மாறிவருகிறது. கதையை விடவும் சொல்லும் முறை முக்கியமாகிவிட்டது. தொழில்நுட்ப ரீதியாக மிக தரமான படங்கள் வருகின்றன. குறிப்பாக சமகால சீனப்படங்கள், துருக்கி நாட்டுப் படங்கள். ஸ்பானிஷ் படங்களை விரும்பி பார்த்து வருகிறேன்.

Nuri bilge ceylan படங்கள் மிகவும் பிடித்துள்ளன. Long days journey into night என்ற Bi Gan இயக்கிய படம் சமீபத்தில் பார்த்த முக்கியமான படம். பழைய கறுப்பு வெள்ளை படங்களைத் தொடர்ச்சியாக பார்த்து வருகிறேன். ஜான் போர்டு என்ற அமெரிக்காவின் புகழ்பெற்ற இயக்குநரின் படங்களை காணும்போது இவ்வளவு பிரமாண்டமாக சினிமாவை உருவாக்கியுள்ளாரே என வியப்பாக உள்ளது.

சமகால தமிழ் எழுத்தாளர்களில் உங்கள் நம்பிக்கைக்கு உரியவர் யார்? கவிதைகளை நோக்கிப் படையெடுத்துள்ள இளம் தலைமுறைக் கவிஞர்களில் உங்களைக் கவர்ந்தவர் யார்?

சமகால எழுத்தாளர்களில் கார்த்திகைப் பாண்டியன், நரன். லட்சுமி சரவணக்குமார், சயந்தன், தமிழ்நதி, அகரமுதல்வன், ராம் தங்கம், சுனில்கிருஷ்ணன், அசோக்குமார், ஆசை, மண்குதிரை, ஸ்டாலின் ராஜாங்கம், அழகிய பெரியவன் இவர்களை விரும்பிப் படிக்கிறேன். இளங்கவிஞர்களில் சபரிநாதன், போகன் சங்கர், சங்கர ராமசுப்ரமணியன், அனார், ரஷ்மி, சசிகலா பாபு, ராணிதிலக், கண்டராதித்தன், ஸ்ரீநேசன் ஆகியோரது கவிதைகள் பிடித்திருக்கின்றன. மூத்த கவிஞர்களில் ந.ஜெயபாஸ்கரன், சுகுமாரன், சமயவேல், சேரன், கலாப்ரியா, விக்ரமாதித்யன், கல்யாண்ஜி இவர்களைப் பிடிக்கும். என்றைக்கும் எனது நேசத்திற்குரியவர் கவிஞர் தேவதச்சன். நான் அவரது மாணவன்.

இந்த பெருந்தொற்றினால் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் குழந்தைகளின் உலகத்தை எவ்வாறு நாம் மீட்டெடுக்கப் போகிறோம்? தொழில்நுட்பத்திடம் நம் குழந்தைகளின் எதிர்காலத்தை அடகு வைத்துவிட்டோமா?

குழந்தைகள் இந்த ஊரடங்கு காரணமாக வீட்டுக்குள் அடைபட்டு கிடக்கிறார்கள். அவர்களுடன் கதைபேசவோ, விளையாடவோ துணையில்லை. ஆகவே செல்போன், கம்ப்யூட்டருடன் அதிக நேரம் செலவிடுகிறார்கள். குழந்தைகளுக்காகப் பெற்றோர்கள் கதை சொல்ல வேண்டும். புதிய விளையாட்டுகளை உருவாக்க வேண்டும். நம் கதை மரபிலிருந்து உருவாக்கபட்ட அனிமேஷன் படங்கள் தேவையாக உள்ளன.

பிபிசி தயாரிப்பில் வெளியாகியுள்ள அறிவியல் ஆவணப்படங்கள். நேஷனல் ஜியாகிராபிக் ஆவணப்படங்கள் போன்றவற்றை குழந்தைகள் அவசியம் காண வேண்டும். கதையை ஓவியமாக வரையச் செய்யலாம். புதிய மொழி ஒன்றை கற்றுக் கொள்ளலாம். குழந்தைகளுக்கென தனியே இணையதளங்கள் தேவைப்படுகின்றன. அவற்றை நாம் உருவாக்க வேண்டும்.

நோய் குறித்த அதீத அச்ச உணர்வால் மனித இனம் தனது மதிப்பீடுகளை இழந்து வருகிறதா?

அதீத அச்சம் காரணமாக ஒரு மனிதன் இன்னொரு மனிதனைக் கண்டு பயப்படுகிறான். விலகி ஓடுகிறான். வெறுக்கிறான். இது வைரஸை விட மோசமான நோய். மனிதர்கள் எந்த நிலையிலும் அன்பு செலுத்தப்பட வேண்டியவர்கள். குறிப்பாக முதியவர்கள் இந்த ஊரடங்கு காலத்தில் மிகவும் வேதனைப்படுத்தப்படுகிறார்கள். அது தவறானது. அவர்களை நாம் பாதுகாத்து அன்பு செலுத்த வேண்டும். வீட்டுப்பெண்களின் வேலைச்சுமை அதிகமாகிவிட்டது. அதை உணர்ந்து நாமும் வீட்டுப்பணிகளில் பங்குபெற வேண்டும். பாரதியின் வசன கவிதையை தினமும் பத்து முறை படியுங்கள். வாழ்வின் மீது அதீதமான பற்று உண்டாகிவிடும்.

ஏன் மனித இனம் தோன்றியதிலிருந்து இன்று வரை கதைகள் தேவையாகயிருக்கிறது? பண்பாட்டு வெளியில் கதை சொல்லிகளுக்கான பொறுப்புகள் என்னென்ன?

உலகின் முதற்கதையை சொன்ன மனிதன் ஒரு கண்டுபிடிப்பாளன். கதை என்பது ஒரு மீடியம். கதை என்பது உண்மையில் ஒரு மொழி. கனவு மொழி. விழித்தபடியே அது கனவு நிலையை உருவாக்குகிறது. கதை என்பது முடிந்து போன நிஜம். அனுபவம் என்பது இன்றைய உண்மை என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அப்படியில்லை. இன்றைய வாழ்க்கையைப் புரிந்து கொள்ள கதைகள் தேவைப்படுகின்றன. கதை பண்பாட்டின் சமூகத்தின் நினைவுகளை சேகரித்து ஆவணப்படுத்துகிறது. கதை வழியாகவே மனிதர்கள் தன்னையும் தன்னை சுற்றிய உலகையும் எளிதாகப் புரிந்து கொள்கிறார்கள். உலகில் உள்ள மனிதர்களின் எண்ணிக்கை விடவும் கதைகள் அதிகமாக உள்ளன. கடவுளும்கூட கதைகள் வழியாகவே தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார். கதைகள் மனிதர்களை நம்பிக்கை கொள்ள வைக்கின்றன. அதிகாரத்துடன் சமர் செய்ய வைக்கின்றன. வாழ்க்கையின் மீது பற்று கொள்ளச் செய்கின்றன. கதைகளுக்கு கைகால்கள் இல்லாமல் இருக்கலாம், ஆனால், இதயம் இருக்கிறது. அது துடிக்கவே செய்கிறது.

கடந்த 30 வருடங்களாக முழு நேர எழுத்தாளராக இயங்கி வருபவர் நீங்கள். தங்கள் பார்வையில் இலக்கியம் குறித்த தரிசனத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்?

இலக்கியம் பல தளங்களில் செயல்படுகிறது. பிரதானமாக அது நினைவுகளைச் சேகரம் செய்கிறது. பதப்படுத்துகிறது. ஆவணப்படுத்துகிறது. மறைக்கபட்ட, விலக்கபட்ட உண்மைகளை தேடி கண்டறிகிறது. தனிமனிதனின் துயரத்தை சமூகம் பெரிதாகப் பொருட்படுத்தாது. ஆனால் இலக்கியம் அதை முக்கியமானதாகக் கருதும்.ஆற்றுப்படுத்தும். வழிநடத்தும். வாழ்வின் எதிர்பாராமையை இலக்கியம் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறது. அறம், நீதி, ஈகை, அன்பு என மனித வாழ்வின் ஆதார விஷயங்களை அனுபவங்களின் வழியே இலக்கியம் அணுகி ஆராய்கிறது. சங்க இலக்கியம் பிரிவை முதன்மையாகப் பேசுகிறது. பிரிவு ஏன் தமிழ் சமூகத்தில் இத்தனை துயரை தருகிறது என ஆராய்கிறது. இன்றைய இலக்கியம் மெல்ல மனித வாழ்வின் ஆதாரங்களை ஆராய்வதிலிருந்து விலகி மேலோட்டமான விஷயங்களை முதன்மைப்படுத்துகிறது. சுய லாபங்களுக்காக எழுத்து பயன்படுத்தபடுகிறது. அதுவும் நுகர்வு பண்பாடு சார்ந்த விஷயங்களை அதிகம் முன்னிறுத்துகிறது.கிளாசிக் படைப்புகள் மறுபடி வாசிக்கப்படுவதன் காரணம் அதன் என்றைக்குமான மானுட விசாரணையே.

தற்போது தாங்கள் எழுதிக்கொண்டிருக்கும் புதிய படைப்புகள் பற்றி கூற முடியுமா?

இந்த ஊரடங்கு காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குறுங்கதைகள் எழுதி எனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளேன். புதிய நாவல் ஒன்றை எழுதிக் கொண்டிருக்கிறேன். காலனிய இந்தியா என வரலாற்று நூல் ஒன்றையும் எழுதி வருகிறேன். இரண்டு திரைப்படங்களுக்கும் ஒரு வெப் சீரிஸ் ஒன்றுக்கும் திரைக்கதை எழுதி வருகிறேன்.

ஊரடங்கு என்ன கற்று தந்துள்ளது?

குறைவான உடைகள். எளிய வாழ்க்கை போதுமானது. நண்பர்கள், உறவுகள் முக்கியமானது. ஆரோக்கியமான உணவும் வாழ்க்கை முறையும் கைகொள்ள வேண்டும். இயற்கையை பேண வேண்டும் என்பதை கவனப்படுத்தியிருக்கிறது. நல்ல இசை, நல்ல புத்தகம் நல்லோர்களின் உரையாடல் வாழ்க்கையை மேம்படுத்தும் என்பதை முழுமையாக உணர வைத்திருக்கிறது. முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு எனது பாட்டன் வாழ்ந்த வாழ்க்கையை போல வீடு தான் உலகம். வீதியும் ஊரும் தான் எல்லை. ஊருக்குள் கிடைக்கும் விஷயங்கள் மட்டுமே போதும் என வாழ்க்கை பின்னோக்கி திரும்பிவிட்டது போலிருக்கிறது.

வாசகர்களுக்குப் பரிந்துரைக்க விரும்பும் புத்தகங்கள், கட்டுரைகள், உலக சினிமாக்கள், இசை?

எனது பரிந்துரைப் பட்டியல்…

வைக்கம் முகமது பஷீரின் நாவல்கள், தி. ஜானகிராமன் சிறுகதைகள், மண்டோவின் சிறுகதைகள், சமகால உருதுக் கதைகள், ரேமண்ட் கார்வர் மற்றும் முரகாமியின் சிறுகதைகள் இவற்றை கண்டிப்பாக வாசிக்க வேண்டும்.

Vivaldi four seasons, Hariprasad Chourisia புல்லாங்குழல் இசை, பன்னால்கோஷ் புல்லாங்குழல் இசை, பிஸ்மில்லாகான் ஷெனாய், பண்டிட் ரவிசங்கர் சிதார், சஞ்சய் சுப்ரமணியம் கர்னாடக இசைப்பாடல்கள் இவற்றை தொடர்ச்சியாக கேட்டேன்.

Etgar Keret சிறுகதைகள், kawabatta Snow country, Tomas Transtromer கவிதைத்தொகுப்பு, ஏ.கே. செட்டியார் அண்ணலின் அடிச்சுவட்டில் Adonis - Sufism and Surrealism , The Letters of Vincent van Gogh போன்றவை நான் படித்த புத்தகங்களில் முக்கியமானவை.

1. Papusza

2. Never Look Away

3. Palm Trees in the Snow

4. Shadows in the Palace

5. The Third Wife

இந்தப் படங்கள் சமீபத்தில் நான் பார்த்த முக்கியமான திரைப்படங்கள்.

எதிர்காலம் குறித்த பயம், குழப்பம் இவற்றை எப்படி எதிர்கொள்கிறீர்கள். என்ன தான் நடக்கக்கூடும்?

ஒவ்வொரு நாளும் இந்தக் கேள்வியை எதிர்கொள்கிறேன். இதற்கான விடையை இயற்கை தருகிறது. வீட்டு மொட்டை மாடிக்கு வரும் குருவிகள் சந்தோஷமாக தானியத்தை உண்ணுகின்றன. இனிமையாக சப்தமிடுகின்றன. ஒன்றையொன்று விரட்டி சல்லாபம் கொள்கின்றன. உலகம் இனியது என அந்தக் காட்சி நினைவுபடுத்துகிறது. எதிர்வீட்டுச் சிறுவன் உற்சாகமாகப் பட்டம் விடுகிறான். பட்டம் வானின் உயரத்துக்குச் செல்லும் போது நானும் கூடவே பறப்பது போல உணருகிறேன்.

இரவில் தோன்றும் நட்சத்திரங்கள் பயம் வேண்டாம் எனச் சொல்வது போலிருக்கிறது. நண்பர் ஒருவருக்குக் குழந்தை பிறந்திருப்பதாக போனில் தகவல் வருகிறது. நண்பர் மகிழ்ச்சியோடு இனி நாம் நிறைய நம்பிக்கையோடு இருப்பேன் என்கிறார். அந்த மகிழ்ச்சி என்னையும் தொற்றிக் கொள்கிறது. முழு நிலவை வானில் பார்க்கிறேன். அதன் கருணை என்னை நனைக்கிறது. உலகம் இந்தத் துயரங்கள் யாவும் வடிந்து போய்விடும் என்ற நம்பிக்கையை ஊட்டிக்கொண்டேயிருக்கிறது.

உரையாடல்: முகேஷ் சுப்ரமணியம்

செவ்வாய், 30 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon