மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 10 ஜூலை 2020

ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு!

ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு!

ஜூலை 31ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிராவை அடுத்து கொரோனா பாதிப்பில் நாட்டிலேயே இரண்டாவது இடத்தில் உள்ள தமிழகம் நாளுக்கு நாள் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் ஐந்தாவது முறையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவுக்கு வர இருந்தது.

இதனையடுத்து ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக மருத்துவ வல்லுநர்கள் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆலோசனையில் ஈடுபட்டார். அதன்பிறகு, செய்தியாளர்களை சந்தித்த வல்லுநர் குழுவினர், ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரைக்கவில்லை என்று தெரிவித்தனர். இதனால் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா அல்லது தளர்வுகள் அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் ஜூலை 31ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு இன்று (ஜூன் 29) உத்தரவிட்டுள்ளது. அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், “கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் தற்போது ஜூன் 30 முடிவடைய உள்ள ஊரடங்கு உத்தரவு, ஜூலை 31ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை தமிழ்நாடு முழுவதும் மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு உத்தரவு தற்போது அமலில் உள்ள பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளிலும், மதுரை மாவட்டத்திலுள்ள பகுதிகளிலும் கொரோனா நோய்த்தொற்றை ஒரு கட்டுக்குள் கொண்டு வருவதற்கு உதவியதால், இந்த முழு ஊரடங்கு மேற்கண்ட பகுதிகளில் மட்டும் ஜூலை 5ஆம் தேதி வரை தொடரும் என்றும்,

ஜூன் 19ஆம் தேதிக்கு முன்னர் சென்னை மற்றும் அதை ஒட்டியுள்ள மாவட்டங்களில் உள்ள பகுதிகள் மற்றும் மதுரையில் இருந்த ஊரடங்கின் நிலையே ஜூலை 6ஆம் தேதி அதிகாலை மணி முதல் ஜூலை 31ஆம் தேதி நள்ளிரவு 12.00 மணிவரை தொடரும் எனவும் தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட காய்கறி/பழக்கடைகளைப் போன்று, பெருநகர சென்னை மாநகராட்சி, மாநகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளிடம் இருந்து முறையான வியாபார அனுமதி பெற்ற மீன் கடைகள், கோழி இறைச்சிக் கடைகள் மற்றும் முட்டை விற்பனை கடைகள் சமூக இடைவெளி நடைமுறைகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்படுகிறது” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழில்

திங்கள், 29 ஜுன் 2020

அடுத்ததுchevronRight icon