மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 26 பிப் 2021

சிறப்புக் கட்டுரை: சாத்தான்குளம் கொடூர நிகழ்வு: பனிப்பாறையின் நுனி!

சிறப்புக் கட்டுரை: சாத்தான்குளம் கொடூர நிகழ்வு: பனிப்பாறையின் நுனி!

மின்னம்பலம்

ராஜன் குறை

கடலில் பெரும் பனிப்பாறைகள் மிதக்கும். அவற்றின் சிறிய நுனி வெளியே தெரியும். ஆனால் கடலின் மேற்பரப்புக்குக் கீழே அந்த சிறிய நுனியால் அடையாளம் காண முடியாத அளவு மிகவும் பெரிய பாறையாக அது இருக்கும். டைட்டானிக் படத்தில் அப்படி ஒரு பாறை மோதி கப்பலில் உடைவு ஏற்பட்டு அது மூழ்குவதைப் பார்த்திருப்பீர்கள். அதனால் ஒரு பிரமாண்டமான பிரச்சினையின் சிறிய வெளிப்பாட்டை பனிப்பாறையின் நுனி, Tip of the Iceberg என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.

சாத்தான்குளத்தில் செல்போன் கடை வைத்திருந்த ஜெயராஜ் என்பவரும், அவருடைய மகன் பென்னிக்ஸ் என்பவரும் போலீஸாரால் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டு, கடுமையான காயங்கள், ரத்தப்போக்கின் காரணமாக உயிரிழந்துவிட்டனர் என்ற செய்தி பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசின் நடவடிக்கைகளில் காணப்படும் மெத்தனமும், காவல் துறை அதிகாரிகளின் மேல் கொலை வழக்கு பதிவு செய்யப்படாததும் மனித உரிமை ஆர்வலர்களாலும், எதிர்க்கட்சிகளாலும் கடுமையாகக் கண்டிக்கப்பட்டு வருகின்றன. இந்தக் கட்டுரை எழுதப்படும் 28ஆம் தேதி வழக்கை சி.பி.ஐக்கு மாற்றுவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு அரசு 20 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு அறிவித்துள்ளது. ஆனால் முதலமைச்சர் சம்பவத்துக்குப் பொறுப்பான, குற்றவாளிகளான காவல் துறை அதிகாரிகளைக் கண்டிக்கவில்லை. அவருடைய பேச்சுகளில் கோபமோ, வருத்தமோ தீவிர உணர்வுகளாக வெளிப்படுவதில்லை. சம்பவம் நிகழ்ந்தவுடன் மூச்சுத் திணறலால் மரணம் நேர்ந்ததாக போலீஸ் அத்துமீறலை மறைக்கும் விதமாக முதலமைச்சர் அறிக்கை வெளியிட்டார். இதெல்லாம் கடுமையான விமர்சனத்துக்கும், கண்டனத்துக்கும் உள்ளாகியுள்ளன. பிரச்சினை தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் கவனம் பெற்றுள்ளது.

இந்தப் பிரச்சினையைப் பனிப்பாறையின் நுனி என நாம் கூறுவது, இதன் முக்கியத்துவத்தைக் குறைக்கவோ, இதெல்லாம் பரவலாக நடப்பதுதான் என சகஜமாக்குவதற்கோ இல்லை. சாத்தான்குளத்தில் நிகழ்ந்தது இரக்கமற்ற படுகொலை என்றே பரவலான தகவல்களிலிருந்து தோன்றுகிறது. குற்றவாளிகள் அனைவரும் உரிய தண்டனை பெறுவது மனித உரிமைகளைக் காப்பதற்கு இன்றியமையாதது. அதே நேரம் இத்தகைய சம்பவம் நிகழ்வதற்கான பின்னணியையும், பல்வேறு காரணங்களையும் நாம் இந்தத் தருணத்தில் அலசிப் பார்க்க வேண்டும்; ஆராய வேண்டும்.

ஓர் எளிய கேள்வியை எழுப்பிக்கொண்டால் இந்தப் பிரச்சினையின் தீவிரத்தைப் புரிந்துகொள்ளலாம். ஒருவேளை ஜெயராஜும், பென்னிக்ஸும் மரணமடையாமல் இருந்திருந்தால், ஒரு சில நாட்கள் காவலில் வைக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப் பட்டிருந்தால், அவர்கள் தங்களுக்கு நடந்த கொடுமையை வெளியே கூறியிருந்தாலும், மனித உரிமை அமைப்புகள் புகார் அளித்திருந்தாலும் இந்த அளவு ஊடகங்களின், பொதுமக்களின் கவனம் பிரச்சினைக்குக் கிடைத்திருக்குமா என்பதே அந்தக் கேள்வி. மரணம் அடைந்ததால்தான் சித்திரவதை பிரச்சினைக்குள்ளாகிறது. இல்லாவிட்டால் அதைக் கண்டித்துப் போராடி, நீதி பெறுவது என்பது மிகவும் கடினமாகத்தான் இருந்திருக்கும். எனவே காவல் துறையின் பொதுவான இயங்குமுறை குறித்து நாம் சிந்திப்பது தவிர்க்கவியலாதது.

அடிப்பதற்கான, தண்டிப்பதற்கான அதிகாரம்

பொதுவாகவே அடிப்பது தவறு என்னும் கருத்து சமூகத்தில் வலுப்பெறவில்லை. குழந்தைகளை பெற்றோர் அடிப்பது சகஜமானது, இயல்பானது என்று கருதப்படுகிறது. “அடி உதவுவதுபோல அண்ணன் தம்பி உதவமாட்டான்” என்ற சொலவடை மிகவும் பரவலாக உச்சரிக்கப்படுவது. கணவன் மனைவியை அடிப்பது என்பது ஓர் உரிமையாக, இயல்பான செயலாகத்தான் பார்க்கப்படுகிறது. பள்ளிகளிலோ, ஆசிரியர்கள் அடிக்கவில்லையென்றால் மாணவர்கள் சரியாகப் பயிலமாட்டார்கள், ஒழுங்குக்கு உட்பட மாட்டார்கள் என்பது மிகப்பெரிய நம்பிக்கையாக இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட பள்ளியில், சற்றே வித்தியாசமாகக் கல்வி போதிக்க வேண்டும் என்ற கருத்தில் மாணவர்களை அடிப்பது முழுமையாக தவிர்க்கப்பட்டபோது, பெற்றோர்களே நிர்வாகிகளிடம் நீங்கள் ஏன் அடித்து போதிப்பதில்லை, பின்னர் எப்படி அவர்களுக்குக் கல்வியில் கவனம் வரும் என்று கேட்டுள்ளார்கள். முதலில் தவிர்க்கவியலாத காரணத்தால் அடிக்கிறோம் என்று தொடங்கும் ஆசிரியர்கள், பின்னால் அடிப்பதில் தனி சுகத்தையே காண்கிறார்கள்.

ஒழுங்கு மீறுதலை, தவறுகளை அடித்துக் கண்டிக்கலாம் என்ற இந்த சமூக மனோபாவம் காவல் துறையிலும் முழுமையாக ஊடுருவி உள்ளது. கோர்ட்டில் குற்றவாளிகளுக்கு வழங்கும் சிறைவாசம் என்பது போதாது எனவும், அதனால் அவர்களை கைது செய்தவுடனேயே காவல் நிலையத்தில், லாக் அப்பில் வைத்தே அவர்களை அடித்து தண்டிப்பது என்பது சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க அவசியமானது என்றும் பொதுப்புத்தியில் ஆழமாகப் பதிந்துள்ளது. “முட்டிக்கு முட்டி தட்டுவது”,, “அடித்து வெளுப்பது” என்பது போன்ற சொலவடைகளில் காவல் துறையின் இந்த “ஒழுங்கு நடவடிக்கை” பாராட்டப்படுகிறது. இது முற்றிலும் சட்டத்துக்குப் புறம்பானது என்பதை சமூகம் அங்கீகரிப்பதில்லை. ஆசிரியர் கையில் உள்ள பிரம்பும், போலீஸின் கையிலுள்ள லத்தியும் அடித்துத் திருத்தத்தான் என்று உறுதியாக நம்பப்படுகிறது. கால்சாராய் இடுப்பில் நழுவாமல் இருக்க அணியும் பெல்ட்டால் பிள்ளைகளை அடிக்கும் தந்தையர்கள் “கண்டிப்பானவர்கள்” என கெளரவிக்கப்படுகிறார்கள். மனைவியை கணவன் அடிப்பதை “அடிக்கிற கைதான் அணைக்கும்” என்று இயல்பாக்கம் செய்வதை அறிவோம்.

எந்த ஒரு சூழ்நிலையிலும் எந்த ஒரு மனிதரும், இன்னொரு மனித உயிரியை அடிப்பது என்பது இழிவானது, மிருகத்தனமானது. அடிப்பது என்பது மனித நாகரிகத்திற்கு எதிரான செயல் என்பது அனைவர் மனத்திலும் பதிய வைக்கப்பட வேண்டும். காவல் துறை தனிநபர்களை அடிப்பது என்பது முற்றிலும் சட்டத்துக்குப் புறம்பானது. இது மிகப்பெரிய சமூக அவலம் என்ற உணர்வினை சமூகத்தில் உருவாக்க வேண்டியது அவசியமானதும், அவசரமானதுமாகும். நன்கு படித்தவர்கள்கூட அடிப்பது என்பது ஒழுங்கு நடவடிக்கை, தவிர்க்க இயலாதது என்று கருவது முதிர்ச்சியின்மை அல்லது மூடத்தனம் என்றே கருத வேண்டும். மோகன்தாஸ் காந்தியை மகாத்மா என்று கொண்டாடிவிட்டு அவருடைய மகத்தான தத்துவமான அகிம்சையைப் புரிந்துகொள்ளாமல் இருப்பதால் தேசத்துக்கு எந்த பயனுமில்லை. அடிப்பது மனிதப்பண்பேயல்ல என்று நாம் திட்டவட்டமாக முடிவு செய்ய வேண்டும்.

காவல் துறை கட்டமைப்பின் பலவீனம்

காவல் துறையில் அணியாகச் செயல்படும் பண்பு என்பது சிறிதும் வேரூன்றவில்லை. கண்மூடித்தனமாகத் தலைமைக்கு கீழ்படிதல் என்பது வலியுறுத்தப்படுகிறது. காவலர்களுக்குத் தொழிற்சங்கங்களும் கிடையாது. சிறிது காலத்துக்கு முன், தனக்குத் தொடர்ந்து விடுப்பு மறுக்கப்பட்டதால் காவலர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது நினைவிருக்கலாம். இவ்வாறான அடிமை மன நிலையில் காவலர்கள் வேலை செய்வதால் அங்கே விமர்சனம் என்பதே சாத்தியமாவதில்லை. பிற அரசுத் துறைகளில் தொழிற்சங்கங்கள் இருப்பதால் பணியாளர்கள் அதிகாரிகளைக் கேள்வி கேட்க முடிகிறது; விமர்சிக்க முடிகிறது. ஒருவர் செய்யும் தவற்றை மற்றவர் சுட்டிக் காட்ட முடிகிறது. இதனால் ஓரளவாவது தவறுகள் கட்டுப்படுத்தப்படுகின்றன, பிழைகள் சமன்செய்யப்படுகின்றன. ஆனால், காவல் துறையில் மேல் அதிகாரிகளைக் கேள்வி கேட்பது என்பது சாத்தியமேயில்லை. அதனால் மொத்த துறையுமே சிந்தனைக்கே தொடர்பில்லாதவர்கள் போல பொறுப்பின்றி வன்முறையில் ஈடுபடுவது இயல்பாகிறது. பொதுமக்களிடம் அதிகாரத்தைச் செலுத்தும் காவலர்களை மேலதிகாரிகள் தட்டிக் கேட்பதில்லை. எல்லோருமே தனக்கு கீழேயுள்ளவர்கள் மீது கட்டற்ற அதிகாரத்தைச் செலுத்துகிறார்கள். இது பொதுவாகவே எதேச்சதிகாரப் போக்கையும், வன்முறை நாட்டத்தையும் வலுப்படுத்துகிறது.

பிற அரசுத்துறைகளில் பணியாளர்கள் பலரும் சொந்தமாகச் சிந்தித்து செயல்படும் வாய்ப்புகள் இருக்கும். ஓர் எழுத்தர் கூட கோப்பில் தன் கருத்துகளைப் பதிவு செய்ய இயலும். அவருடைய உயரதிகாரி அந்தக் கருத்தை மீறி நடந்தால்கூட, இவருடைய கருத்து ஆவணமாக இருக்கும். காவல் துறையில் இத்தகைய நடைமுறைகள் இருப்பதில்லை. சர்வாதிகாரி ஒருவர் மணி என்ன என்று கேட்டபோது, நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதுதான் இப்போது நேரம் என அவருடைய காவலர் பணிவாகப் பதிலிருந்ததாக ஒரு நகைச்சுவைத் துணுக்கு உண்டு. அதுபோல மேலதிகாரிகளின் உத்தரவே உண்மையாக மாறிவிடுகிறது காவல் துறையில். அவ்விதமாக கீழ்ப்படியும் காவல் துறை பணியாளர்கள் தவறு செய்தால் மேலதிகாரிகள் அதை வெளியில் காட்டிக் கொடுப்பதில்லை. மேலதிகாரிகள் கேட்பார்களே என்ற அச்சம் சிறிதாவது இருந்திருந்தால் சாத்தான் குளத்தில் இப்படியோர் அவலம் அரங்கேறியிருக்காது. துறையினுள் யாரும் எதையும் விமர்சிப்பதில்லை, எதிர்ப்பதில்லை. வன்முறை தங்குதடையின்றி பாய்கிறது.

கொரோனா கால மனப்போக்கு

ஏற்கனவே இருந்த இதுபோன்ற ஆழமான பிரச்சினைகள் கொரோனா காலத்தில் பன்மடங்கு அதிகமாகிவிட்டது. நோய்த் தடுப்புக்காக மேற்கொள்ளப்படும் லாக் டெளன் என்ற ஊரடங்கை சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக காவல் துறை பார்க்கத் தொடங்கியது மிகப்பெரிய விபரீதம், இதை ஏற்கனவே பல மின்னம்பலம் கட்டுரைகளில் சுட்டிக் காட்டியிருந்தேன். ஊரடங்கு தொடங்கிய காலத்தில், இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரைக் காவலர் ஒருவர் லத்தியால் அடிக்க, அவர் தான் டாக்டர் என்று அடையாள அட்டையை காண்பிக்க, முதலிலேயே ஏன் சொல்லவில்லை என்று அடித்த காவலர் குறைபட்டுக்கொள்ளும் காணொலி பரவலாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது

காவல் துறை சிவில் உரிமைகளைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் மார்ச் 23ஆம் தேதி முதல் அடக்குமுறை நடவடிக்கைகளைச் செயல்படுத்தி வருகிறது. நோய் குறித்த அச்சத்தால் இதைப் பொதுமக்களும் பெரிதும் சகித்துக் கொள்ளும் சூழ்நிலையும் நிலவுகிறது. காவலர் செய்த தொந்தரவுகளால் வண்டியோட்டிகள் தங்கள் விளைச்சலைச் சந்தைக்கு கொண்டு செல்ல மறுத்ததால் விவசாயிகள் கடும் இழப்பைச் சந்தித்தனர். இதெல்லாம் ஆங்காங்கே பதிவானாலும், காவல் துறையினர் அரசால் சரிவர அறிவுறுத்தப்படவில்லை.

ஊரடங்கு விதிகளின்படி குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் கடையைத் திறந்துவைத்திருந்தால் காவலர்கள் நிச்சயம் மூடச்சொல்லி அறிவுறுத்த வேண்டும். தொடர்ந்து ஒரு வணிகர் அப்படிச் செய்தால் அவர் மீது வழக்கு தொடுக்கலாம், அபராதம் விதிக்கலாம். அதற்காக கைது செய்து லாக் அப்பில் வைத்து அடிப்பது என்பது மிகப்பெரிய அத்துமீறல் மட்டுமல்ல, அறிவுக்குப் பொருந்தாத அடக்குமுறை என்றும் கூறலாம். நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பை அரசு கோரிப்பெறாமல் இவ்விதம் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவது நோக்கத்தையே பாழ்படுத்திவிடும்.

சாத்தான்குளத்தில் லாக் அப்பில் நடந்த சித்திரவதையில் காவலர்களின் நண்பர்கள் என்று அழைக்கப்படும் சிவில் சமூக உறுப்பினர்களும் பங்கேற்றது ஏராளமான கேள்விகளை எழுப்புகிறது. இது தீர விசாரிக்கப்பட்டு முளையிலேயே கிள்ளி எறியவேண்டிய ஆபத்தான போக்கு என்பதில் ஐயமில்லை. எப்படிப்பார்த்தாலும், சாத்தான்குளம் சம்பவம், பனிப்பாறையின் நுனி என்ற உருவகத்துக்குப் பொருத்தமாக இருப்பதாகத்தான் தோன்றுகிறது.

கட்டுரையாளர் குறிப்பு

கட்டுரையாளர் : ராஜன் குறை கிருஷ்ணன் - பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: [email protected]

திங்கள், 29 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon