மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 10 ஜூலை 2020

பொறுப்பைத் தட்டிக் கழிக்காதீர்கள் முதல்வரே: கமல்

பொறுப்பைத் தட்டிக் கழிக்காதீர்கள் முதல்வரே: கமல்

சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தில் காவல் துறை நடவடிக்கை தொடர்பாக அடுத்தடுத்து அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய விவகாரம் தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்தது.

இந்நிலையில் சாத்தான்குளம் வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு செய்ததில், வழக்கை சிபிஐக்கு மாற்றிக் கொள்ளலாம். அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடத் தேவையில்லை என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துவிட்டது.

இந்நிலையில், சாத்தான்குளம் வழக்கு சிபிஐக்கு மாற்றப்படுவது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், ”சாத்தான்குளம் வழக்கை சிபிஐக்கு மாற்றி, பொறுப்பைத் தட்டிக் கழிக்காதீர்கள் முதல்வரே! குற்றவாளிகள் மேல் ஐபிசி 302 கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்களைப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படையுங்கள்.

சிபிஐ விசாரணைக்காக மாற்றப்பட்டு, கிடப்பில் இருக்கும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, குட்கா ஊழல் போன்ற வழக்குகளின் வரிசையில் இதையும் சேர்த்து, மக்கள் மறந்து விடுவார்கள் என காத்திராமல், நீதியைக் காத்திடுங்கள். காலம் தாழ்த்தப்பட்ட நீதி, அநீதி” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

-கவிபிரியா

திங்கள், 29 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon