மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 5 ஜூலை 2020

சாத்தான்குளத்தின் சர்ச்சை அலைகள்! - 3

 சாத்தான்குளத்தின் சர்ச்சை அலைகள்! - 3

கோவில்பட்டி கிளைச் சிறை அரசு அலுவலகங்கள் சூழ்ந்த காம்பவுன்ட்டில்தான் இருக்கிறது.  முதலில் நகராட்சி அலுவலகம்,   அடுத்து  கிளைச் சிறை அமைந்துள்ளது. இவற்றின் நேர் பின் பகுதியில் அரசு மருத்துவமனை, அரசு பெண்கள் பள்ளி ஆகியவை உள்ளன. அதற்கும் பின்னால் தாலுகா அலுவலகம், கோர்ட் , அதன் பின்னால் டெலிபோன் எக்ஸேஞ்ச் என பல அலுவலகங்கள் ஒன்றன் பக்கத்தில் ஒன்றாகவே அமைந்திருக்கின்றன. அந்த வகையில் கோவில்பட்டி கிளைச் சிறைக்கு பின் பக்கம் மருத்துவமனை இருக்கிறது.

மத்திய சிறையில்தான் முறையான மருத்துவமனையும் தினந்தோறும் மருத்துவர் விசிட்டும் இருக்கும். கிளைச் சிறைகளில் முறையான மருத்துவமனை கிடையாது. வாரத்துக்கு சில நாட்கள் அந்த ஊர் அரசு மருத்துவமனையில் இருந்து ஒரு டாக்டரை டூட்டி போடுவார்கள். அந்த வகையில் கோவில்பட்டி கிளைச் சிறையில் ஜெயராஜையும், பென்னிக்ஸையும் அடைத்தபோது டூட்டியில் யாரும் இல்லை.  மறுநாள்தான் ஒரு டூட்டி டாக்டர் வந்திருக்கிறார். ஒவ்வொரு கைதியையும் அவர் பார்க்கும்போது பென்னிக்ஸை பார்த்து பதறிவிட்டார்.   ‘எப்படி இவரை இங்க கொண்டு வந்தீங்க’ என்று கேட்டபடியே  ஜி.ஹெச்.சில் சேர்க்கும்படி  வலியுறுத்தியிருக்கிறார்.  அதற்கும் பல மணி நேரங்கள் கழித்துதான் கோவில்பட்டி ஜி.ஹெச்சில் பென்னிக்ஸ் சேர்க்கப்பட்டிருக்கிறார். போலீஸ் ஒரு கோபத்தில் அடித்துவிட்டது என்றால் கூட, அதற்கான சிகிச்சைகளை உடனடியாகக் கொடுத்திருந்தால் கூட இருவரையும் காப்பாற்றியிருக்க முடியும். அதையும் ஏன் தாமதித்தார்கள் என்பதுதான் விளங்கிக் கொள்ள முடியாத வன்மமாக இருக்கிறது என்கிறார்கள் சாத்தான்குளம் வர்த்தகர்கள்.

என்ன செய்கிறது எஸ்பி சிஐடி

இந்த நேரத்தில்  எஸ்பி சிஐடி என்ற போலீஸ் அமைப்பு என்ன செய்கிறது என்ற கேள்வி பலமாக எழுகிறது. ஒவ்வொரு காவல்நிலையத்துக்கும் பொறுப்பாளர் இன்ஸ்பெக்டர் ஆகிறார். அவருக்குக் கீழ்தான் அந்த காவல் நிலையம் இயங்குகிறது. ஆனால் இன்ஸ்பெக்டர் தன் வரம்புக்குள் செயல்படுகிறாரா, போலீஸ் ஸ்டேஷனில் கட்டப் பஞ்சாயத்து நடக்கிறதா, சப் இன்ஸ்பெக்டர்கள் முறையாக செயல்படுகிறார்களா என்பதை எல்லாம் விசாரித்து மாவட்ட அளவில் இருக்கும் எஸ்பி இன்ஸ்பெக்டருக்கு ரிப்போர்ட் கொடுப்பதுதான் எஸ்பி சிஐடியின் வேலை. அதாவது போலீஸை கண்காணிக்க ஒரு போலீஸ். அமைப்புக்குள்ளேயே ஓர் உளவு அமைப்பு.  காவல்துறை தனக்குத் தானே வைத்திருக்கும் கடிவாளம்.

இந்த எஸ்பி சிஐடிக்களுக்கு போலீஸ் ஸ்டேஷனில் இருக்கை கிடையாது.  தலையைக் காட்டுவார்கள் போய்விடுவார்கள். இவர்கள் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஒழுங்காக பணி செய்தாலே காவல் நிலையங்கள் கறாராகவும், நேர்மையாகவும் இருக்கும். ஆனால் தன்னை கவனிக்க வேண்டிய இவர்களை காவல்நிலையங்கள்  ‘கவனித்து’ விடுவதால்  காவல் நிலையங்கள் பற்றி நல்ல விதமாகவே ரிப்போர்ட் போகும் அல்லது கெட்ட விஷயங்கள் இல்லாமல் ரிப்போர்ட் போகும். சாத்தான்குளத்தின் எஸ்பி சிஐடி ஒழுங்காக வேலை செய்திருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது.

அதற்கு மிக சமீபத்திய உதாரண சம்பவமும் இந்த இரட்டை மரணங்களுக்கு முன்பே நடந்திருக்கிறது.  ஜெயராஜையும், பென்னிக்ஸையும் தாக்கியவர்களில் ஒருவரான சாத்தான்குளம் சப் இன்ஸ்பெக்டர் ரகு கணேஷுக்கு கொம்பன் என்றொரு பட்டப் பெயர். அவரது  வட்டத்தில் உலவிக் கொண்டிருக்கிறது. அந்த கொம்பன் பற்றி டிஜிபி வரைக்கும் ஒரு புகார் இந்த சம்பவத்துக்கு முன்பே போயிருக்கிறது.

சாத்தான்குளம் காவல்நிலையம் மீது டிஜிபி வரை சென்ற புகார்

சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷன் லிமிட்டுக்கு உட்பட்டது பேய்க்குளம். ஸ்ரீவெங்கடேசபுரம் பகுதியின் கடைத்தெருவுக்குதான் பேய்க்குளம் என்று பெயர். வளர்ந்து வரும் பகுதி. இப்பகுதியில் வெவ்வேறு சாதியினர் வசிக்கிறார்கள். ஆனால் இதுவரைக்கும் பெரிய அளவிலான சாதிமோதல்கள் நிகழ்ந்ததில்லை. ஒருவேளை சாதிமோதலாக வாய்ப்புள்ள சம்பவங்கள் கூட மத்தியஸ்தர்களால் காவல்நிலையத்தின் தலையீட்டால் தணிக்கப்பட்டே வந்திருக்கிறது.  ஆனால் சில மாதங்களுக்கு முன் சாத்தான்குளத்துக்கு சப் இன்ஸ்பெக்ட்ராக வந்த ரகு கணேஷ் என்பவர் மீதுதான், சில நாட்களுக்கு முன் டிஜிபி வரை புகார் போயிருக்கிறது.

என்ன புகார்?

“ரகு கணேஷ் தன் சமுதாய இளைஞர்களைத் தூண்டிவிட்டு பேய்க்குளம் பகுதியில் மாற்று சமுதாய இளைஞர்களுடன் மோத வைத்தார். இதனால்,  ரகு கணேஷுக்கு ஆதரவான அவரது சமூகத்தவரான ஜெயக்குமார் என்பவர் மீது பலர் கோபத்தில் இருந்தார்கள்.  ரகு கணேஷால் பாதிக்கப்பட்ட சிலர் கடந்த மே 18 ஆம் தேதி ஜெயக்குமாரை கொலை செய்துவிட்டார்கள். இந்த பகுதியில் சமூக ரீதியாக நடந்த முதல் கொலை என்ற மாறாத கறை ஏற்பட்டது.  அந்தக் கொலை தொடர்பாக ஒரு மைனர் உட்பட 18 பேர் மீது எஃப். ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குக்காக பலரையும் விசாரணை என்ற பெயரில் ரகு கணேஷ் நள்ளிரவுகளில் வீடு புகுந்து கூப்பிடுவதும் மிரட்டுவதாகவும் இருந்தார்.

இந்தக் கொலை வழக்கில் முக்கிய குற்றஞ்சாட்டப்பட்டவரான துரை என்பவர் சிக்காத நிலையில், அவரது தம்பி என்ற ஒரே காரணத்துக்காக மகேந்திரன் என்ற 29 வயது பையனை ஸ்டேஷனுக்கு அழைத்துக் கொண்டு போனார்கள். ஜெயராஜ், பென்னிக்ஸ் எப்படி தாக்கப்பட்டார்களோ அதேபோலத்தான் அந்த மகேந்திரனும் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து தாக்கப்பட்டார்.  அவருக்கு பின் மண்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. தம்பியை பிடித்து அடிப்பது தெரிந்து துரை பிடிபட்டுவிட்டார். அதனால் மகேந்திரனை வீட்டுக்கு அனுப்பினார் எஸ்.ஐ. ரகு கணேஷ். போலீஸ் அடித்த அடியில் கடுமையாக காயம்பட்ட மகேந்திரன் வலி தாங்க முடியாமல் மருத்துவர்களிடம் போனார். தூத்துக்குடி ஜி.ஹெச்.சில் சிகிச்சை பெற்றும் சில நாட்களிலேயே  தலையில் ரத்தம் உறைந்து இறந்துவிட்டார். ஆனால் போலீஸாரின் மிரட்டலால் மகேந்திரனின் தாயார் தன் கண்ணீரையே புகாராக வழியவிட்டு மகனை கொண்டு போய்  கடைசி காரியங்களைச் செய்தார்.

இதைக் குறிப்பிட்டு ஜூன் மாதம் 17 ஆம் தேதிதான் பேய்க்குளம் அனைத்து சமுதாய மக்கள் சார்பில் டிஜிபிக்கு புகார் அனுப்பப்பட்டிருக்கிறது. அந்த புகாரில்,  ‘பேய்க்குளம் மக்களின் பொது அமைதி கருதி எஸ்.ஐ. ரகு கணேஷ் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவரை சாத்தான்குளத்தில் இருந்து மாற்றினால் சாதி மோதல்களுக்கும், குழு மோதல்களுக்கும், இரவுகளில் வீட்டுக் கதவுகள் உடைக்கப்படுவதற்கும் முற்றுப் புள்ளி வைக்கலாம். எங்கள் ஊரின் நன்மை கருதி இந்த புகாரை நாங்கள் எந்த டிவிக்கோ, பத்திரிகைக்கோ புகாராகக் கொடுக்கவில்லை” என்று காவல்துறை தலைமையை நம்பி புகார் அனுப்பினார்கள் பேய்க்குளம் மக்கள்.

இந்தப் புகார் அனுப்பியது 17 ஆம் தேதி... ஒரே நாள்தான் இடைவெளி. 19 ஆம் தேதி சாத்தான்குளம் காவல் நிலையம் மீண்டும் ரத்தம் பார்க்க ஆரம்பித்துவிட்டது. 17 ஆம் தேதி புகாரை மக்கள் அனுப்பினார்கள்.  உண்மையில் இந்தத் தகவல்களை எஸ்பி சிஐடி முன்பே தனது மேலிடத்துக்கு அனுப்பியிருந்தால், அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் 19 ஆம் தேதி சம்பவம் தவிர்க்கப்பட்டிருக்கலாம். முந்தைய மகேந்திரன் மரணத்துக்கும் நீதி கிடைத்திருக்கும்.

ஒரு சில காவல் அதிகாரிகளால் காவல்துறைக்கு இன்று ஏற்படும் ஒட்டுமொத்த கெட்டப் பெயரும் தவிர்க்கப்பட்டிருக்கும்.

   -மின்னம்பலம் டீம் 

பகுதி 1 

பகுதி 2

திங்கள், 29 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon