மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 10 ஜூலை 2020

வந்தே பாரத் விமானங்களுக்கு தமிழகத்தில் அனுமதி!

வந்தே பாரத் விமானங்களுக்கு தமிழகத்தில் அனுமதி!

தமிழகத்தில் விமானங்களைத் தரையிறக்கத் தமிழக அரசு மறுப்பு தெரிவித்ததாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், விமானங்கள் தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டதாகத் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் இறுதி முதல் சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் வெளிநாட்டில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்க வந்தே பாரத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், தமிழக அரசு விமான போக்குவரத்துக்கு அனுமதி வழங்கவில்லை, மத்திய அரசின் உத்தரவைப் பின்பற்றி வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களைச் சொந்த ஊருக்கு அழைத்து வரும் வகையில் தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் விமானங்கள் தரை இறங்க அனுமதிக்க உத்தரவிட வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் . இளங்கோவன் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது சொந்த ஊர் திரும்ப விண்ணப்பித்துள்ள தமிழர்கள் எப்போது அழைத்து வரப்படுவார்கள் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இவ்விவகாரம் தொடர்பாக மத்திய மாநில அரசுகள் பதில் அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் 1248 விமானங்கள் மூலம் வெளி நாடுகளில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 661 விமானங்கள் மூலம் 2 லட்சத்து 63 ஆயிரத்து 187 இந்தியர்கள் பல்வேறு நாடுகளிலிருந்து இந்தியா அழைத்து வரப்பட்டதாகவும், இதில் 17 ஆயிரத்து 707 தமிழர்கள் அழைத்து வரப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் மூன்றாம் கட்டமாக 587 விமானங்கள் வெளிநாடுகளில் சிக்கி இருப்பவர்களை அழைத்துவர இயக்கப்பட உள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மீண்டும் இன்று (ஜூன் 29) நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் விமானங்கள் இயக்கப் படுவதாகவும் தமிழக அரசு விமானங்களைத் தரையிறக்க அனுமதி மறுப்பதாகவும் புகார் தெரிவித்தார் .

அதோடு வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்படும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஹைதராபாத் பெங்களூரு ஆகிய பகுதிகளில் இறங்கி தமிழகம் வருகின்றனர். விமானங்களைத் தரையிறக்க அனுமதி மறுப்பது குறித்து தமிழக அரசு தான் கூற வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இதனிடையே திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் ஆஜராகி, வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 27 ஆயிரம் பேர் எப்போது அழைத்து வரப்படுவார்கள் என்று கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் விமானங்கள் தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், ஏராளமானவர்கள் தமிழகத்திற்குத் திரும்பியுள்ளதாகவும் தெரிவித்தார். மாநில அரசு விமானங்களைத் தரையிறக்க அனுமதி மறுப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், விமானங்களைத் தரையிறங்க அனுமதி அளித்தது குறித்துக் கூடுதல் விவரங்களைத் தெரிவிக்க அவகாசம் அளிக்க வேண்டுமென்றும் தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.

இதனை ஏற்று நீதிபதிகள் அவகாசம் வழங்கி வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.

-கவிபிரியா

திங்கள், 29 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon