மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 5 ஜூலை 2020

ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு!

ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு!

கொரோனா பாதிப்பில் ஆரம்பம், முதலே முதலிடத்தில் இருக்கும் மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் ஜூலை 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் கொரோனா மிக வேகமாகப் பரவி வருகிறது. சுமார் 1.6 லட்சம் பேர் அம்மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இதில் 74,000 பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள் ஆவர். மும்பை போன்று 10 முக்கிய நகரங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. 7,000க்கும் அதிகமானோர் மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு பாதிப்பு கட்டுக்குள் வராமல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் , முதல்வர் உத்தவ் தாக்ரே இதுகுறித்து கூறுகையில், “ஊரடங்கு தளர்வால் கொரோனா பரவல் அதிகரிக்கக் கூடும். எனவே மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மிஷன் மீண்டும் தொடங்குகிறது என்ற திட்டத்தின் கீழ் புதிய வழிமுறைகளை வெளியிட்ட மகாராஷ்டிரா அரசு,  “ஜூலை 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. மும்பை பெருநகர பிராந்தியத்திற்குள் அத்தியாவசியமற்ற நடவடிக்கைகள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. அலுவலகங்கள் மற்றும் அவசர பயணங்களுக்குச் செல்வோருக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். மக்கள் பாதுகாப்புடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூன் 29) ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். முழு ஊரடங்கு தொடர வேண்டிய அவசியமில்லை  என்று ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளதாக மருத்துவக் குழு தெரிவித்தது.  நாளையுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில், மருத்துவ நிபுணர்களுடன் நடத்திய ஆலோசனையின் அடிப்படையில் முக்கிய அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே, மேற்கு வங்கத்தில் ஜூலை 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

-கவிபிரியா

திங்கள், 29 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon