மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 10 ஜூலை 2020

சாத்தான்குளத்தின் சர்ச்சை அலைகள்!- 2

சாத்தான்குளத்தின் சர்ச்சை அலைகள்!- 2

சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து தாக்கப்பட்டுக் கொண்டிருந்த ஜெயராஜின் மனைவி ஜெயராணி 19 ஆம் தேதி இரவு 9 மணி போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகிறார். அவரை போலீசார் விரட்டி விடுகிறார்கள். கொஞ்ச நேரத்திலேயே அவர் தனது மகள்களுடன் மீண்டும் சென்றிருக்கிறார். வாசலிலேயே காத்துக் கிடந்திருக்கிறார். சில நிமிடங்களில் ஒரு போலீஸ் வந்து, ‘மாத்தறதுக்கு துணி கொண்டாங்க’ என்று கேட்டிருக்கிறார். உடனே அவர் வீட்டுக்குப் போய் தன் கணவனுக்கு ஒரு வேட்டி, மகனுக்கு ஒரு வேட்டி என இரு வேட்டிகளை எடுத்துக் கொண்டு ஓடியிருக்கிறார்.

வேட்டி வேண்டாம் சாரம் கொண்டா...

வேட்டியை வாங்கிக் கொண்டு சென்ற போலீசார் அதை பென்னிக்ஸுக்கும் கட்டிவிட்டதும் வெள்ளை துணி முழுக்க ரத்தம் பீறிட்டது. ‘என்னய்யா வேட்டி கொண்டாந்திருக்கவோ... போய் சாரம் கொண்டாரச் சொல்லு போ’ என்று இன்ஸ்பெக்டர் சொன்னதும் போலீஸ் வெளியே ஓடி வந்து, ‘அம்மா... சாரம் கொண்டாங்க ரெண்டு சாரம் கொண்டா’ என்று சொல்ல, அப்போதே அவருக்கு சுருக்கென்றது. எதற்காக வேட்டிக்கு பதில் சாரம் (லுங்கி) கேட்க்குறாங்க?” என்று நினைத்துக் கொண்டு, ‘வேட்டிதான் கொடுத்தனே?” என்று கேட்கிறார். நீ சாரம் எடுத்தாம்மா என்று அவரை அனுப்பியிருக்கிறார்கள். மீண்டும் இரு சாரங்களை (லுங்கி) கொண்டு வந்துகொடுக்கிறார் ஜெயராணி.

இரவு 12.30க்கு மேல் இன்ஸ்பெக்டர் வெளியே வந்து, ‘இந்தாம்மா.. உன் வீட்டுக்காரர் நல்லா இருக்காரு. இங்க கூட்டம் கூடாதீங்க. காலையில கோர்ட்டுக்கு வாங்க. இப்ப போங்க’ என்றதும்தான் இனிமேலும் அங்கே நிற்க முடியாமல் கிளம்பி வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள் ஜெயராணியும் அவரது மகள்களும்.

காலையில் சாத்தான்குளம் கோர்ட்டுக்குதான் கொண்டு வருவார்கள் என்று அவர்கள் நினைத்துக் கொண்டே கண்ணீரோடு சென்ற நிலையில், இரவோடு இரவே சுமார் 2.30 மணிக்கு நீதிபதி சரவணன் வீட்டுக்குச் சென்று வாசலிலேயே இவர்களை ஒரு ஆட்டோவில் நிற்க வைத்திருக்கிறார்கள். அவர் கதவைத் திறந்து இருட்டில் வாசலைப் பார்த்துவிட்டு கையெழுத்து போட்டுவிட்டு அனுப்புகிறார்.

கோவில்பட்டிக்கு போகக் காரணம் என்ன?

அதன் பிறகுதான் போலீஸின் மாஸ்டர் பிளான் ஆரம்பமாகிறது. சாத்தான்குளத்தில் இருந்து 25 கிலோ மீட்டரில் திருச்செந்தூர் சப் ஜெயில் இருக்கிறது. 35 கிலோ மீட்டரில் நாங்குநேரி சப் ஜெயில் இருக்கிறது. 18 கிலோ மீட்டர் தொலைவிலேயே ஸ்ரீவைகுண்டம் கிளைச் சிறை இருக்கிறது. ஆனால் இதையெல்லாம் விட்டு சுமார் 90 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் கோவில்பட்டி சிறையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இரவு 2.30 மணிக்கு மேல் போலீஸ் வேனில் தூக்கிப் போட்டு அதிகாலை 4 மணிக்குள் கோவில்பட்டி கிளைச் சிறையை அடைகிறது சாத்தான்குளம் போலீஸின் வண்டி. அங்கிருக்கும் ஜெயிலர் சாத்தான்குளம் போலீசாருக்குத் தெரிந்தவர் என்கிறார்கள். அதனாலேயே அந்த சிறையைத் தேர்ந்தெடுத்தனர். ஏனெனில் சிறு காயம் இருந்தாலும் சிறைக்குள் அனுமதிக்க முடியாது. ஆனால், இரண்டு வேட்டி, இரண்டு-மூன்று லுங்கி என ரத்தம் தோய்க்கப்படும் அளவுக்கு காயமடைந்த பென்னிக்சையும், ஜெயராஜையும் எப்படி சிறைக்குள் அனுமதிப்பார்கள்? அப்படி அனுமதிக்க வேண்டுமென்றால் சாத்தான்குளம் போலீசாருக்கு நன்கு தெரிந்தவர்களாகத்தான் இருக்க வேண்டும்.

இடைப்பட்ட சிறைகளில் அடைக்க முடியாது, அங்கே சமூக இடைவெளியோடு அடைக்கும் அளவுக்கு இடம் இல்லை என்று கூறி கோவில்பட்டிக்கு அந்த அதிகாலையில் சென்றிருக்கிறார்கள் சாத்தான்குளம் போலீஸார். அதிகாலை நான்கு மணிக்கு கோவில்பட்டி சிறைக்குள் தள்ளப்பட்டிருக்கிறார்கள் பென்னிக்ஸும், ஜெயராஜும். அப்போதும் பென்னிக்ஸ் கத்திக் கதறியிருக்கிறார். ஒரு நாள் முழுதும் சிறையிலேயே துடித்த பென்னிக்ஸ் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அவரை அங்கே கொண்டு செல்லும்போதே நிலைமை கவலைக்கிடமாகவே இருந்துள்ளது. 22 ஆம் தேதி மாலை மருத்துவமனையில் இறந்துவிடுகிறார் பென்னிக்ஸ். கொஞ்ச நேரத்திலேயே பென்னிக்ஸின் தந்தை ஜெயராஜும் மருத்துவமனையில் இறந்துவிடுகிறார்.

கோவில்பட்டி சப் ஜெயிலுக்குள் 20 ஆம் தேதி அதிகாலையில் ரத்தக் காயங்களோடு வந்த இருவரையும் அனுமதித்திருக்கக் கூடாது. ஆனாலும் சாத்தான்குளம் போலீஸார் அதற்காகத்தான் இத்தனை சப் ஜெயில்களைத் தாண்டி கோவில்பட்டி சப் ஜெயிலை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். கோவில்பட்டி சப் ஜெயில் ஜெயிலரும் இதற்கு பதில் சொல்லியாக வேண்டும்.

இப்போது சாத்தான்குளம் காவல்நிலையத்தின் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவரது சப் இன்ஸ்பெக்டர்கள் ஏற்கனவே துறை ரீதியான நடவடிக்கைக்கு உட்பட்டுள்ளனர். விசாரணை செய்ய வந்த நீதிபதிகளுக்கு உரிய ஒத்துழைப்பு கொடுக்காததால், சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தை வருவாய் துறையினர் கையிலெடுக்குமாறு உயர் நீதிமன்றம் கூறியுள்ளதே... சாத்தான்குளம் போலீஸாரின் தடித்த தோல்களுக்கு சாட்சி.

ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன் பற்றியும் போலீஸ் மேலிடத்துக்கு உண்மைத் தகவல்களை சொல்வதற்கென்றே சிறப்புப் பிரிவு போலீஸுக்குள் இருக்கிறது. சாத்தான்குளம் போலீஸ் பற்றி அந்த குழுவின் அறிக்கை என்ன?

(சர்ச்சைகள் தொடரும்)

பகுதி 1

திங்கள், 29 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon