மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 10 ஜூலை 2020

ஆட்சியர் கட்டுப்பாட்டில் சாத்தான்குளம் காவல் நிலையம்!

ஆட்சியர் கட்டுப்பாட்டில் சாத்தான்குளம் காவல் நிலையம்!

காவலர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்காததால் சாத்தான்குளம் காவல் நிலையத்தை ஆட்சியர் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

சாத்தான்குளத்தில் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை-மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. இந்நிலையில், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

இது தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அரசு சார்பில் முறையிடப்பட்டது. தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் செல்லபாண்டியன் இன்று ஆஜராகி வழக்கை சிபிஐக்கு மாற்ற அனுமதி கோரினார்.

அப்போது நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் புகழேந்தி, இது அரசின் கொள்கை முடிவு. வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டுமென்றால் மாற்றலாம். அரசின் கொள்கை முடிவுக்கு நீதிமன்ற அனுமதி தேவை இல்லை என்று தெரிவித்தனர்.

அதோடு இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றும் பட்சத்தில் வழக்கு தொடர்பான ஆவணங்களையும், மாஜிஸ்திரேட்டின் விசாரணை அறிக்கை, வழக்கு குறிப்பு ஆகியவற்றை சிபிஐ விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

அப்போது, சாத்தான்குளம் விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காத காவலர்கள் மீது அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், சாத்தான்குளம் காவல் நிலையத்தைத் தூத்துக்குடி ஆட்சியர் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும். வருவாய்த்துறை அதிகாரியைக் காவல் நிலையத்திற்குப் பொறுப்பு அதிகாரியாக நியமிக்க வேண்டும். காவல் நிலையத்தில் உள்ள அனைத்து ஆவணங்களையும் கைப்பற்ற வேண்டும் என்று ஆட்சியர் மற்றும் மாஜிஸ்திரேட்டுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

முன்னதாக இவ்வழக்கை விசாரித்து வரும் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் நீதிமன்றத்தில் விசாரணை தொடர்பான அறிக்கை தாக்கல் செய்தார்.

கவிபிரியா

திங்கள், 29 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon