மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 10 ஜூலை 2020

பெட்ரோல் டீசல் விலை உயர்வு: காங்கிரஸ் போராட்டம்!

பெட்ரோல் டீசல் விலை உயர்வு: காங்கிரஸ் போராட்டம்!

பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் இன்று (ஜூன் 29) காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்திருக்கும் போது, இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகின்றன. கடந்த 3 வாரங்களில் மட்டும் 22 முறை பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.9.17 பைசாவும், டீசல் லிட்டருக்கு ரூ.11.14 பைசாவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ.83.63 காசுகளுக்கும், டீசல் லிட்டர் ரூ.77.72 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஜூன் 16ஆம் தேதி பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பெட்ரோல் , டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். எனினும் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இதனைக் கண்டித்து நாடு முழுவதும் ஜூன் 29ஆம் தேதி மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் தலைமை அறிவித்தது. அதோடு பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தைச் சந்தித்து மனு கொடுக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று காலை 11 மணி முதல் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களின் தலைநகரங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

தமிழ்நாடு

தமிழகத்தில் மாவட்ட தலை நகரங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். மேட்டுப்பாளையம் வாணியம்பாடியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில், எரிபொருள் நிரப்ப வரும் இரு சக்கர வாகன ஓட்டிகளிடம், அவர்கள் தங்கள் வாகனத்துக்குப் போடும் பெட்ரோலுக்கான விலையைக் கொடுத்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லாம் பாஷா பாஜக அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.

பிகார்

பிகாரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சைக்கிளில் பேரணியாக வந்தும், குதிரை மற்றும் மாட்டு வண்டிகளில் ஊர்வலமாக வந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குஜராத்

அகமதாபாத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரைக் காவல் துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

டெல்லி

டெல்லியில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள், தொண்டர்கள் ஆகியோர் ஐபி கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாகக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

கர்நாடகா

மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் கர்நாடக முதல்வருமான சித்தராமையா தனது இல்லத்திலிருந்து மிஸ்க் சதுக்கத்துக்கு சைக்கிளில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டார்.

-கவிபிரியா

திங்கள், 29 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon