மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 10 ஜூலை 2020

சீன நிறுவனங்களிடமிருந்து பிஎம்-கேர்ஸ் நிதி: ப.சிதம்பரம் கேள்வி!

சீன நிறுவனங்களிடமிருந்து பிஎம்-கேர்ஸ் நிதி: ப.சிதம்பரம் கேள்வி!

சீன நிறுவனங்களிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய்களை பிரதமர் மோடியின் தனிக் கட்டுப்பாட்டில் உள்ள பிஎம் கேர்ஸ் நிதியம் பெற்றது நியாயமா என்று முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரசின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய சீன எல்லையில் மே 5ஆம் தேதி முதல் பதற்றம் நீடித்து வருகிறது. சீனா, கல்வான் பள்ளத்தாக்கு மற்றும் பாங்கோங் த்சோ ஆகிய பகுதிகளில் தனது படைகளைக் குவித்து வருகிறது. சீன துருப்புகளைத் திரும்பப் பெற அந்நாட்டு ராணுவம் மறுத்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்று இந்திய படைகளுக்குப் பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.

இந்திய சீன எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், சீன பொருட்களைப் புறக்கணிப்போம் என்று இந்தியாவில், சமூக வலைதளங்களில் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிரபலங்கள் உட்பட பலரும் இனி சீன பொருட்களை வாங்கமாட்டோம்/பயன்படுத்தமாட்டோம் என்று கூறி வருகின்றனர்.

இந்நிலையில் சீன நிறுவனங்களிடமிருந்து பிஎம்-கேர்ஸ் நிதி பெற்றது நியாயமா என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர்,

"2020 மார்ச், ஏப்ரல் மாதங்களில் சீன நிறுவனங்கள் நிதி கொடுக்கிறார்கள். அதே மார்ச், ஏப்ரல் மாதங்களில் சீனத் துருப்புகள் ஊடுருவுகின்றன, இது எப்படி இருக்கு? சீன அதிபர் ஜீயும், இந்தியப் பிரதமர் மோடியும் ஊஞ்சலாடுகிறார்கள், சீனத் துருப்புகள் ஊடுருவுகின்றன! இது எப்படி இருக்கு?”

என்று கிண்டல் செய்துள்ளார்.

மேலும், சீனா எப்பொழுது ஊடுருவியது? 2013, 2014, 2018, 2020 இல் ஊடுருவல் நடைபெற்றது. இந்த ஊடுருவல்களுக்குப் பிறகு பிரதமர் மோடியின் கட்டுப்பாட்டில் உள்ள நிதியம் சீன நிறுவனங்களிடமிருந்து நிதி பெற்றது மாபெரும் குற்றமல்லவா?

2005 ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி அறக்கட்டளை ரூ 1.45 கோடி நன்கொடை பெற்றது தவறு என்றால் 2020 ஆம் ஆண்டில் சீன நிறுவனங்களிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய்களை பிரதமர் மோடியின் தனிக் கட்டுப்பாட்டில் உள்ள PM-CARES நிதியம் பெற்றதே, அது எப்படி நியாயம்?" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக 2005ல், சீன தூதரகத்திலிருந்து காங்கிரசின் ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு நிதியுதவி அளிக்கப்பட்டது பற்றி பாஜக கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

-கவிபிரியா

திங்கள், 29 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon