மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 10 ஜூலை 2020

சாத்தான்குளத்தின் சர்ச்சை அலைகள்!

சாத்தான்குளத்தின் சர்ச்சை அலைகள்!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் போலீஸாரால் தாக்கப்பட்ட ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி சப்ஜெயிலில் இறந்த சம்பவம் காவல் துறையில், மருத்துவத் துறையில், நீதித் துறையில், அரசியல் துறையில் சமூகத் துறையில் என்று பல்வேறு வடிவங்களில் சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிறது.

இந்த சம்பவத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் செல்போன் கடையில் இருந்து சாத்தான்குளம் காவல் நிலையம் வரை முதல் படலம், சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் இருந்து சாத்தான்குளம் மாஜிஸ்திரேட் சரவணன் வரை இரண்டாம் படலம், மாஜிஸ்திரேட் சரவணனிடம் இருந்து கோவில்பட்டி கிளைச் சிறை வரை மூன்றாம் படலம் என்று இதைப் பிரித்துப் பார்க்க வேண்டியுள்ளது.

இந்த சம்பவத்தின் நீள அகலம், ஆழ உயரம் பற்றி பல்வேறு தரப்பினரிடையே மின்னம்பலம் டீம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்களைத் தொகுத்துத் தருகிறோம்.

யார் இந்த ஜெயராஜ், பென்னிக்ஸ்?

சாத்தான்குளம் அரசரடி விநாயகர் கோயில் தெருவில் சாதாரண ஓர் ஓட்டு வீட்டில் வசிப்பவர் ஜெயராஜ். மர வியாபாரி, குறிப்பாக பனைமரக் கட்டைகளை விற்பனை செய்பவர். இவருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன். மூன்று மகள்களுக்கும் திருமணம் முடித்துவிட்டார். மகன் பென்னிக்ஸ்

எம்.எஸ்.டபிள்யூ படித்திருக்கிறார். (மாஸ்டர் ஆஃப் சோஷியல் வொர்க்ஸ்). சாத்தான்குளம் பழைய பஸ் நிலையத்தில் ஏபிஜெ என்ற பெயரில் ஒரு செல்போன் கடை வைத்திருக்கிறார். சாதி மத பேதம் பார்க்காமல் எல்லாரிடமும் போலீஸார் உட்பட நன்றாக பழகக் கூடியவர் பென்னிக்ஸ் என்கிறார்கள் ஊரில். செல்போன் கடை என்பதால் பலர் வந்து போவார்கள். யாரிடமும் முகம் கோணாமல் கனிவாக பேசக் கூடியவர் பென்னிக்ஸ். யாருக்காவது ரத்தம் கொடுக்க வேண்டும் என்று போன் வந்தால் உடனே கடையை மூடிவிட்டு ரத்தம் கொடுக்கச் சென்றுவிடுவார். ரத்த தானத்தில் அவ்வளவு ஈடுபாடு மிக்கவர். இதுவரை பல முறை ரத்த தானம் கொடுத்திருக்கிறார்.

செல்போன் கடைதான் வாழ்வாதாரம் என்ற நிலையில் பென்னிக்ஸுக்கு திருமணமும் பேசிக் கொண்டிருந்தார்கள். நாசரேத்தை சார்ந்த ஒரு பெண்ணை சில மாதங்கள் முன்புதான் பேசி முடித்திருக்கிறார்கள். கொரோனா சீசன் என்பதால் திருமணத்தை டிசம்பரில் வைத்துக்கொள்வோம் என்று முடிவு செய்திருந்தார்கள். ஆனால் அதற்குள்ளாகவே இப்படி ஆகிவிட்டது. நாடார் சமூகப் பிடிப்பும் ஒற்றுமையும் அதிகம் உள்ள சாத்தான்குளத்தில் நாடார் சமூகத்தைச் சேர்ந்த பென்னிக்ஸ் மறைவுக்கு தேவர் சமுதாயம் சார்பில் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது பென்னிக்ஸின் பழக்கவழக்கத்துக்கு உதாரணம்.

செல்போன் கடை டு காவல் நிலையம்!

ஏபிஜெ செல்போன் கடைக்கு எதிர் சாரியில் எப்போதுமே சில ஆட்டோக்கள் நின்றிருக்கும். அந்த ஆட்டோக்கள் அவ்வப்போது மொபைல் பார் ஆகவும் அவதாரம் எடுப்பதுண்டு. அந்த வகையில் அந்த ஆட்டோவுக்குள் சாத்தான்குளம் போலீஸ் நிலைய காவலர்கள் சிலரும் எப்போதாவது மது அருந்துவதுண்டு. இதை அடிக்கடிப் பார்த்து கோபமாகும் ஜெயராஜ், தனது வாய்க்கு வந்தபடி அவர்களைத் திட்டி வைப்பார் என்கிறார்கள். சம்பவம் நடந்த ஜூன் 19ஆம் தேதிக்கு சில நாட்கள் முன்னர், ஒரு மாலை நேரத்தில் செல்போன் கடைக்கு எதிரே ஆட்டோவில் அமர்ந்து மது அருந்திய போலீஸ்காரரையும் அதேபோல திட்டித் தீர்த்திருக்கிறார் ஜெயராஜ். போகப் போக அவரது பேச்சில் வார்த்தைகள் தடிக்கவே , அதை செல்போன் கேமரா மூலம் படம் பிடித்திருக்கிறார் அந்த போலீஸ்காரர். அன்று ஜெயராஜ் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் என்று எல்லாரையும் சகட்டுமேனிக்குத் திட்டியிருக்கிறார். அந்த போலீஸ்காரர் செல்போனில் படம் பிடித்த அந்தக் காட்சியை இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கும், சப் இன்ஸ்பெக்டர்களுக்கும் ப்ளே செய்து காட்டியிருக்கிறார். அந்தக் காட்சிகளைப் பார்த்ததுமே கடுமையான கோபம் வந்திருக்கிறது இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு.

இவனைக் கொஞ்சம் பார்த்துக்கங்க என்று சப் இன்ஸ்பெக்டர்களிடம் சொல்லியிருக்கிறார். சில நாட்கள் கழித்து 18ஆம் தேதி மாலை 7 மணி அளவில் பழைய பஸ் நிலையம் அருகே சப் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், காவலர்கள் முத்துராஜ், ஜேசுராஜ் ஆகியோர் பேட்ரல் வாகனத்தில் வந்திருக்கிறார்கள். ஜெயராஜின் செல்போன் கடை வழியாக மெல்ல மெல்ல சென்றுகொண்டே கடைகளை மூடும்படி அறிவித்துக் கொண்டே செல்கின்றனர். ‘இதோ அடைச்சுடுறேன் சார்’ என்று சொல்லிக் கொண்டே கடையை அடைத்துவிட்டார் பென்னிக்ஸ். அப்போது கடையில் ஜெயராஜும் இருந்தார். ஆனால் மகன் பென்னிக்ஸும் இருந்ததாலோ என்னமோ போலீஸார் சென்றுவிட்டார்கள்.

மறுநாள் 19ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு மேல் கடையில் ஜெயராஜ் இருந்தார். பென்னிக்ஸ் பக்கத்தில் சென்றிருந்திருக்கிறார். அன்றைக்கும் எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், முத்துராஜ், ஜேசுராஜ் உள்ளிட்டோர் பேட்ரலில் வந்திருக்கிறார். கடை மூடவில்லையா என்று போலீஸார் கேட்க, ஜெயராஜ் அதற்குப் பதில் பேசியுள்ளார். ஏற்கனவே ஜெயராஜ் மீது கோபத்தில் இருந்த போலீஸார், இன்றும் அவர் வாக்குவாதம் செய்வதைப் பார்த்து கோபமாகியுள்ளனர். பேசிக் கொண்டிருக்கும்போதே, ‘நீ ஸ்டேஷனுக்கு வா’ என்று அவர் சட்டை காலரைப் பிடித்து வண்டியில் ஏற்றியுள்ளனர். கடுமையான வசைச் சொற்களையும் பயன்படுத்தியிருக்கிறார்கள் போலீஸார். இதைப் பார்த்துக்கொண்டே பென்னிக்ஸ் கடைக்கு வந்துவிட, என்ன ஏது என விசாரித்துள்ளார். ‘உங்க அப்பாவை ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டுப் போறோம். நீயும் வா’ என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டனர். இதில் இருந்து போலீஸாரின் கோபம் ஜெயராஜ் மீது மட்டுமே என்பது தெரிகிறது.

அப்பாவை போலீஸார் வண்டியில் ஏற்றிச் செல்வதைப் பார்த்த பென்னிக்ஸ் தனது நண்பர்களான ராஜாராம், கல்யாண சுந்தரம், ஆண்டன் பிரகாஷ் ராஜா ஆகியோருடன் இரவு 7.00 மணியளவில் காவல் நிலையத்துக்குச் சென்றிருக்கிறார்.

காவல் நிலையத்தில் நடந்தது என்ன?

சாத்தான்குளம் மெயின் ரோட்டில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டரில் அரசு மருத்துவமனை, கோர்ட், வட்டாட்சியர் அலுவலகம் என்று கடைசியாக காவல் நிலையம் அமைந்திருக்கும். அந்தப் பகுதியில் நின்று சத்தம் போட்டால்கூட ஊருக்குக் கேட்காது. அவ்வளவு உள்ளடங்கிய பகுதி அது.

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர். ஷீட் தீர்ந்து போய்விட்டது. அதனால் எஃப்.ஐ.ஆர். வரிசை எண் கொடுக்கப்பட்டு இரவு 10.00 மணிக்கு மேல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதுவும் ஏட்டு முருகன்தான் புகார் கொடுத்தவர். அதைப் பெற்றவர் எஸ்.ஐ. ரகுகணேஷ். கடையை ஏன் மூடவில்லை என்று கேட்டதற்கு போலீஸை திட்டிக்கொண்டே இருவரும் தரையில் விழுந்து புரண்டார்கள் என்றும், போலீஸாரை அடித்துக் கொன்றுவிடுவோம் என்றும் மிரட்டியதாகவும் ஏட்டு முருகன் புகார் கொடுத்திருந்தார். அதன்படியே அரசு ஊழியரைப் பணி செய்யவிடாமல் தடுத்தது, கொலை மிரட்டல் விட்டது என்று 188, 269, 294 பி, 353, 506(11) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தார்கள்.

அதாவது 7.00 மணிக்கு ஜெயராஜ் காவல் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார். பின்னாலேயே அவரது மகன் பரபரப்பாக ஓடிச் சென்றிருக்கிறார். அப்போது ஜெயராஜை 59 வயதானவர் என்றும் பாராமல் போலீஸார் தாக்கிக் கொண்டிருந்திருக்கிறார்கள். பென்னிக்ஸுக்கு தன் தந்தை மேல் பாசம் அதிகம். மர வியாபரத்தை விட்டுவிட்டு செல்போன் கடையில் உட்கார்ந்து வேலை பார் என்று சொல்லக் கூடியவர். அப்படிப்பட்டவரை போலீஸார் தாக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து டென்ஷனாகி, ‘சார் எங்க அப்பாவை விட்டுடுங்க. அது என்னோட கடைதான். நான்தான் பார்த்துக்கிட்டிருகேன். என்ன தப்பு பண்ணிட்டார்னு அடிக்கறீங்க?’ என்று கேட்டிருக்கிறார்.

‘உங்க அப்பாரு என்ன பேசினார்னு தெரியுமா உனக்கு?’ என்றிருக்கிறார்கள் போலீஸார். ‘என்னதான் பேசியிருக்கட்டும். அதுக்காக அடிப்பியலோ?’ என்று மீண்டும் கோபமாகியிருக்கிறார் பென்னிக்ஸ்.

‘அப்பன் சொத்துல பங்கு கேட்குறான் ஓய்... இவனுக்கும் கொடுங்க’ என்று சப் இன்ஸ்பெக்டர் சிரிக்க ஒரு கட்டத்தில் கோபம் அதிகமாகி போலீஸாரின் சட்டையைப் பிடித்திருக்கிறார் பென்னிக்ஸ்.

அவ்வளவுதான் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப் இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ், ஏட்டு முருகன், ஃபிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் உறுப்பினர்கள் என அனைவரும் சேர்ந்துகொண்டு ஜெயராஜையும், பென்னிக்ஸையும் தாக்கியிருக்கிறார்கள். தந்தையைப் பிடித்துக் கொண்டு மகனை அடித்திருக்கிறார்கள். மகனை பிடித்துக் கொண்டு தந்தையை அடித்திருக்கிறார்கள்.

அடுத்து வரும் வரிகளை மன வலிமை இல்லாதவர்கள் வாசிக்காதீர்கள்...

ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் காவல் நிலைய சுவரைப் பிடித்துக் கொண்டு நிற்க வைக்கப்படுகிறார்கள். ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் இருவர் அவர்களது இரு கைகளையும் சுவரோடு அழுத்திப் பிடித்துக் கொள்கிறார்கள். இன்னும் இருவர் காலை விரித்துப் பிடித்துக் கொள்கின்றனர் . கால் முட்டிகளை இருவர் அழுத்திப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். மொத்தம் ஆறு பேர் இப்படி இழுத்தும், அழுத்தியும் பிடித்துக் கொள்ள எந்த வகையிலும் தடுக்க முடியாத நிலையில் பென்னிக்ஸின் ஆசன வாயில் லத்தியை விட்டு செருகியிருக்கிறார்கள். வலியால் துடித்திருக்கிறார் பென்னிக்ஸ். அந்தக் கதறல் போலீஸ் நிலையத்தைத் தாண்டி வெளியே வரவில்லை. இதேபோன்ற ட்ரீட்மென்ட் ஜெயராஜுக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட பிரிவுகள் ஸ்டேஷன் ஜாமீனிலேயே விடக் கூடிய சாதாரண பிரிவுகள்தான்.

அன்று இரவு தகவல் அறிந்து ஜெயராஜின் மனைவியும், பென்னிக்ஸின் தாயாருமான ஜெயராணி தகவல் கேள்விப்பட்டு சாத்தான்குளம் காவல் நிலையம் சென்றபோது இருவரும் வலியால் முனகிக் கொண்டிருந்தார்கள். ‘எதுவா இருந்தாலும் கோர்ட்ல பார்த்துக்க போ’ என்று ஜெயராணியை போலீஸ் நிலையத்தில் இருந்து விரட்டிவிட்டார்கள் போலீஸார்.

மாஜிஸ்திரேட் மர்மங்கள்!

சாத்தான்குளம் சம்பவத்தில் இந்த படலம்தான் மிக முக்கியமானது. 19ஆம் தேதி இரவு போலீஸ் ஸ்டேஷனில் வைத்து தாக்கப்பட்ட ஜெயராஜும், பென்னிக்ஸும் மாஜிஸ்திரேட் சரவணன் முன்னால் ஆஜர்படுத்தப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். முதல் தகவல் அறிக்கையின்படி 19ஆம் தேதியே ஆவணம் மாஜிஸ்திரேட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களும் ஆஜர் செய்யப்பட்டிருக்க வேண்டும். இங்கேதான் சட்ட வட்டாரத்தில் சலசலப்புகள் எழுகின்றன.

பொதுவாகவே போலீஸ் ஸ்டேஷனில் இருந்து ஒருவரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப வேண்டுமானால் முதலில் மெடிக்கல் ரிப்போர்ட் வாங்க வேண்டும். அந்த மெடிக்கல் ரிப்போர்ட்டோடு மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்கோ, வீட்டுக்கோ ‘அழைத்துச் செல்லப்படுபவர்கள்’ மாஜிஸ்திரேட்டின் முன்பு நிறுத்தப்படுவார்கள். அவர்களை நீதிமன்றக் காவலுக்கு அனுப்புவதும், அல்லது அனுப்ப மறுப்பதும் மாஜிஸ்திரேட்டின் உரிமை. தன் முன்னால் நிறுத்தப்படுபவர்கள் போலீஸாரால் தாக்கப்பட்டிருக்கிறார்களா என்பதை மாஜிஸ்திரேட் உறுதி செய்துகொள்வார். அதற்காக விசாரணையும் நடத்துவார்.

‘ஏப்பா ஏதாவது சொல்ல விரும்புறியா?’ என்று மாஜிஸ்திரேட் கேட்பார். அதற்கு ஆஜர்படுத்தப்படுபவர் பதில் சொல்வார்.

‘போலீஸ் அடிச்சாங்களா?’ என்று கேட்பார். காயம் பட்டிருக்கிறார்களா என்று ஆராய வேண்டும்.

’ஐயா கடுமையா அடிச்சிருக்காங்க. ஆஸ்பத்திரிக்கு போனாதான் பொழைப்பேன்யா’ இப்படி ஏதாவது ஜெயராஜோ, பென்னிக்ஸோ சொல்லியிருக்க வேண்டும். தன் முன்னால் ஆஜர்படுத்தப்படுபவர்கள் என்ன சொன்னாலும் அதை ரிமாண்ட் ரிப்போர்ட்டின் பின் பக்கம் மாஜிஸ்திரேட் எழுதி கையெழுத்திட வேண்டும். தன் முன்னால் நிறுத்தப்பட்டிருப்பவர் நீதிமன்றக் காவலுக்கு செல்லும் நிலையில் இல்லை என்பதை உறுதிசெய்துகொண்டால் அவரை உடனடியாக ஜாமீனில் விடுவிக்கவும் மாஜிஸ்திரேட்டுக்கு பெரிய அதிகாரம் உண்டு.

இவ்வளவு வலியோடும், வேதனையோடும். காயத்தோடும் துடித்த ஜெயராஜும், பென்னிக்ஸும் சட்டப்படி மெடிக்கல் ரிப்போர்ட் வாங்கப்பட்டு சாத்தான்குளம் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்களா? இருந்தவர்களை நேரில் பார்த்து ஆய்வு செய்துதான் நீதிமன்றக் காவல் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படியெனில் மாஜிஸ்திரேட் சரவணனிடம் இவர்கள் ஆஜர்படுத்தப்பட்டார்களா, அவர் ஆய்வு செய்தாரா?

வழக்கறிஞர்கள் சிலரிடம் விசாரித்தபோது. “காவல் நிலையத்தில் இருந்து கோவில்பட்டி சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டது வரை இருவருக்கும் ஐந்தாறு கைலிகள் மாற்றப்பட்டிருக்கின்றன. ஏனெனில் ஒவ்வொரு கைலியிலும் அவ்வளவு ரத்தம். இந்த நிலையில் இருப்பவர்கள் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டிருந்தால் வழக்கான கேள்விகள் கேட்கப்பட்டிருக்க வேண்டும். அவர்களைப் பார்த்தாலே நீதிபதி சிறைக்கு அனுப்ப முடிவெடுத்திருக்க மாட்டார். எனவே கொரோனா காலத்தைப் பயன்படுத்தி இருவரையும் ஆட்டோவில் ஏற்றி மாஜிஸ்திரேட் வீட்டு வாசலிலேயே நிறுத்தி போலீஸார் மாஜிஸ்திரேட்டிடம் கையெழுத்து வாங்கியிருக்கிறார்கள். போலீஸார் இப்படியெல்லாம் தாக்கியிருப்பார்கள் என்பது தெரியாமல் மாஜிஸ்திரேட் கையெழுத்திட்டிருக்கிறார்’ என்கிறார்கள்.

கொரோனா காலத்தில் தேவையின்றி கைது நடவடிக்கைகள் கூடாது என்றும், சட்டம் ஒழுங்குக்குப் பெரிய அளவில் கேடு வரும் என்று கருதப்படக் கூடியவர்களை மட்டுமே கைது செய்யலாம் என்றும் உச்ச நீதிமன்றம் அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தியிருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது போடப்பட்ட வழக்குகளுக்கு உடனடியாக அவர்களை விடுவித்திருக்க முடியும். ஆனால், அப்படியும் கோவில்பட்டி சப் ஜெயிலுக்கு மாஜிஸ்திரேட் ஏன் அனுப்பினார் என்பதுதான் அடுத்த மர்மம்.

(சர்ச்சைகள் தொடரும்)

திங்கள், 29 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon