மின்வாரியத் தலைவர் விக்ரம் கபூர் மாற்றம்! பின்னணி என்ன?

public

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவராக இருந்த விக்ரம் கபூர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் சண்முகம் நேற்று (ஜூன் 7) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழக கூடுதல் தலைமைச் செயலாளரும், மின்சார வாரியம் மற்றும் தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தின் தலைவருமான விக்ரம் கபூர், சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் பிரதீப் யாதவுக்குத் தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மின்பகிர்மான கழக நிர்வாக இயக்குநராகக் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அடுத்த அறிவிப்பு வரும் வரை அவர் இந்தப் பதவியில் தொடருவார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறைச் செயலாளராக இருந்த சந்தீப் சக்சேனா, சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பதவியில் இருந்துவந்த ஷம்பு கல்லோலிகர் கைத்தறி, கைவினை மற்றும் ஜவுளித் துறை நிர்வாகச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவில்லை. இந்த நிலையில் இந்த மாதம் தொடக்கத்திலிருந்து ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் நடந்து வருகிறது. கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வந்த தமிழக சுகாதாரத் துறை திட்ட இயக்குநராக இருந்த நாகராஜ் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சித் துறை இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தற்போது மின் கட்டணம் பல மடங்கு உயர்ந்துவிட்டதாக அரசின் மீது பொதுமக்களும், எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டுகின்றன. இந்த நேரத்தில் மின்சார வாரியத்தின் தலைவர் என்ற உயர்ந்த பொறுப்பில் இருப்பவர் இட மாற்றம் செய்யப்பட்டது எதிர்க்கட்சிகளின் குரலுக்கும் மக்களின் அதிருப்திக்கும் மதிப்பளித்துதான் என்றும் ஒரு கருத்து உலவுகிறது.

ஆனால் அது தவறு. விக்ரம் கபூரின் இடமாற்றத்துக்கான காரணம் பற்றி கோட்டை வட்டாரத்தில் விசாரித்தபோது கிடைத்தது.

“தமிழகத்தின் முக்கியமான துறையான மின்சாரத் துறையின் அமைச்சர் தங்கமணி, முதல்வருக்கு நெருக்கமான சில அமைச்சர்களில் ஒருவரும்கூட. இந்நிலையில் மின்சார வாரியத்தில் அமைச்சர் தங்கமணியை மீறி விக்ரம் கபூர் செயல்பட்டு வருவதாக சில அதிகாரிகள் மூலம் அமைச்சருக்குத் தகவல் சென்றுகொண்டே இருந்தது.

குறிப்பாக 2006-11 திமுக ஆட்சிக் காலத்தில் மின்சார வாரியத்துக்கு மின்சாரம், மின் உபகரணங்கள் சப்ளை செய்தவர்களின் பில் அடுத்த ஆட்சிக் காலமான 2011-16 அதிமுக ஆட்சிக் காலத்தில் மின் துறை அமைச்சர் நத்தம் விசுவநாதனால் ஆராயப்பட்டது. அதில் பல குளறுபடிகள் இருப்பதாக அவர் கருதியதால் அந்த பில்கள் எல்லாம் அப்படியே நிறுத்தப்பட்டன. கோடிக்கணக்கான ரூபாய்களை மின்சார வாரியம் நிறுத்தி வைத்தது.

இந்த நிலையில்தான் மின்சார வாரிய தலைவர் விக்ரம் கபூர் தனது டெல்லி செல்வாக்கைப் பயன்படுத்தி, மின்சார வாரியத்தின் கணக்குத்துறை உயரதிகாரியிடம், திமுக ஆட்சிக் கால பில்களுக்கான தொகையை விடுவித்திருக்கிறார். அமைச்சர் சொல்கிறார், உடனே செய்யுங்கள் என்று விக்ரம் கபூர் வற்புறுத்த அந்த உயரதிகாரியும், ‘சேர்மனே சொல்கிறார். எப்படி அமைச்சரிடம் கிராஸ் செக் பண்ணுவது?’ என்று குழம்பியிருக்கிறார். ஒரு கட்டத்தில் தகவல் அமைச்சர் தங்கமணிக்கும், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் தெரியவர இருவரும் அந்தக் கணக்குத் துறை உயரதிகாரியிடம் பேசியிருக்கிறார்கள்.

அப்போதுதான் 2006-11 திமுக ஆட்சிக் காலத்தில் தமிழக மின்சார வாரியத்துக்கு தூத்துக்குடி பகுதியில் மின் சப்ளை செய்த இன் பாரத் என்ற நிறுவனத்தின் சேர்மன் ரகுவுக்கு பல கோடி ரூபாய் பாக்கி அண்மையில் செட்டில் செய்யப்பட்டது என்று தெரியவந்திருக்கிறது. அந்த ரகு பாஜகவுக்கு நெருக்கமானவர். தமிழகத்தில் எம்.பி சீட் கேட்டு கிடைக்காமல் அவர் இப்போது ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து எம்.பி ஆகிவிட்டார். இப்படி திமுக ஆட்சிக் கால பில்களை செட்டில் செய்வதில் விக்ரம் கபூருக்கு என்ன அலாதியான ஆர்வம் என்று கோபமடைந்துதான் அவரை மின்வாரியத் தலைவர் பதவியில் இருந்து அகற்றியிருக்கிறார்கள்.

மேலும் கூவக் கரையோரம் சூரிய மின்சாரத் தகடுகளைப் பதிக்கும் திட்டத்தின் கீழ் தங்கமணியும், எடப்பாடியும் ஒரு நிறுவனத்தை சிபாரிசு செய்ய, விக்ரம் கபூரோ தன் செல்வாக்கைப் பயன்படுத்தி இன்னொரு நிறுவனத்துக்கு சிபாரிசு செய்திருக்கிறார். இப்படி அமைச்சரோடும் முதல்வரோடும் ஏற்கனவே கருத்து வேறுபாடு கொண்டிருந்த கபூரை, இப்போது இந்த பில் செட்டில் காரணத்தைக் காட்டி மாற்றிவிட்டனர். மற்றபடி மக்கள் பிரச்சினைக்காக அல்ல” என்கிறார்கள்.

-வேந்தன், எழில்�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *