bகொரோனா பாதிப்பு: மறைக்கும் பிரேசில்!

public

உலகில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்திருப்பது பிரேசில். இந்த நாட்டில் இதுவரை 6,91,962 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் உலகில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் உள்ள நாடுகள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது பிரேசில். கொரோனாவால் இதுவரை பிரேசில் நாட்டைச் சேர்ந்த 36 ஆயிரத்து 455 பேர் உயிரிழந்துள்ளனர் என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமையிலிருந்து பிரேசில் அரசு கொரோனா பாதிப்புகள் அடைந்தவர்கள் மற்றும் மரணமடைந்தவர்கள் விகிதத்தை வெளியிடுவதை நிறுத்தியுள்ளது. அதன் அரசு தளத்தில் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்த தகவல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் கொரோனா பாதிப்பு விவரங்களை மறைக்க அரசு முயற்சி செய்வதாக பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி உள்ளது பிரேசில் அரசு.

தகவல்கள் வெளியிடப்படாததால் கோபம் அடைந்த மக்கள் வீதிகளில் இறங்கி போராடத் தொடங்கியிருக்கிறார்கள். ”கொரோனா ஊரடங்கையும் தாண்டி நான் இப்போது போராடவேண்டிய நிலையில் உள்ளேன். நான் எங்கள் அனைவருக்காகவும் போராட வேண்டியுள்ளது” என்று போராட்டக்காரர்களில் ஒருவர் அல்ஜசீரா செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாயிட் கொலை செய்யப்பட்டது தொடர்பாக போராட்டங்கள் தொடர்ந்து பிரேசிலில் நடைபெற்று வரும் நிலையில் தற்போது பிரேசில் அரசுக்கு எதிராகவும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது

தகவல்களை வெளியிடுவதை நிறுத்திய முடிவு அதிபர் போல்சொனாரோவின் முடிவு என அதிகாரிகள் வட்டம் தெரிவிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஒரு தொற்று நோய் பாதிப்பை அறிவியலும், வெளிப்படைத்தன்மையும் சரியான செயல்பாடுகளும் இல்லாமல் குணப்படுத்த முடியாது என வடமேற்கு மாகாணத்தின் கவர்னர் கூறியுள்ளார். தகவல்கள் வெளியிடுவது நிறுத்தப்பட்டது குறித்து பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

**பவித்ரா குமரேசன்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *