மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 6 ஆக 2020

ஸ்டாலின் செய்துகொண்ட கொரோனா சோதனை!

ஸ்டாலின் செய்துகொண்ட கொரோனா சோதனை!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொரோனா ஊரடங்கை ஒட்டி தனது தொகுதியான கொளத்தூர் தொகுதி உட்பட சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் நிவாரணப் பொருட்களை வழங்கினார். சமூக இடைவெளியோடும், கையுறை, மாஸ்க் அணிந்துகொண்டும் இந்த நிவாரண நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார் ஸ்டாலின்.

இது தவிர காணொலிக் காட்சி மூலமாக மாசெக்கள், எம்பிக்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை நடத்திய ஸ்டாலின், “ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் மக்களுக்கு உதவும் திமுக நிர்வாகிகள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்” என்றும் தொடர்ந்து நிர்வாகிகளை எச்சரித்து வந்தார். இந்நிலையில் திமுக மாசெ அன்பழகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதை அறிந்து மிகவும் வருத்தத்தில் இருந்தார் ஸ்டாலின்.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக் கிழமை ஜூன் 5 ஆம் தேதி ஸ்டாலினுக்கு தொடர்ந்து இருமல் ஏற்பட்டது. லேசாக காய்ச்சலும் வருவது போல் தெரிந்தது. இதையடுத்து ஸ்டாலினுடைய குடும்பத்தினர் பயந்துபோய்விட்டனர். கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பல்வேறு நிவாரண நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட தனக்கு இருமல் என்றதும் ஒருவேளை வைரஸ் தொற்று இருக்குமோ என்ற சந்தேகம் ஸ்டாலினுக்கே ஏற்பட்டிருக்கிறது. தொடர் இருமல், காய்ச்சல் இருந்தால் கொரோனா அறிகுறியாக இருக்கலாம் என்று சுகாதாரத் துறை தொடர்ந்து சொல்லி வரும் நிலையில் ஸ்டாலின் குடும்பத்தினர் மிகவும் கவலைப்பட்டனர்.

உடனடியாக ஜூன் 5 ஆம் தேதியே காதுமூக்கு தொண்டை ஸ்பெஷலிஸ்டான டாக்டர் மோகன் காமேஸ்வரனை போய்ப் பார்த்திருக்கிறார் ஸ்டாலின். அவரிடம் விவரத்தைச் சொன்னதும், அவர், ‘எதற்கும் கொரோனா டெஸ்ட் எடுத்துப் பார்த்துவிடுவோம்’ என்று கூறி டெஸ்டுக்கு எழுதிக் கொடுத்திருக்கிறார். அதன்படி ஸ்டாலினின் சேம்பிள் சோதனைக்கு அனுப்பப்பட்டது. முடிவு வரும் வரை சில மணி நேரங்கள் ஸ்டாலின் குடும்பத்தினருக்கு நிம்மதியே இல்லை.

சில மணி நேரங்கள் கழித்து கொரோனா நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்ததும்தான் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கின்றனர். முன்பைவிட பாதுகாப்பாக எச்சரிக்கையாக இருக்குமாறு ஸ்டாலினை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் அவரது குடும்பத்தினர்.

-வேந்தன்

ஞாயிறு, 7 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon