மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 20 ஜன 2021

கண் விழித்தார் ஜெ.அன்பழகன்

கண் விழித்தார் ஜெ.அன்பழகன்

ஜூன் 2 ஆம் தேதி சென்னை குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட திமுக மாசெவும், சட்டமன்ற உறுப்பினருமான ஜெ. அன்பழகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில்... ஐசியுவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்றைய நிலவரப்படி அவரது உடல் நிலையில் முன்னேற்றம் தென்பட்டு வருகிறது.

ஜூன் 4 ஆம் தேதி ரேலா மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பில், “ஜெ. அன்பழகனுக்கு 80% செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டது. ஜூன் 5 ஆம் தேதி சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ரேலா மருத்துவமனைக்குச் சென்று அன்பழகனின் உடல் நிலை பற்றி விசாரித்து அறிந்தார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ரேலா, “ஜெ. அன்பழகனின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. அவருக்கு செயற்கை சுவாசத்தின் தேவை 45% ஆகக் குறைந்திருக்கிறது’ என்று தெரிவித்தார். இதற்கிடையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரேலா மருத்துவமனை மருத்துவர்களைத் தொடர்புகொண்டு அன்பழகனின் உடல் நலம் பற்றி விசாரித்தார்.

நேற்று ஜூன் 6 ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் ரேலா மருத்துவமனைக்குச் சென்றார். அங்கே டாக்டர் ரேலாவை சந்தித்து அன்பழகனின் உடல் நிலை பற்றி கேட்டறிந்தார். அப்போது முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் எம்பி, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உடன் இருந்தனர். நேற்று நடந்த சந்திப்பின் போது அன்பழகனின் உடல் நிலை முன்னேற்றம் கண்டுவருவதாக ஸ்டாலினிடம் கூறியிருக்கிறார் மருத்துவர் ரேலா.

இந்த சூழலில் இன்று (ஜூன் 7) ஆம் தேதி மாலை ரேலா மருத்துவமனையில் இருந்து திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஒரு தகவல் தெரிவிக்கப்பட்டது.

“ஜெ. அன்பழகனுக்கு கொடுக்கப்படும் சிகிச்சையை அவரது உடல் நன்றாக ஏற்றுக் கொள்கிறது. மெல்ல மெல்ல வென்டிலேட்டரின் தேவை குறைந்து வருகிறது. இப்போது அன்பழகனுக்கு செயற்கை சுவாசம் 30% அளவுக்குத்தான் தேவைப்படுகிறது. 70% அவரே சுவாசிக்கிறார். உடல் நிலைக்கேற்ப படிப்படியாக மயக்க மருந்துகள் குறைக்கப்பட்ட நிலையில் இன்று ஜெ, அன்பழகன் கண் விழித்துப் பார்த்தார். இப்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறார்” என்ற தகவல் ஸ்டாலினுக்கு தெரிவிக்கப்பட, அவர் மகிழ்ந்திருக்கிறார்.

ரேலா மருத்துவமனை வாசலில் அன்பழகனின் உடல் நிலை பற்றி அறிய இன்றும் திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் பரபரப்பாக காத்திருக்கின்றனர்.

-வேந்தன்

ஞாயிறு, 7 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon