மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 10 ஆக 2020

தமிழக வழிபாட்டுத் தலங்கள் திறப்பு இப்போதைக்கு இல்லை!

தமிழக வழிபாட்டுத் தலங்கள் திறப்பு இப்போதைக்கு இல்லை!

மத்திய அரசு நாளை (ஜூன் 8) முதல் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க அனுமதி அளித்த போதிலும், தமிழகத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்களைத் திறக்க இன்னும் முடிவு செய்யவில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நாட்டின் பல்வேறு இடங்களிலும் உள்ள வழிபாட்டுத் தலங்களைத் திறக்க மத்திய அரசு நாளை (ஜூன் 8) முதல் அனுமதி அளித்துள்ளது. இதனால் ஒவ்வொரு மாநிலங்களும் வழிபாட்டுத் தலங்களை திறக்க ஏற்பாடு செய்து வருகின்றன.

குறிப்பாக கேரளாவில் சபரிமலை திறக்கப்படும் என்றும், ஆந்திராவில் திருப்பதி தேவஸ்தானம் திறக்கப்படும் என்றும் அம்மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் முக்கிய வழிபாட்டுத் தலமான பழநி முருகன் கோயிலைச் சில கட்டுப்பாடுகளுடன் விரைவில் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் மாநில தலைமைச் செயலாளர், திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பினர்.

அதில், “கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து பழநி முருகன் கோயில் மூடப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கும் தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக பழநிக்கு பக்தர்கள் வரவில்லை. பழநிக்கு வரும் பக்தர்களை நம்பியே அடிவாரம் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட வியாபார கடைகள் செயல்பட்டு வருகின்றன.

ஊரடங்கு உத்தரவு காரணமாக வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது ஊரடங்கில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் வருகிற 8ஆம் தேதி முதல் திறக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது வியாபாரிகளுக்கு சற்று ஆறுதல் அளிக்கிறது. ஆனால் மாநில அரசு மறு உத்தரவு வரும் வரை வழிபாட்டுத் தலங்களுக்கான தடை நீடிக்கும் என அறிவித்துள்ளது. இது வியாபாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என்று கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்களை திறப்பது குறித்து தலைமைச் செயலாளர் மதத்தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதனால் கோயில்கள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தமிழகத்தில் நாளை வழிபாட்டுத் தலங்களை திறப்பது குறித்து முடிவு செய்யவில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. நோய் தொற்று குறையாத காரணத்தால் தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஞாயிறு, 7 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon