மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 19 ஜன 2021

குற்றாலத்தில் சீசன்: அருவியில் குளிக்க அனுமதி கிடைக்குமா?

குற்றாலத்தில் சீசன்: அருவியில் குளிக்க அனுமதி கிடைக்குமா?

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருவதால் குற்றாலத்தில் சீசன் தொடங்கியுள்ளது. ஆனாலும் கொரோனா ஊரடங்கால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் அருவிகள் வெறிச்சோடி காணப்படுகிறது. இந்த நிலையில் அருவியில் குளிக்க அனுமதி கிடைக்குமா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தென்தமிழகத்தின் மிகச்சிறந்த சுற்றுலாத் தலமான குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் சீசன் தொடங்கும். வழக்கமாக தென்மேற்கு பருவமழை இந்த மாதத்தில் தொடங்கும். அப்போது மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்யும். அந்த நேரத்தில் குற்றாலத்தில் சாரல் மழை பெய்து சீசன் தொடங்கும். இந்த சீசனை அனுபவிக்க லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலம் வந்து செல்வார்கள்.

தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் இருந்தே சாரல் மழை சற்று அதிகமாக பெய்தது. இதைத்தொடர்ந்து மெயின் அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் அனைத்திலும் சாரல் மழையுடன் இதமான சூழல் நிலவுவதால் சீசன் தொடங்கியுள்ளது.

இந்த ரம்மியமான சூழலைச் சுற்றுலாப் பயணிகள் அனுபவிக்க முடியாத நிலையில் குற்றாலம் உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டு சுற்றுலா பயணிகள் வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் குற்றாலத்திற்கு சுற்றுலாப்பயணிகள் வர முடியாத சூழ்நிலை உள்ளது. அருவிகளில் தண்ணீர் விழுந்தாலும் அருவிக்கரைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.

ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் சுற்றுலாத் தலங்களுக்கும் தளர்வுகள் அறிவிக்க வேண்டும் என்று குற்றாலவாசிகளும் வர்த்தகர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஞாயிறு, 7 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon