மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 10 ஆக 2020

சண்டே ஸ்பெஷல்... ஒரு பொருள் பல சுவை!

சண்டே ஸ்பெஷல்... ஒரு பொருள் பல சுவை!

பலகாரங்கள் செய்வதற்கான மாவு தயாரிக்கும்போது சில நேரத்தில் மாவு மீதமாகிவிடும். அந்த மாவை வைத்து வேறு பலகாரங்கள் செய்ய முடியுமா?

நிச்சயம் முடியும். உதாரணத்துக்கு...

வெந்தய தோசை

நான்கு கப் புழுங்கல் அரிசி, கால் கப் உளுத்தம்பருப்பு, இரண்டு டேபிள்ஸ்பூன் வெந்தயம், மூன்று டேபிள் ஸ்பூன் ஜவ்வரிசி ஆகிய அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து நன்கு களைந்து தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற விடவும். பின்னர் தேவையான தண்ணீர்விட்டு கெட்டியாக மைய அரைத்துக்கொள்ளவும். அரைத்த மாவை எட்டு மணி நேரம் புளிக்கவிடவும். உப்பு சேர்க்க வேண்டாம். எட்டு மணி நேரம் கழிந்து மாவைப் பாதியாகப் பிரிக்கவும். மாவின் ஒரு பாதியில் தேவையான அளவு உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர்விட்டு தோசை மாவுப் பதத்துக்குக் கரைத்துக்கொள்ளவும். பிறகு மாவை தோசைக்கல்லில் தோசையாக ஊற்றி அதன் ஓரங்களில் சிறிதளவு எண்ணெய் விட்டு ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபுறமும் வெந்ததும் எடுக்கவும். சட்னி, வடகறி, சாம்பாருடன் இந்த வெந்தய தோசையைப் பரிமாறவும்.

இனிப்புக் குழிப்பணியாரம்

வெந்தய தோசை செய்ததுபோக மீதமுள்ள பாதி அளவு மாவில் ஒரு கப் துருவிய வெல்லம், ஒரு டீஸ்பூன் ஏலக்காய்த்தூள் மற்றும் ஐந்து டேபிள்ஸ்பூன் துருவிய தேங்காய் ஆகிய மூன்றையும் சேர்த்து இட்லி மாவுப் பதத்தில் கலந்து கொள்ளவும். தேவைப்பட்டால் மட்டும் சிறிது நீர் விட்டுக் கலந்துகொள்ளலாம். பிறகு பணியாரக்கல்லில் சிறிதளவு எண்ணெய் விட்டுச் சூடாக்கவும். பின்னர் குழிகளில் மாவை ஊற்றி பணியாரங்களாகச் சுட்டெடுக்கவும்.

குறிப்பு: பணியாரக் குழிகளில் எண்ணெய்க்குப் பதில் விருப்பப்பட்டால் சிறிதளவு நெய்யும் சேர்க்கலாம், இந்த இனிப்புக் குழிப்பணியாரத்துக்குத் தொட்டுக்கொள்ள எதுவுமே வேண்டாம்

குழிப்பணியாரம் வேண்டாமென்றால் வெந்தய தோசை செய்ததுபோக மீதமிருக்கும் பாதியளவு மாவைப் பயன்படுத்தி ஆப்பம் கூடச் செய்யலாம்.

ஆப்பம்

பாதியளவு மாவுடன் ஒரு டீஸ்பூன் ஏலக்காய்த்தூள், ஒரு கப் வெல்லம் சேர்க்கவும். இத்துடன் சிறிதளவு நீர்விட்டுக் கலந்துகொள்ளவும். தவாவில் எண்ணெய் தடவிச் சூடாக்கி கலந்துவைத்திருக்கும் மாவை ஒரு கரண்டி அளவுக்கு எடுத்து தவாவில் ஊற்றி மூடி வைக்கவும். ஆப்பம் வெந்ததும் அப்படியே எடுக்கவும். திருப்பிப் போடத் தேவையில்லை. ஆப்பத்தின் மேல் தேவையான அளவு தேங்காய்ப்பால் ஊற்றிச் சுவைக்கலாம்.

சனி, 6 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது