மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 10 ஆக 2020

இந்திய - சீன எல்லை: ஊடகங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

இந்திய - சீன எல்லை: ஊடகங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

இந்திய - சீன எல்லையில் கடந்த சில வாரங்களாக நடக்கும் நிகழ்ச்சிகள் குறித்து பல ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் இரு நாடுகளின் ராணுவ லெப்டினென்ட் ஜெனரல் அளவிலான பேச்சுவார்த்தை நேற்று (ஜூன் 6) நடந்தது. இந்தியத் தூதுக் குழுவுக்கு லெப்டினென்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் தலைமை தாங்கினார். சீனத் தரப்பு, திபெத் ராணுவ மாவட்டத் தளபதி ஒருவரை நியமித்தது. கூட்டம் நேற்று காலை 8:30 மணிக்கு நடத்த திட்டமிடப்பட்டிருந்தாலும் காலை 11:30 மணிக்கே தொடங்கியது.

இந்திய மற்றும் சீனத் தூதர்கள் தங்கள் எல்லைப் பணிப் பொறிமுறை தொடர்பாக அரசியல் ரீதியாகக் காணொலி முறையில் ஜூன் 5ஆம் தேதி பேச்சுகள் நடத்திய நிலையில், ராணுவ அளவில் இந்தப் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. தூதரக அளவிலான சந்திப்பில், “இரு தரப்பினரும் தங்கள் கருத்து வேறுபாடுகளை அமைதியான கலந்துரையாடலின் மூலம் கையாள வேண்டும். அதை மோதல்களாக மாற்ற அனுமதிக்கக் கூடாது” என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினர்.

இந்த நிலையில் மத்திய அரசின் பத்திரிகைத் தகவல் அலுவலகம் நேற்று (ஜூன் 6) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இந்திய - சீனா எல்லைப் பகுதியில் தற்போது நிலவும் சூழ்நிலைக்குத் தீர்வு காணும் வகையில், இந்திய, சீன அதிகாரிகள் ராணுவம் மற்றும் ராஜாங்க ரீதியில் உருவாக்கப்பட்ட வழிகள் மூலமாகத் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். எனவே, இந்த நிலையில், இந்த ஈடுபாடுகள் குறித்து யூகமாகவோ, ஆதாரமற்றத் தகவல்களையோ வெளியிடுவது உதவிகரமாக இருக்காது. எனவே, ஊடகங்கள் இத்தகைய செய்திகளை வெளியிடுவதிலிருந்து விலகியிருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றன” என்று எச்சரிக்கை தொனியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வேந்தன்

ஞாயிறு, 7 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon