மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 10 ஆக 2020

கொரோனா செய்த திருமணச் சீர்திருத்தம்!

கொரோனா செய்த திருமணச் சீர்திருத்தம்!

ஐரோப்பாவில் கொள்ளை நோய் சிறப்புத் தொடர்-5

முனைவர் க.சுபாஷிணி

கடந்த வாரப் பதிவில் சீனாவுக்கு அருகிலிருந்தாலும் பெருமளவில் பாதிப்பை அடையாமல் கொரோனா தொற்று பரவத் தொடங்கிய காலகட்டத்தில் ஹாங்காங் மேற்கொண்ட நடவடிக்கைகளும், அதனால் பெரும் பாதிப்பிலிருந்து தப்பித்துக்கொள்ள முடிந்தமையும், உலக சுகாதார நிறுவனமும்கூட இதற்கு கவனம் வழங்கி இதுபற்றி வெளிப்படையாகப் பேசாமல் தவறியது பற்றிய செய்தியையும் குறிப்பிட்டிருந்தேன்.

இவ்வாண்டு மார்ச் 31 நிலவரப்படி, இப்பகுதியில் COVID-19 உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் 715 பேருக்கு மட்டுமே அன்றைய தேதிபடி தொற்று ஏற்பட்டிருப்பது அறியப்பட்டது. 7.5 மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஹாங்காங்கில் இன்று வரை நான்கு இறப்புகள் மட்டுமே நிகழ்ந்திருக்கின்றன. பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை சுகாதார நடவடிக்கைகளை மிகத் துரிதமாக உடன் அமல்படுத்தியதைத் தொடர்ந்து, தொற்றுநோய் அதிகரிப்பதைவிட கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து நோய் தொற்று ஏற்பட்ட 1,103 பேரில் 1,045 பேர் குணமடைந்துவிட்ட நிலையில், நோய்ப் பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை ஹாங்காங்கின் நிபுணர்கள் கண்டறிந்தனர். இதனால் ஹாங்காங் முழுமைக்கும் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் முழுமையான ஊரடங்கைச் செயல்படுத்தாமல் தொடர முடிந்தது.

கொரோனா வைரஸ் கொள்ளை நோய் இன்று பெரும் பொருளாதார பாதிப்பை உலகெங்கிலும் ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியும் இதில் விதிவிலக்கல்ல!

இரண்டு நாள் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ஜெர்மன் சேன்சலர் அங்கேலா மேர்க்கெல் தனது கூட்டணி அரசுடன் கலந்தாலோசித்து ஒரு முக்கியமான செயலறிக்கையைச் சில தினங்களுக்கு முன் வெளியிட்டார். இது, பயனீட்டாளர் செலவினங்களை அதிகரிக்கும், புதிய திட்டங்களில் முதலீடு செய்யும் முயற்சிகள் மற்றும் பொதுமக்கள் மீதான நிதி நெருக்கடியை எளிதாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள அறிக்கையாகக் காணப்படுகிறது.

ஏறக்குறைய ஒரு மாத ஊரடங்குக்குப் பிறகு ஏப்ரல் 20ஆம் தேதி ஜெர்மனி கொரோனா வைரஸ் நடவடிக்கைகளைத் தளர்த்தத் தொடங்கியது. இது மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது ஒப்பீட்டளவில் விரைவான தளர்வு அறிவிப்பாகவே இருந்தது. ஆனாலும்கூட நாட்டின் பொருளாதாரம் 2020 முதல் காலாண்டில் மந்தநிலைக்குச் சென்றது. நடப்பு காலாண்டில் பொருளாதாரச் சரிவு அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெர்மனியில் மே மாதத்தில், வேலையின்மை 5.8 சதவிகிதத்திலிருந்து 6.3 சதவிகிதமாக உயர்ந்தது. இம்மாதம் இந்த எண்ணிக்கை மேலும் கணிசமாக உயர வாய்ப்புள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் ஜெர்மனியில் இயங்கும் நிறுவனங்களில் ஏழு மில்லியனுக்கும் அதிகமான ஊழியர்களின் வேலை நேரத்தைக் குறைப்பது மற்றும் சம்பளத்தைக் குறைப்பது ஆகியவை நடைமுறைப்படுத்தப்பட்டன.

இந்தப் பொருளாதார பாதிப்பை எதிர்கொள்ளச் சரியான நடைமுறை செயல்பாடு தேவை என்பது அவசியம் என்பதால் மெர்க்கெல் தலைமையிலான அரசு, பொது மக்களின் தொழில் பாதுகாப்பு, மந்தமாகிச் சரிந்து வீழ்ந்திருக்கும் பொருளாதாரத்தை இயங்க வைப்பது அல்லது மீண்டும் தொடரச் செய்வது என்ற வகையில் நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் தொடங்க உதவும் வகையில் ஜெர்மனியின் ஆளும் கூட்டணி அரசு 3.6.2020 அன்று 130 பில்லியன் டாலர் ஊக்க நிதியைப் பயன்படுத்த அங்கீகரித்து ஒதுக்கியது.

இது இப்படியிருக்க, பொதுவாகவே கோடைக்கால தொடக்கத்தில் ஐரோப்பாவெங்கும் திருமணங்கள் களைக்கட்டத் தொடங்கிவிடுவது இயல்பான ஒன்றுதான். இந்தியர்கள் அல்லது துருக்கியர்கள் போல ஐந்நூறு அல்லது ஆயிரம் விருந்தினர்கள் என்றில்லாமல் பொதுவாகவே ஐரோப்பியத் திருமணங்கள் (துருக்கியர், தமிழர் குடும்பங்கள் தவிர்த்து) மிகக் குறைவான எண்ணிக்கையில்தான் விருந்தினர்களை அழைப்பர். பொதுவாக மண்டபங்களில் நெருங்கிய உறவினரும் நெருங்கிய நட்புகளுமாக நூறு பேருக்குக் குறையாத எண்ணிக்கையில் சூழ்ந்திருப்பர். ஆனால், கொரோனா கொள்ளை நோய் தாக்கியுள்ள இக்காலகட்டத்தில் திருமணங்கள் நடைபெறுவது தடைப்பட்டிருந்தது. பெல்ஜியத்தில் இவ்வாரம் ஒரு திருமணம் விருந்தினர்கள் சூழ நடந்திருக்கிறது. பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் மற்றும் ஆண்ட்வெர்ப் இடையே உள்ள ஒரு சிற்றூரில் கடந்த சனிக்கிழமை ஒரு தம்பதியர் திருமணம் செய்து கொண்டனர்.

மார்ச் மாதத்தில் ஐரோப்பா முழுமைக்கும் ஊரடங்கு விதிக்கப்பட்ட பின்னர் அழைக்கப்பட்ட விருந்தினர்களின் முன்னிலையில் திருமணம் செய்துகொண்ட ஐரோப்பாவின் முதல் ஜோடிகளில் இவர்களும் அடங்குவர். இங்கு தற்சமயம் அதிகபட்சம் 25 விருந்தினர்களுடன் திருமணங்களை அனுமதிக்கத் தொடங்கியுள்ளனர். ஆனாலும் அதிகாரபூர்வ கையெழுத்துகள் இடப்படும் அலுவலக அறைக்குள் விருந்தினர்கள் அனுமதிக்கப்படாமல் வெளியே இருந்து வாழ்த்தி அதன் பின்னர் தம்பதியர் வெளிவந்ததும் அவர்களுக்குத் தனித்தனியாக ஒவ்வொருவராக வந்து வாழ்த்துச் சொல்லிச்செல்லும் வகையில் சற்று கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளனர். திருமணத்துக்கு வந்தவர்களுக்கு விருந்தும் வழங்கவில்லை என்றும் குறுகிய நேரத்து நிகழ்ச்சியாகவே தம்பதியர் திருமணச் சடங்கை முடித்துக்கொள்கின்றனர்.

இவ்வகை திருமணங்கள் ஆசியாவிலும் குறிப்பாகத் தமிழகத்திலும் பல நடந்து விட்டன. எனது நண்பர்கள் சூழலிலேயே இவ்வாரம் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் அமெரிக்கா, மலேசியா, தமிழகம் எனப் பல இடங்களில் திருமணங்கள் நடைபெறுகின்றன. மிகக் குறைந்த அளவில் மிக நெருங்கிய உறவினர்கள் மட்டும் சூழ தமிழ் மக்களும் தங்கள் இல்லங்களிலேயே திருமணத்தை முடித்துக்கொள்கின்றனர்.

கொரோனா வைரஸ் நுண்கிருமி நமது ஒட்டுமொத்த தமிழ்ச்சமுதாயத்தின் சிந்தனைப் போக்கில் செய்திருக்கும் பல வகையான நன்மைகளில் இதையும் மிக முக்கியமானதாகவே நான் காண்கின்றேன். வெளி உலகத்தார் தம்மைப் புகழ வேண்டும் என்பதற்காகவே கடன் வாங்கி திருமணங்களையும் திருமண விருந்து நிகழ்ச்சிகளையும் செய்து கடன்காரர்களாகிவிடும் லட்சக்கணக்கான தமிழ் மக்கள் இப்போது கச்சிதமாக தங்கள் வருமானத்துக்கேற்ற வகையில் அன்றைய நாளில் மகிழ்வுடன் திருமணம் செய்துகொண்டு, தங்கள் பணத்தை மிச்சப்படுத்தி விட முடிகிறது. இதனால் புதிதாக குடும்பத்தைத் தொடங்கும் தம்பதியர் தங்கள் தேவைகளுக்கு அப்பணத்தைப் பயன்படுத்திக்கொள்ள இது ஒரு நல்வாய்ப்பாகத்தான் நாம் கருத வேண்டும்.

இது இப்படியிருக்க... ஐரோப்பா முழுவதும் சில முக்கிய அரசியல் தலைவர்கள் கொரோனா கொள்ளை நோய் காலத்து ஊரடங்கு விதிகளை மீறியதற்காகக் குறை சொல்லப்படும் நிகழ்ச்சிகளும் கடந்த சில நாட்களில் நடந்திருக்கின்றன.

ஐரிஷ் பிரதமர் லியோ வரட்கார் மேலாடை இல்லாமல் தனது துணைவியாருடன் ஒரு பூங்காவில் மேலும் இரண்டு நண்பர்களுடன் அமர்ந்து பேசி மகிழ்ந்து கொண்டிருக்கும் புகைப்படங்கள் பத்திரிகையில் வெளிவந்தன. ஊரடங்கின்போது பொது மக்களுக்கு ஒரு மோசமான உதாரணமாக இதைச் சிலர் விமர்சித்திருந்தனர். இதையடுத்து அவரது அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர், லியோ வரட்கார் கோவிட்-19 விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றுவதாகவே செய்தித் தொடர்பாளர்களிடம் விளக்கியிருந்தார்.

ஆஸ்திரியாவின் ஜனாதிபதி அலெக்சாண்டர் வான் டெர் பெல்லன் ஞாயிற்றுக்கிழமை தனது ஒரு செயலுக்காக மன்னிப்பு கேட்ட நிகழ்ச்சியும் நடந்தது. இருவரும் ஓர் உணவகத்தில் நீண்ட நேரம் அமர்ந்து உணவருந்திக்கொண்டிருந்ததாகவும் அங்குவந்த காவல் அதிகாரிகள் இதைக் கண்டித்ததாகவும் செய்திகள் வெளிவந்தன. “மகிழ்ச்சியாக உணவருந்திப் பேசிக்கொண்டிருந்தபோது நாங்கள் நேரம் செல்வதை மறந்து விட்டோம். நான் உண்மையிலேயே இதற்காக வருந்துகிறேன். இது தவறுதான். உணவக உரிமையாளருக்கு எனது செயலால் ஏதேனும் சேதம் ஏற்பட்டால், அதற்கானப் பொறுப்பை நான் ஏற்றுக்கொள்வேன்” என்று ஆஸ்திரிய ஜனாதிபதி வருத்தம் தெரிவித்து மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.

ஆஸ்திரியாவில் யாராக இருந்தாலும் தவற்றுக்கு மன்னிப்பு கேட்பது இயல்புதான் என்றாலும், நமது சிந்தனைச் சூழலில் ஒரு ஜனாதிபதி இப்படி தனது தவற்றை உணர்ந்து மன்னிப்புக் கேட்டு வெளிப்படையாக ஒப்புக்கொள்வதை நாம் அதிசயமாகத்தான் பார்ப்போம், இல்லையா? ஆஸ்திரியாவில் ஜனாதிபதியைப் போல ஆஸ்திரியாவின் அதிபர் செபாஸ்டியன் குர்ஸ் மன்னிப்பு கேட்கும் ஒரு சூழலும் இந்தக் காலகட்டத்தில் நிகழ்ந்துள்ளது. ஆஸ்திரிய-ஜெர்மானிய எல்லைக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் பொது மக்கள் சந்திப்பில் முகக்கவசம் அணியாததற்காக ஆஸ்திரியாவின் அதிபர் செபாஸ்டியன் குர்ஸ் மன்னிப்பு கேட்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஜெர்மனியிலும் ஓர் அரசியல் ஆளுமை இப்படி மாட்டிக்கொண்டு மன்னிப்பு கேட்ட சம்பவம் அண்மையில் நடந்தது. எஃப்.டி.பி கட்சித் தலைவர் கிறிஸ்டியன் லிண்ட்னர் ஓர் உணவகத்தில் தன்னை மறந்து தனது நண்பர் ஒருவரைக் கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்தபோது கண்டிக்கப்பட்டார். வெள்ளிக்கிழமை மாலை, அதிலும் விருந்து முடிந்து விடைகொடுக்கும்போது மிக இயல்பாகப் பிரியாவிடை அரவணைப்பு நிகழ்ந்துவிட்டது என்றாலும் அது தவறுதான் என அவர் ஒப்புக்கொண்டார். “இது திட்டமிட்ட, வேண்டுமென்றே செய்யப்பட்ட காரியம் அல்ல என்றும், நாம் அனைவருமே தவறிழைக்கக்கூடிய மனிதர்கள்தான் என்பதால் வருந்துகிறேன். என்னை மன்னிக்கவும்” என அவர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதும் பத்திரிகை செய்தியாகியது.

மே மாதம் போலந்தின் பிரதமர் மேட்டூஸ் மொராவிஸ்கி, 2010ஆம் ஆண்டு நடந்த விமான பேரிடரில் பலியானவர்களை நினைவுகூரும் ஒரு துயர விழாவில் பங்கெடுத்துக் கொண்டபோது அந்தப் பொதுக்கூட்ட நிகழ்ச்சி போலந்து நாட்டின் ஊரடங்கு விதிகளை மீறுவதாகக் காணப்பட்டது. பிரதமர் அன்று நிகழ்ச்சியின்போது முகக்கவசம் அணியவில்லை என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது. (https://www.euronews.com/2020/05/28/analysis-european-politicians-who-ve-bent-or-broken-lockdown-rules) இப்படி ஐரோப்பாவின் பல அரசியல் தலைமைகள் பொதுவெளியில் தங்களை மறந்து சில நேரம் நடந்துகொண்டதும் அதற்காக அவர்கள் மன்னிப்புக் கேட்டதும் கொரோனா காலத்து நிகழ்ச்சிகளின் பட்டியலில் இணைக்கப்பட வேண்டியவைதாம்.

அடுத்த ஞாயிறு தொடரும்...

முந்தைய பகுதிகள்

பகுதி 1

பகுதி 2

பகுதி 3

பகுதி 4

கட்டுரையாளர் குறிப்பு

முனைவர் க.சுபாஷிணி, ஜெர்மனி பாடன் ஊர்ட்டெம்பெர்க் மாநிலத்தில் டிஎக்ஸ்சி டெக்னோலஜி என்ற நிறுவனத்தின் ஐரோப்பியப் பகுதி கணினிக் கட்டமைப்புத் துறை தலைமை பொறியியலாளராகப் பணிபுரிகின்றார். இவர் தமிழ் மரபு அறக்கட்டளை என்ற பன்னாட்டு அமைப்பின் தோற்றுனர் மற்றும் தலைவருமாவார். இந்தப் பன்னாட்டு அமைப்பு உலகளாவிய தமிழர் வரலாறு, மொழி, பண்பாடு தொடர்பான ஆவணங்களை மின்னாக்கம் செய்வது, அவை தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வது மற்றும் வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாப்பு, விழிப்புணர்வு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகின்ற ஓர் அமைப்பாகும்.

ஞாயிறு, 7 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon