m‘உலக அளவில் வறுமை ஒழிப்பு’ : மதுரை நேத்ரா

public

ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எவ்வித எதிர்பார்ப்புமின்றி தாமாக முன் வந்து உதவி செய்த மதுரை சலூன் கடைக்காரர் மோகனின் மகள் நேத்ரா, வளர்ச்சி மற்றும் அமைதிக்கான ஐநா அவை சார்பாக ஏழை மக்களின் நல்லெண்ண தூதராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மதுரை அருகே உள்ள மேலடை பகுதியில் சலூன் கடை வைத்து நடத்தி வருபவர் மோகன். இவரது மகள் நேத்ரா. தனது மகளின் எதிர்கால கல்வி செலவுக்காகச் சேர்த்து வைத்திருந்த 5 லட்சம் ரூபாயை, கொரோனாவால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாகப்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு  உதவி செய்தார் மோகன். இதையடுத்து கடந்த மாத இறுதியில் மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, மோகனுக்கு வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து மோகன் கூறுகையில், எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த உதவியைச் செய்தோம். இதற்காக மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் பாராட்டுவார் என்று சிறிது கூட எண்ணிப் பார்க்கவில்லை. பெருமையாக இருக்கிறது. இனியும் எங்களது சேவை தொடரும். இந்த உதவி செய்ததற்குக் காரணம் என் மகள் நேத்ரா தான். அவள்தான் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்று அடம் பிடித்தாள். அதனைத் தொடர்ந்தே உதவி செய்தோம் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மோகன் குடும்பத்தினருக்கு அடுத்த ஆச்சரியமாக நேத்ராவை, வளர்ச்சி மற்றும் அமைதிக்கான ஐ.நா. அவை  ஏழை மக்களின் நல்லெண்ண தூதராக அறிவித்துள்ளது.

அதோடு, டிக்சான் ஸ்காலர்ஷிப் ஆக ரூ.1  லட்சம் பரிசுத் தொகையை வழங்கி கவுரவித்துள்ளது. மேலும் ஐக்கிய நாடுகள் அவையின் மாநாடு நடைபெறும் நியூயார்க் மற்றும் ஜெனிவாவில் குடிமை சார்ந்த அவைகளில் பேச நேத்ராவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வல்லுநர்கள், கல்வியாளர்கள், மற்றும் உலக தலைவர்களின் முன்னிலையில் ஏழை மக்களின் பிரதிநிதியாகப் பேசுவதற்கான வாய்ப்பும் பொறுப்பும் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேத்ராவுக்கு கிடைத்துள்ள இந்த வாய்ப்பு தமிழகம் மற்றும் இந்திய அடித்தட்டு மக்களின் குரலாய் ஐநா அவையில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து 9 ஆம் வகுப்பு மாணவி  நேத்ரா மின்னம்பலத்திடம் கூறுகையில்,  சாதாரணமாக உதவி செய்ததற்காக மிகப்பெரிய கவுரவமும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள ஏழை மக்களின் வறுமையை ஒழிப்பது பற்றி ஐநா அவையில் பேசுவேன்.  அதுமட்டும் இன்றி சாதி, மதம் பார்க்காமல் அனைவரும் ஒன்றுதான் என்பதை எடுத்துரைத்துப் பேசுவேன்” என்று தெரிவித்தார்.

முன்னதாக, பிரதமர் பாராட்டியதைத் தொடர்ந்து, மோகன் தனது குடும்பத்தினருடன் பாஜகவில் இணைந்தார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால், இதற்கு மறுப்புத் தெரிவித்த மோகன், வாழ்த்து அட்டை என்று நினைத்து பாஜக கட்சி உறுப்பினர் அட்டையை வாங்கி விட்டதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

**-கவிபிரியா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *