மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜுன் 2020

மேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு சிலிக்கான் பள்ளத்தாக்கு!

மேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு சிலிக்கான் பள்ளத்தாக்கு!

கொரோனாவின் தற்போதைய பிடியில், நிறுவனங்கள் 'வொர்க் ஃப்ரம் ஹோம்' என்பதை தாரக மந்திரமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. ஆனால், ஸ்ரீதர் வேம்பு என்ற மனிதன் மட்டும் தன் நிறுவனத்தை 'வொர்க் ஃப்ரம் வில்லேஜ்' என்ற மாற்று வழியில் வழி நடத்திக்கொண்டிருக்கிறார்.

ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, தன் நிறுவனத்தை சான் பிரான்சிஸ்கோவிலிருந்து சென்னைக்கும், அதன் பின்னர், தென்காசி அருகே ஒரு குக்கிராமத்திற்கும் அழைத்துச் சென்று, நிறுவனங்கள் இப்படியும் செயல்படலாம் என தன்னம்பிக்கை கொள்ள விரும்பும் பொருளாதாரத்திற்கு படிப்பினைகள் அளிக்கிறார். பொதுவாக நிறுவனங்கள் என்றாலே பெரிய நகரங்களை தலைமையிடமாகக் கொள்ளும் வழக்கத்தை மாற்றியமைத்து, கிராமங்களுக்கும் டவுன்களுக்கும் இனி அழைத்துச்செல்வதே மாற்று வழி என வழிகாட்டுகிறது இவரது ஜோஹோ நிறுவனம். நகர்ப்புற கட்டுமானங்களையும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களையும் மட்டும் நம்பி வாழும் அதிக அடர்த்தி கொண்ட இந்தியா போன்ற ஒரு தேசம், இந்த கொரோனா தொற்றுநோயால் பல்வேறு நிலைகளிலும் இழப்புகளை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், ஜோஹோ நிறுவனம் மட்டும் எப்படி தொய்வின்றி செயல்பட முடிகிறது.?

ஜோஹோ இன்று கிளவுட் அடிப்படையிலான வாடிக்கையாளர் உறவு மேலாண்மை (சிஆர்எம்)தீர்வுகள், ஆன்லைன் கணக்கியல், மனித வளம் மற்றும் சரக்கு மேலாண்மை உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட பயன்பாடுகளை வழங்குகிறது. உலகத்தரம் வாய்ந்த சேவை தயாரிப்புகளை உருவாக்க நகர்ப்புற மையங்களில் நீங்கள் இருக்க வேண்டிய அவசியமில்லை என்ற வேம்புவின் பார்வையை நிரூபிக்கும் வகையில், ஜோஹோ டெஸ்க், வாடிக்கையாளர் சேவை மென்பொருள் உள்ளிட்ட சில தயாரிப்புகளை மத்தளம்பாறை என்ற கிராமத்தின் அலுவலகத்திலிருந்து செயல்படுத்திவருகிறது. கொரோனா தொற்றுக்கு முன்பே கிராமங்களில் மென்பொருள் நிறுவனத்தை செயல்படுத்த வேண்டும் என்பதை கனவு கண்டவர் இவர்.

யார் இந்த ஸ்ரீதர் வேம்பு?

ஸ்ரீதர் வேம்பு, ஜோஹோ நிறுவனத்தின் நிறுவனரும் முதன்மைச் செயலதிகாரியும் ஆவார். ஜோஹோ நிறுவனம் இணையதளத்தின் மூலம் பயன்படுத்தப்படும் மேகக் கணிமையை(cloud computing) அடிப்படையாகக் கொண்ட அலுவலக பயன்பாட்டு(Office Suite) மென்பொருளை உருவாக்கும் நிறுவனம். வாடிக்கையாளர் தொடர்பு மேலாண்மை(CRM-Customer Relationship Management) மென்பொருளான ஜோஹோ சிஆர்எம்(ZOHO CRM) மற்றும் பல வணிக மேலாண்மை மென்பொருட்களை இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது.

தஞ்சாவூரைச் சேர்ந்த இவர், சென்னை ஐஐடியில் படித்து முடித்துவிட்டு ஹார்வார்டு பல்கலைக்கழகத்திற்கு இணையாக போற்றப்படும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் 1989ஆம் ஆண்டு எம்.எஸ், பி.எச்.டி முடித்தவர். அதன் பின்னர் குவால்காமில் பணிபுரிந்தார் இவர். பல்கலைக்கழகத்திலிருந்த நாட்களில் அரசியல், விஞ்ஞானம், பொருளாதாரம் மீது மிக ஆர்வமாக இருந்த ஸ்ரீதர், ஆசிய நாடுகளின் குறிப்பாக ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் தைவான் போன்ற சந்தைகளின் வெற்றியைப் பற்றியும், அவர்கள் எவ்வாறு வளர முடிந்தது என்று கற்றுக்கொண்டார். மாற்று சிந்தனைகளை அதிகம் செயல்படுத்த விரும்பும் இவர், தீவிரமான புத்தக வாசிப்பும் கொண்டவர். சிலிக்கான் வேலி என அழைக்கப்படும் சான் பிரான்சிஸ்கோவின் இந்த தொழில்நுட்ப நகரத்தில் அதிக இந்தியர்கள் பணிபுரிவதை பார்த்ததும், ஏன் நம்மால் இந்தியாவில் இதைப்போல ஒன்றை முயற்சித்து பார்க்கக் கூடாது என ஸ்ரீதர் மனதில் தோன்றியிருக்கிறது.

1996 ஆம் ஆண்டு, தாம்பரத்தில் சிறிய இடத்தில் வெறும் நான்கு பேருடன் ஆரம்பித்த நிறுவனம் படிப்படியாக வளரத்துவங்கியது. உலக நாடுகள் மத்தியில் இந்திய நிறுவனங்கள் சேவைத்துறையில் மட்டுமே சிறந்து விளங்க முடியும், ஒரு வெற்றிகரமான தயாரிப்பை உருவாக்குவது சாத்தியமில்லாத ஒன்று என்று கருத்து நிலவியபோது, அதை உடைத்து எரிந்தது ஜோஹோ. கூட்டாக உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களுக்கு SaaS (ஒரு மென்பொருள் சேவை) தயாரிப்புகளை இவை வழங்குகின்றன. தற்போது, கலிபோர்னியாவை தலைமையிடமாகவும், சிங்கப்பூர், ஜப்பான், சீனா மற்றும் இந்தியா ஆகியவற்றிலும் அலுவலகங்களைக் கொண்டுள்ளது ஜோஹோ. ஸ்ரீதர் வேம்பு, தனது நிறுவன விரிவாக்கத்திற்கும், வளர்ச்சிக்கும் ஆரம்பம் முதல் எந்த ஒரு வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து முதலீடு பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியர்களின் திறமையையும், கிராமப்புற இளைஞர்களின் திறமையையும் அதிகம் நம்பும் ஸ்ரீதர், 2011ஆம் ஆண்டு தென்காசி அருகிலுள்ள மத்தளம்பாறை எனும் கிராமத்தில் 4 ஏக்கர் நிலம் வாங்கி அங்கு ஒரு அலுவலகத்தை அமைக்க திட்டமிட்டார். தற்போது அங்கிருந்து தான் தனது அலுவலகப்பணிகளை மேற்கொண்டு வருகிறார் இந்த புதிய சிந்தனையாளர். ஃபோர்ப்ஸ் பத்திரிக்கைக்கு இது குறித்து கூறும் அவர்,"கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு மக்கள் குடியேறுவது நல்ல யோசனையல்ல என்று நான் எப்போதும் நினைப்பேன். சுமார் ஒரு வருடம் அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நான் புதிதாக ஏதாவது செய்ய முடிவு செய்தேன். நான் சிறிய கிராமங்களுக்குச் சென்று 10 முதல் 20 பேர் பணிபுரியும் செயற்கைக்கோள் இணைக்கப்பட்ட அலுவலக மையங்களை அமைக்க விரும்பினேன்” என்கிறார்.

மேலும், "நாங்கள் இந்த நிறுவனத்தைத் தொடங்க முடிவு செய்தபோது, நான் குறிப்பிட்ட ஒரு விஷயம் 'இந்தியாவில் நம்மிடம் சரியான திறமை இருக்கிறது, ஆனால் நாம் கிட்டத்தட்ட பூஜ்ஜிய அளவிற்கே மென்பொருள் தயாரிப்புகளை உருவாக்குகிறோம்'. எனவே இது தெளிவாக நல்லதொரு வாய்ப்பாக இருந்தது. வெளிப்படையாக இது நிறைய சிக்கல்களுடன் வரப்போகிறது என்றாலும், அவற்றை எதிர்கொள்ள நாங்கள் தயாராகவே இருந்தோம். பொருளாதார ரீதியாக முன்னேற, இந்த சிக்கலான பணிகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று நான் எப்போதும் உணர்கிறேன். நானும் ஒரு கிராமப்புற பின்னணியில் இருந்து வந்தவன் தான்”என்று அவர் சிரிக்கிறார்.

தற்போதைய நிலவரப்படி, ஜோஹோவுக்கு இரண்டு கிராமப்புற அலுவலகங்கள் உள்ளன, ஒன்று தென்காசியிலும் மற்றொன்று ஆந்திராவின் ரேனிகுண்டாவிலும் உள்ளது. கிராமப்புறத்திற்குச் செல்வதற்கான அவரது இரண்டு உந்துதல்கள் குறித்து கூறும் ஸ்ரீதர் வேம்பு, “ஒன்று, எனது ஊழியர்கள் இந்த கிராமங்களில் வாழ வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உள்ளூர் மக்களுக்கும் வெளியூர் மக்களுக்கும் இடையிலான புதிய கருத்துக்கள், நன்மை-தீமை அடங்கிய பழக்கவழக்கங்கள், ஒருவரிடமிருந்து ஒருவர் புதிய பரிணாமத்தை கற்றுக்கொள்வது என பல விஷயங்கள் இதில் அடங்கியுள்ளது (cross-fertilisation என இதனை குறிப்பிடுகிறார்). இது ஒரு புதிய சவாலாக இருக்கிறது. ஆனால் நான் இந்த கிராமப்புற முயற்சிகளைத் தொடங்கப் போகிறேன் என்றால், நான் கிராமத்தில் என்னை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று முன்னரே முடிவு செய்தேன்" என்கிறார்.

அதிகாலை நான்கு மணிக்கு அமெரிக்காவில் பேச வேண்டிய அழைப்புகளுக்கு பேசுவதிலிருந்து தனது நாளை துவக்கும் ஸ்ரீதர், 6 மணிக்கு நடைபயிற்சி, பின்னர் கிணற்றில் நீச்சலடிப்பது, விவசாயம் என தன் மூதாதையர் வாழ்ந்த வாழ்க்கையை நோக்கி பயணிக்கிறார். வர்த்தக மையங்கள் பூட்டியே இருந்தபோதும் தென்காசியில் வாழ்க்கை புதிய எல்லைகளைத் திறந்தது என அகம் மகிழ்கிறார் இவர். உலக நாடுகளில் இருக்கும் முன்னணி நிறுவனத்திற்குச் சவால் விடும் வகையில் வளர்ந்து நிற்கும் ஜோஹோ கார்ப்ரேஷன் நிறுவனத்தின் நிறுவனர் வாழும் இந்த அன்றாட வாழ்க்கை நிச்சயம் ஆச்சரியமே. 2019 ஆம் ஆண்டில் ஃபோர்ப்ஸ் வேம்புவின் 88 சதவீத பங்குகளை 1.83 பில்லியன் டாலராக மதிப்பிட்டது. 2019 ஆம் ஆண்டில், ஜோஹோவின் மொத்த வருவாய் 3,410 கோடியில், 516 கோடி லாபம் ஈட்டியதாக அறிவித்தது. நிறுவனம் உலகளவில் 50 மில்லியன் பயனர்களைக் கொண்டிருப்பதாகக் கூறுகிறது. தொற்றுநோய் காலத்திலும் தீவிரமாக செயல்பட்டு வரும் இந்த நிறுவனம், தற்போதைய தயாரிப்புகளுக்கு ஜோஹோ ரிமோட்லி என்று பெயரிட்டுள்ளது.

"எனது வேர்களுடன் நான் அதிகம் இணைந்திருப்பதை உணர்கிறேன். உங்கள் ஒப்பீடுகளிலிருந்து விடுபடும் இந்த வகையான வாழ்க்கையை அனுபவிக்கிறேன். இது போன்ற விஷயங்களைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை: என் பக்கத்து வீட்டுக்காரருக்கு ஃபெராரி இருக்கிறதா; அல்லது என் பக்கத்து வீட்டுக்காரர் விடுமுறை எடுக்கிறாரா? இது எனக்கு முக்கியமில்லை. நான் எப்போதும் குறைந்த நுகர்வு கொள்ளும் நபராகவே இருக்கிறேன். எந்தவொரு புதிய தொலைபேசியும் சந்தையில் தொடங்கப்படும்போது, அதை வாங்குவதில் நான் முதல் ஆளாக இருக்க மாட்டேன். எல்லோரும் வாங்கிய பின், இரண்டு வருடங்களுக்குப் பிறகு நான் அதை வாங்குவேன்”என்று அவர் தனது எளிமையான வாழ்வின் ரகசியத்தை கூறுகிறார்.

கிராமப்புற கல்வியும் வேலைவாய்ப்பும்

2004ஆம் ஆண்டில், ஜோஹோ பள்ளிகள் இந்நிறுவனத்தின் மூலம் திறக்கப்பட்டது. திறமையும் திறன்களையும் கொண்ட மாணவர்களுக்கு உள்நுழைந்து பயிற்சி அளிக்க இது திறக்கப்படுவதாக கூறுகிறார் வேம்பு. மாணவர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.அதே சமயம், இரண்டு ஆண்டு படிப்பின் காலம் முழுவதும் ரூபாய் 10,000 உதவித்தொகையாகவும் வழங்கப்படுகிறது. ஜோஹோ கார்ப் தொழில்நுட்ப இயக்குனர் ராஜேந்திர தண்டபாணி இது குறித்து கூறும்போது,“உள்ளுக்குள் நெருப்பு உள்ள மாணவர்களை நாங்கள் தேடுகிறோம். பட்டம் எங்களுக்கு முக்கியமல்ல, ஆனால் திறன்கள் முக்கியம். நாங்கள் ஆறு மாணவர்கள் மற்றும் இரண்டு பேராசிரியர்களுடன் தொடங்கினோம். இன்று 800 க்கும் மேற்பட்ட மாணவர்கள் எங்கள் பள்ளியில் பட்டம் பெற்றுள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் ஜோஹோ கார்ப் நிறுவனத்தில் பணிபுரிகின்றனர்” என்று விளக்குகிறார்.

தண்டபாணியின் மகனும் இதே பள்ளியில் தான் படித்தார். பின்னர் ஜோஹோ நிறுவனத்தில் அவரும் பணியாற்றி வருகிறார். “எங்கள் மாணவர்களில் 90 சதவீதம் பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்த கல்வி நிறுவனம் சென்னை மற்றும் தென்காசியில் உள்ள ஜோஹோவின் அலுவலகங்களுக்குள் அமைந்துள்ளது. எனவே மாணவர்கள் ஊழியர்களுடன் ஈடுபடுகிறார்கள் மற்றும் அலுவலக கலாச்சாரத்தை அனுபவிக்கிறார்கள்”என்று அவர் மேலும் கூறுகிறார். ஜோஹோவின் 9,300 ஊழியர்களில், 875 பேர் ஜோஹோ பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் புலம்பெயர்ந்து கொண்டிருக்கும் போது, கிராமத்தில் இருக்கும் மக்கள் கல்வி கற்கவும், அங்கே அவர்கள் வேலைக்குத் செல்லும் ஒரு உலகத்திற்கான கனவை சுமந்து பணியாற்றும் வேம்புவின் மனதிலுள்ள 'ப்ளூபிரிண்ட்' நிச்சயம் மிகப்பெரிய பொருளைப் பெறுகிறது.

-முகேஷ் சுப்ரமணியம்

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்! ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்!

சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு!

5 நிமிட வாசிப்பு

சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு!

டிஜிபி ராஜேஷ் தாஸ் சஸ்பெண்ட்?

5 நிமிட வாசிப்பு

டிஜிபி ராஜேஷ் தாஸ் சஸ்பெண்ட்?

வியாழன் 4 ஜுன் 2020