cகொரோனா: உலக நாடுகளை முந்தும் இந்தியா!

public

உலக அளவில் கொரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 7ஆவது இடத்துக்கு நகர்ந்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் முதன்முதலில் ஜனவரி மாதத்தில் கேரளாவில் ஒருவருக்கு கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட போதும், இதன் பாதிப்பு குறைந்தபாடில்லை. இந்த சூழலில் இன்று (ஜூன் 1) முதல் 5ஆம் கட்ட ஊரடங்கு தொடங்கியிருக்கும் நிலையில், இன்றைய நிலவரப்படி பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, ஒரு லட்சத்து 90 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு நிலவரத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இதுவரை இல்லாத அளவுக்கு, அதிகபட்சமாக ஒரே நாளில் 8,392 பேருக்குப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 535 ஆக அதிகரித்துள்ளது. ஒரேநாளில் 230 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ள நிலையில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,384ஆக அதிகரித்து இறப்பு விகிதம் 2.8 சதவிகிதமாக உள்ளது. 90,000 பேர் குணமடைந்த நிலையில் மீட்பு விகிதம் 49 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில், மகாராஷ்டிரா(67,655), தமிழ்நாடு(22,333), டெல்லி(19,844) ஆகிய மாநிலங்கள் முதல் மூன்று இடத்தில் உள்ளன. இந்த மூன்று மாநிலங்களைத் தொடர்ந்து குஜராத்(16,779), மத்திய பிரதேஷ்(8,089), ராஜஸ்தான்(8,831), மேற்கு வங்கம்(5,501) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

உலக அளவில் கொரோனா பாதிப்பு 62 லட்சத்தைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 3 லட்சத்து 72 ஆயிரமாக இருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவைத் (18,37,170) தொடர்ந்து, பிரேசில்(5,14,992), ரஷ்யா (4,05,843), ஸ்பெயின்(2,86,509), பிரிட்டன்(2,74,762), இத்தாலி(2,32,997) ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

அதன்படி கொரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 11ஆவது இடத்திலிருந்த இந்தியா தற்போது ஏழாவது இடத்திற்கு நகர்ந்துள்ளது. துருக்கி (1,63,942), பெரு(1,64,476), ஜெர்மனி (1,83,494), பிரான்ஸ் (1,88,882), சீனா(83,017) ஆகிய நாடுகளை பின்னுக்குத்தள்ளி இந்தியா 7ஆவது இடத்துக்கு நகர்ந்துள்ளது.

**-கவிபிரியா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *