மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 6 ஆக 2020

கோயிலில் இறைச்சியை வீசிய நபர் கைது!

கோயிலில் இறைச்சியை வீசிய  நபர் கைது!

கோவை பூக்கடை பகுதியில் உள்ளது சலிவன் வீதி. மக்கள் நடமாட்டம் மிகுந்த இந்த வீதியில் உள்ள இரு கோயில்களில் பன்றி இறைச்சியை மர்ம நபர்கள் வீசிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாநகரம் சலிவன் வீதியில் வேணுகோபால கிருஷ்ண சுவாமி ஆலயம், ராகவேந்திரர் ஆலயங்கள் உள்ளன. கொரோனா அச்சம் காரணமாக இந்த ஆலயங்கள் கடந்த இரு மாதமாக பூட்டிக் கிடக்கின்றன. இந்நிலையில் வெள்ளிக்கிழமை (மே 29) காலை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் ஒரு பிளாஸ்டிக் காகிதத்தில் பன்றி இறைச்சியை வாங்கி வந்து அதை கோயில் வாசலில் வீசிச் சென்றனர்.

இதை அறிந்த இந்து அமைப்பினர் அப்பகுதியில் திரண்டு பன்றி இறைச்சியை ஆலய வாசலில் வீசிச் சென்ற மர்ம நபர்களை கைது செய்யக் கோரி கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மாநகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போராட்டத்துக்கு வந்த இந்து மத அமைப்பை சேர்ந்தவர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் விரைவில் குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதி கொடுத்துள்ளனர். கோயில் வாசலில் பன்றி கறியை போட்டவர்களைப் பிடிக்க மாநகர காவல் ஆணையர் சுமித் சரன் சிறப்பு படையை அமைத்தார்.

சிறப்புப்படை அமைத்து தேடியதில் இந்த சம்பவத்துக்கு காரணமான ஹரி ராம்பிரகாஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். 48 வயதான இவர் இன்ஜினியரிங் முடித்துவிட்டு வேலையின்றி இருக்கிறார். மேலும் மனரீதியாக பாதிக்கப்பட்டவர் என்றும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

குற்றம் சாட்டப்பட்ட நபர் இன்று காலையில் பன்றி இறைச்சி வாங்கியதாகவும் போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். குற்றம் சுமத்தப்பட்ட ஹரியை குறித்து போலீஸார் கூறுகையில், அவர் மனரீதியாக பாதிக்கப்பட்டவர் என்று தெரியவருகிறது, ஆனால் அதற்கான மருத்துவ அறிக்கை எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

அவர் மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை போலீஸ் கமிஷனர் சுமித் சரண் இதுகுறித்து கூறுகையில், சிசிடிவி மூலம் இந்த நபர் இரண்டு கோயில்களுக்கு அருகே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியதும், பிறகு கோவிலிலிருந்து வெளியே வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. வாகன எண்ணை வைத்து ஹரியை கைது செய்தோம் என்று தெரிவித்துள்ளார்..

குற்றம்சாட்டப்பட்ட ஹரியின் அண்டை வீட்டாரிடம் விசாரிக்கும்போது, அவர் சிறிது மனநிலை சரியில்லாதவர் எனவும் நேற்று இரவு கூட அந்த தெருவில் சிலரிடம் சண்டையிட்டுக் கொண்டு இருந்ததாகவும் கூறியுள்ளனர்.

-சிவசு

வெள்ளி, 29 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon