மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 6 ஆக 2020

கோயம்பேடு சந்தையைத் திறக்க வாய்ப்பில்லை: சிஎம்டிஏ!

கோயம்பேடு சந்தையைத் திறக்க வாய்ப்பில்லை: சிஎம்டிஏ!

கோயம்பேடு காய்கறி, உணவு தானிய விற்பனை சந்தையைத் திறப்பதற்கான வாய்ப்பு தற்போதைக்கு இல்லை என்று சிஎம்டிஏ சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் கோயம்பேடு சந்தையிலிருந்து அதிகளவு பரவியதைத் தொடர்ந்து, சந்தைக்குச் சீல் வைக்கப்பட்டது. இந்த நிலையில் கோயம்பேடு உணவு தானிய வியாபாரிகள் சங்கத் தலைவர் சந்திரேசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில் , கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஏப்ரல் 24ஆம் தேதி முதல் சென்னை, மதுரை, கோவை ஆகிய மாவட்டங்களில் நான்கு நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதனால் சில்லறை விற்பனை சந்தைகளில் காய்கறிகளை வாங்க மக்கள் அதிக அளவு குவிந்ததால் வைரஸ் தொற்று பரவியது. எனவே மே 5ஆம் தேதி முதல் கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டது.

இதில் சில்லறை காய்கறி விற்பனைக்கும், உணவு தானிய விற்பனைக்கும் தொடர்பு இல்லாத நிலையில் கோயம்பேடு சந்தை வளாகம் முழுவதும் மூடப்பட்டதால் உணவு தானியப் பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே கோயம்பேடு உணவு தானிய சந்தைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றிப் பாதுகாப்புடன் சந்தையைத் திறக்க அனுமதிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இந்த மனுவைக் காணொளி காட்சி மூலம் நீதிபதி ரவிச்சந்திர பாபு இன்று (மே 29) விசாரித்தார். அப்போது வைரஸ் தொற்று பரவல் குறையாத நிலையில் கோயம்பேடு உணவு தானிய சந்தையை தற்போது திறக்க அனுமதிக்க முடியாது என்று சிஎம்டிஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை விசாரித்த நீதிபதி , தேவையெனில் கடைகளில் உள்ள பொருட்களை , துறை சார்ந்த அதிகாரியிடம் அனுமதி பெற்று எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்து வழக்கை வரும் ஜூன் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

-கவிபிரியா

வெள்ளி, 29 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon