மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 6 ஆக 2020

ஜூன் 1 முதல் வழிபாட்டுத் தலங்கள் திறப்பு!

ஜூன் 1 முதல் வழிபாட்டுத் தலங்கள் திறப்பு!

புதுச்சேரி, கர்நாடகாவைத் தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் ஜூன் 1 முதல் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நான்காவது கட்டமாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு வருகிற 31ஆம் தேதியுடன் (ஞாயிற்றுக்கிழமை) முடிவடைகிறது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்ட போதிலும் கொரோனா பரவுவது குறையவில்லை. நோய்த்தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நாடு முழுவதும் கடந்த 65 நாட்களுக்கு மேலாக எந்தவொரு வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்படாமல் உள்ளன. பொதுமக்கள் அதிகமாக கூடினால் கொரோனா தொற்று வேகமாக பரவிவிடும் என்பதால் முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் கர்நாடகத்தில் வருகிற ஜூன் 1ஆம் தேதி முதல் கோயில்கள் உட்பட வழிபாட்டுத் தலங்கள் திறக்க அனுமதி வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார். அதேபோல் புதுச்சேரியில் ஜூன் 1 முதல் வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் வழிபட அனுமதிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கடிதம் எழுதி உள்ளார்.

தற்போது ஜூன் 1ஆம் தேதியில் இருந்து மேற்கு வங்காளத்தில் இந்து கோயில்கள், மசூதி, குருத்வாரா உட்பட அனைத்து வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்படும். ஆனால் 10 பேருக்கு மேல் அனுமதிக்கக் கூடாது. மதம் தொடர்பான இடங்களில் கூட்டத்துக்கு அனுமதி இல்லை என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேலும் ஜூன் 8 முதல் அனைத்து அரசு, தனியார் அலுவலகங்கள் 100% ஊழியர்களுடன் இயங்கும் எனத் தெரிவித்துள்ளார்.

-ராஜ்

வெள்ளி, 29 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon