மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 6 ஆக 2020

கொரோனா காலத்தில் நான்காவது நீதிபதி பணியிடை நீக்கம்!

கொரோனா காலத்தில் நான்காவது நீதிபதி பணியிடை நீக்கம்!

சென்னையில் பணியாற்றிய குடும்ப நல நீதிமன்ற நீதிபதியைப் பணி இடை நீக்கம் செய்துள்ளது உயர் நீதிமன்றம்.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள குடும்ப நல நீதிமன்றத்தில், முதன்மை கூடுதல் நீதிபதியாகப் பணியாற்றி வந்தவர் எம்.ஸ்ரீதர், இவர் 10.12.1999 அன்று தமிழ்நாடு நீதித் துறையில் மாவட்ட உரிமையியல் நீதிபதியாக அரியலூரில் பணி நியமனம் செய்யப்பட்டு, மேட்டூர், செஞ்சி, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி பிறகு சார்பு நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்று, திருவாரூர், ஜெயங்கொண்டம், திருச்சி உள்ளிட்ட இடங்களிலும் பணியாற்றியவர்.

திருச்சியில் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதியாகவும் தலைமை குற்றவியல் நீதிபதியாகவும் சிறப்பாக பணியாற்றியவர். இவர் மேட்டூரில் மேஜிஸ்திரேட்டாக இருந்தபோது நடிகை குஷ்பு மீதான அவதூறு வழக்கைத் திறமையாகக் கையாண்டவர்.

மாவட்ட நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்று விழுப்புரத்தில் பணியாற்றி அதன் பிறகு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் முதன்மை கூடுதல் நீதிபதியாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 26.5.2020 அன்று இவர் சென்னை உயர் நீதிமன்றத்தால் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவு நீதிபதி எம்.ஸ்ரீதர் வசம் 26.5.2020 அன்று இரவு அளிக்கப்பட்டது.

மேலும் மறு உத்தரவு வரும் வரையில் அவர் வேலூரில் தங்கியிருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்ததாக சார்பு நீதிபதி ஒருவரும் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கொரோனா வைரஸ் காலத்தில் தமிழகத்தில் இதுவரையில் நான்கு நீதிபதிகளைப் பணி இடை நீக்கம் செய்துள்ளது உயர் நீதிமன்றம்.

"ஒரு மாநிலத்தில் நூறு மாவட்ட நீதிபதிகள் பணியிலிருந்தால் அதில் 25 பேர் நேரடியாகத் தேர்வெழுதியும், 75 பேர் பதவி உயர்வின் அடிப்படையிலும் மாவட்ட நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட வேண்டும் என்பது உச்ச நீதிமன்றம் வகுத்த விதிமுறை. உதாரணத்திற்குப் பதவி உயர்வில் மாவட்ட நீதிபதியாக ஆகக்கூடியவர் மாவட்ட உரிமையியல் நீதிபதி அல்லது மேஜிஸ்திரேட்டாக பணியாற்றி அதன் பிறகு சார்பு நீதிபதியாகப் பணியாற்றி அதன் பிறகு மாவட்ட நீதிபதியாகப் பதவி உயர்வு பெறுவார். இப்படி பதவி உயர்வு பெற்றவர்தான் எம்.ஸ்ரீதர். இவர் கடலூர் மாவட்டம் வேப்பூரைச் சேர்ந்தவர் 6.1.1968இல் பிறந்தவர்.

பணியாற்றிய இடங்களில் எல்லாம் சிறப்பாகவும் நேர்மையாகவும் பணியாற்றியவர் எனவும் மாவட்ட நீதிபதிகள் சீனியாரிட்டி தொடர்பாக 1/3 என்ற விகிதத்தில், நேரடியாக மாவட்ட நீதிபதியாக ஆனவர்களையும், பதவி உயர்வு பெற்று மாவட்ட நீதிபதியாக ஆனவர்களையும் மற்ற மாநிலங்களில் உள்ளது போன்று சீனியாரிட்டியில் வைக்கவேண்டும் என்று திறம்படக் கோரிக்கை விண்ணப்பம் தயார் செய்தவர் எனவும் நீதித்துறை வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.

நீதிபதி எம்.ஸ்ரீதர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டது கீழமை நீதித்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக நீதித்துறை ஊழியர்கள் தெரிவிக்கின்றார்கள்.

-வணங்காமுடி

வெள்ளி, 29 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon