மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 6 ஆக 2020

பாத்ரூமில் வழுக்கி விழுந்தவர்கள்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

பாத்ரூமில் வழுக்கி விழுந்தவர்கள்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

சென்னை காவல்நிலைய பாத்ரூம்களில் வழுக்கி விழுந்து காயமடைந்தவர்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம், சென்னை மாநகர காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது.

சென்னையில், குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள், காவல் நிலையத்துக்குச் சென்று திரும்பும் போது, அவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்படுவது என்பது தொடர்கதையாகி வருகிறது. இதற்குக் காவல் துறை தரப்பில், பாத்ரூமில் வழுக்கி விழுவதால் அவர்களுக்கு அடிப்பட்டுவிடுவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இதுதொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை அயப்பாக்கம் பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்றதாக தேவேந்திரன் என்பவரை மதுவிலக்கு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் நாதமுனி மற்றும் ஏட்டு சீனிவாசன் ஆகியோர் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர் .

இந்த விசாரணையைத் தொடர்ந்து மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் குறித்து சர்ச்சையான கருத்துக்களைத் தனது வாட்ஸ்அப் குழுவில் தேவேந்திரன் பரப்பியதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இதையடுத்து சிறப்பு உதவி ஆய்வாளர் நாதமுனி அம்பத்தூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் தேவேந்திரனைக் கடந்த 27ஆம் தேதி போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்த விசாரணையின்போது காவல்நிலையத்திலிருந்த பாத்ரூமில் வழுக்கி விழுந்து தேவேந்திரனுக்கு வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் ரிமாண்ட் செய்யப்பட்டார். இது குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியானது.

இந்நிலையில் சமூக ஆர்வலர்கள் சிலர் காவல் நிலைய பாத்ரூம்களில் வழுக்கி விழுந்து எலும்பு முறிவு ஏற்படுவது குறித்து மனித உரிமை ஆணைய கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

இதுதொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துகொண்ட தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் சென்னை காவல் ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதில், 2017 ஆம் ஆண்டு முதல் இதுவரை சென்னை மாநகர காவல் நிலையங்களில் உள்ள பாத்ரூம்களில் வழுக்கி விழுந்தது தொடர்பாக எத்தனை சம்பவங்கள் நடைபெற்றுள்ளது? காவல்துறையினர் யாரேனும் வழுக்கி விழுந்த சம்பவங்கள் நடந்துள்ளதா?, காவல் நிலையங்களில் உள்ள பாத்ரூம்கள் முழுமையாகப் பராமரிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? அதுமட்டுமின்றி பாத்ரூமில் வழுக்கி விழும் சம்பவங்களைத் தடுக்க என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் கேள்விகளை எழுப்பி இது குறித்து இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

-கவிபிரியா

வெள்ளி, 29 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon