மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 6 ஆக 2020

கர்நாடகாவில் 5 மாநில விமானங்களுக்குத் தடையா?

கர்நாடகாவில் 5 மாநில விமானங்களுக்குத் தடையா?

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களிலிருந்து விமானங்கள் மற்றும் ரயில்கள் வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியானத் தகவலுக்குக் கர்நாடக அரசு மறுப்புத் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பாதிப்பு எண்ணிக்கை குறைவாக இருக்கும் மாநிலமான கர்நாடகாவிலும் தற்போது பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த முதல்வர் எடியூரப்பா அரசு உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகிறார்.

அதன்படி,கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய நான்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களை மே 31 வரை கர்நாடகா எல்லைக்குள் வர தடை விதிப்பதாக அம்மாநில அரசு மே 17ஆம் தேதி அறிவித்தது.

இதனிடையே மே 25ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கியது. மும்பை, பெங்களூரு, சென்னை, கொச்சி, ஜெய்ப்பூர், டெல்லி என முக்கிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களில் வழக்கம் போல் விமானங்கள் இயக்க செயல்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் தமிழகம், மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலிருந்து வரும் விமானங்கள், ரயில்கள் மற்றும் வாகனங்களுக்குக் கர்நாடகாவில் தடை விதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது.

இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ள கர்நாடக அரசு, கொரோனா ஹாட்ஸ்பாட்கள் அதிகம் உள்ள மாநிலங்களான தமிழகம், குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்தும், பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளிலிருந்தும் குறைந்த அளவிலான விமானங்களை மட்டுமே இயக்க விமான போக்குவரத்துத் துறையிடம் வலியுறுத்தப்பட்டது. அதை தவிர தடை விதிக்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது.

-கவிபிரியா

வெள்ளி, 29 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon