மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 5 ஆக 2020

சிறப்புச் செய்தி: COVID-19 நெருக்கடி - கடன் வாங்கி பொருளாதாரத்தை மீட்க முடியுமா?

சிறப்புச் செய்தி: COVID-19 நெருக்கடி - கடன் வாங்கி பொருளாதாரத்தை மீட்க முடியுமா?

நா. ரகுநாத்

COVID-19 நெருக்கடியைச் சமாளிப்பதற்கும், வைரஸ் தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்தவும் போடப்பட்ட ஊரடங்கால் வாழ்வாதாரங்கள் இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கவும், முடக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் இந்தியாவின் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் கணிசமான அளவில் செலவுகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்பது ஏப்ரல் மாதம் தொடக்கத்திலேயே தெளிவானது. மாநில அரசுகளைவிட ஒன்றிய அரசுக்குத்தான் அரசியல் சாசனம் கூடுதல் அதிகாரங்களை வழங்கியுள்ளது. எனவே, இந்த நெருக்கடியை எதிர்கொள்ளத் தேவைப்படும் நிதியாதாரங்களைத் திரட்டி மாநில அரசுகளுக்குக் கொடுப்பது ஒன்றிய அரசின் பொறுப்பு என்பதைப் பலரும் வலியுறுத்தி வந்தனர்.

இந்தியப் பொருளாதாரம் கடந்த இரண்டு நிதியாண்டுகளாகவே வேகமிழந்த நிலையில்தான் இயங்கிக் கொண்டிருந்தது. அதன் விளைவாக 2019-20 நிதிநிலை அறிக்கையில் மதிப்பீடு செய்யப்பட்டதைவிட அரசுக்குக் கிடைத்த வரிவருவாய் குறைவாக இருந்தது. வரவுக்கும் செலவுக்கும் இடையே உள்ள இடைவெளியான நிதிப்பற்றாக்குறை (Fiscal Deficit) எதிர்பார்த்ததைவிட அதிகமானது. பொருளாதாரத்தில் நிலவும் கடுமையான கிராக்கிப் பிரச்சினையை (Demand Slowdown) சரிசெய்ய அரசு கூடுதலாகக் கடன் வாங்கி செலவு செய்தாலும் தவறில்லை என்று 2020-21ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வதற்கு முன்பு, சந்தைப் பொருளாதாரத்தை ஆதரிக்கும் பொருளாதார நிபுணர்களும்கூட தொடர்ந்து எழுதி வந்தனர். ஊரகப் பொருளாதாரத்தில் கிராக்கியைத் தூக்கிவிட என்னவெல்லாம் செய்ய முடியும் என்று பலதரப்பட்ட பொருளாதார அறிஞர்கள் முன்வைத்த பரிந்துரைகளுக்கு நிதியமைச்சர் செவிசாய்க்கவில்லை.

இந்த நிலையில் COVID-19 நெருக்கடியைச் சமாளிக்க 2020-21 நிதியாண்டின் தொடக்கத்திலேயே ஊரடங்கு போடப்பட்டதால் பொருளாதாரம் முடங்கியது, முடங்கிய பொருளாதாரத்தில் இருந்து வரிவருவாய் கிடைக்காது. ஆனால், ஒரு பெருந்தொற்றுக்கு (Pandemic) எதிரான போராட்டத்தில் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வையும் வாழ்வாதாரங்களையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருப்பதால் ஒன்றிய அரசு எப்படியாவது பெரிய அளவில் நிதியைத் திரட்டும் என்று எதிர்பார்த்த அனைவருக்கும் பெரும் ஏமாற்றம் மட்டுமல்ல, பேரதிர்ச்சியும் காத்திருந்தது.

ரிசர்வ் வங்கியிடம் அரசு கடன் வாங்கலாமா?

பல நாடுகள் துரிதமாகச் செயல்பட்டு பொருளாதார நிவாரணம் வழங்குவதற்கும், பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும் தங்கள் நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் (GDP) 10 விழுக்காடு வரை செலவு செய்யப்போவதாக அறிவித்தன. இதில் இந்தோனேசியா, பிரேசில் போன்ற வளரும் நாடுகளும் அடங்கும். ஆனால், உலகிலேயே மிகக் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட இந்தியாவில் ஒன்றிய, மாநில அரசுகள் செய்யப்போகும் மொத்த செலவே இந்தியாவின் மொத்த உற்பத்தி மதிப்பில் வெறும் ஒரு விழுக்காடாக இருந்தது. இது கடும் விமர்சனத்திற்குள்ளானது.

ஒன்றிய அரசு அறிவித்த முதற்கட்ட நிவாரணமான ரூ.1.70 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதாரத் தொகுப்பு போதவே போதாது என்பதால், மேலும் செலவுகள் மேற்கொள்ள அரசு எங்கிருந்தெல்லாம் நிதியைத் திரட்ட முடியும் என்ற விவாதம் சூடுபிடித்தது. பொருளாதாரப் பரிவர்த்தனைகளில் இருந்து வரிவருவாய் இல்லாத நிலையில் சந்தையிலிருந்து கடன் வாங்குவது ஒரு வழி. நாட்டில் அபரிமிதமாக செல்வங்களைக் குவித்திருக்கும் நபர்கள் /குடும்பங்கள் மீது சிறியளவு Wealth Tax விதித்தால்கூட கணிசமான தொகையைப் பெற முடியும் என்று மோடி அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் பிசினஸ் ஸ்டாண்டர்டு வணிகப் பத்திரிகையில் எழுதியிருந்தார். ஆனால், இப்படிப்பட்ட அசாதாரண சூழ்நிலையில் அரசு ரிசர்வ் வங்கியிடம் நேரடியாகக் கடன் வாங்கி செலவு செய்வதில் தவறில்லை எனும் வாதம் பரவலாகக் கவனத்தை ஈர்த்தது.

ஒன்றிய அரசின் நிதிப்பற்றாக்குறை நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 3 விழுக்காட்டுக்கு அதிகமாக இருக்கக் கூடாது என்கிறது FRBM சட்டம். அதாவது, அரசு சந்தையிடமிருந்து கடன் வாங்கி செலவு செய்வதற்கும் ஒரு வரைமுறை உள்ளது என்பதே இதன் பொருள். அரசின் நிதிப்பற்றாக்குறை இம்மியளவு அதிகரித்தாலும் பணவீக்கம் எனும் பூதம் கிளம்பிவிடும் என்று சொன்னவர்கள், ‘நிதிப்பற்றாக்குறை பற்றியெல்லாம் கவலைப்படும் நேரம் இதுவல்ல, ரிசர்வ் வங்கியிடம் அரசு கடன் வாங்கி செலவு செய்யலாம்’ என்று ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்பட்டது. பரந்துபட்ட மக்களின் வாழ்வாதாரம் காணாமல்போயுள்ள நிலையில், அவர்களிடம் வாங்கும் சக்தியே (Purchasing Power) இருக்காது. அப்படி இருக்கும்போது, அவர்களுக்கு அரசு ஒரு சிறு தொகையை நிவாரணமாகக் கொடுக்கும் பட்சத்தில் பொருட்களுக்கான கிராக்கி சற்று அதிகரித்தாலும் பணவீக்கம் பற்றிய கவலைகள் இப்போதைக்குத் தேவையில்லை என்ற புரிதல் ஏற்படத் தொடங்கியது.

‘90களுக்கு முன்பெல்லாம் வருவாய்க்கும் செலவுகளுக்கும் இருக்கும் இடைவெளியை நிரப்ப அரசு, ரிசர்வ் வங்கியிடம் கடன் பத்திரங்கள் அளித்து, புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு, குறைந்த வட்டிக்குக் கடன் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டது. ரிசர்வ் வங்கியும் அவ்வாறே செய்தது. ‘90களின் முடிவில் இந்த ஏற்பாடு முடிவுக்கு வந்தது. இன்றைய சூழலில் தேவையான கடன் தொகையை சந்தையிடமிருந்து மட்டுமே பெற முடியாது என்பதால், ரிசர்வ் வங்கி அரசுக்கு நேரடியாகவே கடன் வழங்கும் ஏற்பாடு ஏற்கத்தக்கதுதான் என்று முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த டாக்டர் ரங்கராஜன் எழுதியிருந்தார். அரசு ரிசர்வ் வங்கியிடம் நேரடியாகக் கடன் வாங்கும் ஏற்பாட்டை 1997இல் முடிவுக்குக் கொண்டுவந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டவரே டாக்டர் ரங்கராஜன்தான்!

மற்றொரு முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னரும் இதை ஆதரிப்பதாகத் தெரிகிறது. 2013 செப்டம்பர் – 2016 செப்டம்பர் வரை ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த ரகுராம் ராஜன், ‘COVID-19 நெருக்கடி பொருளாதாரத்தின் மீது ஏற்படுத்தியுள்ள எதிர்மறைத் தாக்கத்தைச் சமாளித்து மீண்டு வருவதற்கு நிதிப்பற்றாக்குறை சற்று அதிகரித்தாலும் பரவாயில்லை; அரசு ரிசர்வ் வங்கியிடம் கடன் வாங்கி செலவு செய்யலாம். ஆனால், அப்படிச் செய்யும்போது அதீதமான கவனமும் பொறுப்பும் அவசியம். பொருளாதாரம் இயல்புநிலைக்குத் திரும்பத் தொடங்கியதும் கடன் மற்றும் நிதிப்பற்றாக்குறையைக் குறைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று அரசு சந்தைக்கும் முதலீட்டாளர்களுக்கும் உறுதியளிக்க வேண்டும்’ என்ற வகையில் பல நேர்காணல்களில் பேசியிருந்தார்.

20 லட்சம் கோடி பொருளாதாரத் தொகுப்பு – உண்மை என்ன?

இந்தியாவின் தலைசிறந்த பேரியல் பொருளியல் அறிஞர்களில் ஒருவரான புலப்ரே பாலகிருஷ்ணன், முதற்கட்ட ஊரடங்கு முடிந்து மேலும் 19 நாட்கள் அது நீட்டிக்கப்பட்டபோது, அரசு எவ்வளவு செலவு செய்தால் சரியாக இருக்கும் என்பதைப்பற்றி எழுதியிருந்தார். ‘அமெரிக்காவைப் போலவே இந்தியாவிலும் பொருளாதாரத் தொகுப்பு நாட்டின் உற்பத்தி மதிப்பில் 10 விழுக்காடாக இருக்கலாம்; அவ்வாறு செய்தால் அந்தத் தொகையின் அளவு ரூ.20 லட்சம் கோடியாக இருக்கும். 40 நாட்கள் ஊரடங்கால் பொருளாதாரத்திற்கு ரூ.20 லட்சம் கோடிக்குச் சற்று அதிகமாக இழப்பு ஏற்படும். அந்த இழப்பை ஈடுசெய்ய மொத்த உற்பத்தி மதிப்பில் 10 விழுக்காடு பணத்தை நிவாரணமாகவும், முடங்கிய பொருளாதாரத்தை முடுக்கிவிட்டு இயல்புநிலைக்குக் கொண்டுவரவும் பயன்படுத்துவது சரியாக இருக்கும். இதைச் சாத்தியப்படுத்த ரிசர்வ் வங்கியிடம் கடன் வாங்குவதற்கு அரசு தயங்கக் கூடாது’ என்பது அவருடைய வாதமாக இருந்தது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு தலைமை அமைச்சர் நரேந்திர மோடி ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதாரத் தொகுப்பை அறிவித்தபோது, அது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ரூ. 20 லட்சம் கோடி என்பது நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 10 விழுக்காட்டுக்குச் சமம் என்பதால், தாமதமாக வந்தாலும் துணிச்சலான நடவடிக்கை என்று முதலில் பரவலாகப் பார்க்கப்பட்டது. அதன் உள்ளடக்கங்களை ஐந்து பாகங்களாக அடுத்த ஐந்து நாட்கள் ஒன்றிய நிதியமைச்சர் வெளியிட்டபோதுதான் உண்மையான சங்கதி என்னவென்று தெரியவந்தது.

நிதியமைச்சரின் அறிவிப்புகளிலிருந்து தெளிவாகி இருப்பது என்னவென்றால், COVID-19 நெருக்கடியை எதிர்கொள்வதற்கும், ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும், முடக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும் அரசு நேரடியாக “பணமாக” செய்யப்போகும் செலவு உண்மையில் ரூ.2 லட்சம் கோடியைத் தாண்டாது என்பதே. ஆக, 20 லட்சம் கோடி பொருளாதாரத் தொகுப்பில் அரசு செய்யப்போகும் செலவு வெறும் ரூ.2 லட்சம் கோடி என்றால், அது நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் வெறும் ஒரு விழுக்காடு (1%) மட்டுமே. 20 லட்சம் கோடி பொருளாதாரத் தொகுப்பில் கிட்டத்தட்ட 75 விழுக்காடு வங்கிக்கடன் தொடர்பான அறிவிப்புகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

2020-21 நிதியாண்டில் ஒன்றிய அரசு ரூ.12 லட்சம் கோடி சந்தையிடமிருந்து கடன் வாங்கும் என்ற செய்தி மே மாதத்தின் தொடக்கத்தில் வந்தது. 2020-21 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தபோது சந்தையிடமிருந்து அரசு ரூ.7.80 லட்சம் கோடி கடன் வாங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆக, இந்த நிதியாண்டில் அரசு கூடுதலாக ரூ. 4.2 லட்சம் கோடி சந்தையிடமிருந்து கடன் வாங்கப்போகிறது. பொருளாதாரத்தை முடுக்கிவிடப் பணமாகச் செய்யப்போகும் செலவு வெறும் ரூ.2 லட்சம் கோடி என்றால் எதற்குக் கூடுதலாகக் கடன் வாங்க வேண்டும்? பொருளாதாரம் முடக்கப்பட்டதன் காரணமாக ஏற்படும் வரி இழப்பை ஈடுசெய்வதற்கு இந்தக் கூடுதல் கடன் என்று தெரிகிறது.

கடனை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்த முடியுமா?

இத்தனை கோடி மக்கள் நிர்கதியாய் நிற்பதைப் பார்த்தும் ரிசர்வ் வங்கியிடம் கடன் வாங்கி செலவு செய்ய அரசு தயாராக இல்லை என்பது கவலையளிக்கிறது. ஒன்றிய அரசு ரிசர்வ் வங்கியிடம் கடன் வாங்காதது சரிதான் என்ற பார்வையை முன்வைப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ‘அரசு ரிசர்வ் வங்கியிடம் கடன் வாங்கினால், 1997இல் இருந்து சந்தையிடமிருந்து கடன் வாங்கி நிதி மேலாண்மையில் அரசு கடைப்பிடித்து வந்த கட்டுப்பாடும், ஒழுக்கமும் அளித்த பலன்கள் வீணாகிவிடும். அரசு மீண்டும் பொறுப்பற்று கடன் வாங்கி செலவு செய்யும் பாதைக்குத் திரும்பிவிட்டதோ என்ற அச்சம் சந்தைக்கு ஏற்படும்; அதன் விளைவாக வட்டி விகிதம் அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது’ என்று இந்த வாரம் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் 2008-2013 காலத்தில் ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த துவ்வுரி சுப்பாராவ் எழுதியுள்ளார்.

அரசு ரிசர்வ் வங்கியிடமிருந்து கடன் வாங்குவது ஏன் இவ்வளவு சிக்கலான, சர்ச்சைக்குரிய சமாச்சாரமாக இருக்கிறது? அரசு ரிசர்வ் வங்கியிடம் குறைந்த வட்டிக்குக் கடன் வாங்கும், குறைந்த வட்டிக்குக் கடன் வாங்க முடியும் என்பதால் அரசு பொறுப்பில்லாமல் தொடர்ந்து கடன் வாங்கிக் கொண்டிருக்கும். அதனால் பணப்புழக்கம் அதிகரித்து பணவீக்கம் ஏற்பட்டுவிடும் என்று பலர் அஞ்சுகின்றனர். ஒருகாலத்தில் அரசு அவ்வாறு செய்தது என்பது உண்மைதான்.

சந்தையிடமிருந்து கடன் வாங்க வேண்டும் என்றால் அதிகமான வட்டிக்குத்தான் அதை வாங்க வேண்டியிருக்கும் என்பதால், அரசு வாங்கும் கடனை பொறுப்பான முறையில் பயன்படுத்த வேண்டியிருக்கும் என்னும் கருத்து வலுப்பெற்று இன்றுவரை ஆதிக்கம் செலுத்தி வருகிறது (அந்த கருத்து மீண்டும் மீண்டும் பொய்ப்பிக்கப்பட்டுள்ளது என்பது வேறு கதை). அதை உறுதி செய்வதற்காகத்தான் 2003ஆம் ஆண்டு FRBM சட்டம் கொண்டுவரப்பட்டது. ஒரு நிதியாண்டில் அரசின் நிதிப்பற்றாக்குறை 3 விழுக்காட்டுக்கு அதிகமாக இருக்கக் கூடாது என்பதை இந்தச் சட்டம்தான் வரையறுக்கிறது. இவ்வாறு வரையறுப்பதற்குப் பொருளியல் கோட்பாடுகளிலும் சரி, நடைமுறைப் பொருளாதார மேலாண்மையிலும் சரி, எந்த அடிப்படையும் இல்லை என்பதுதான் உண்மை.

வாங்கும் கடனை ஆக்கபூர்வமாக, உற்பத்தியைப் பெருக்கும் உற்பத்திக் கருவிகளில் முதலீடு செய்தால் பணவீக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு. புதிதாக உருவாக்கப்பட்ட உற்பத்தித் திறனைப் (Production Capacity) பயன்படுத்தி, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி, அதிகரிக்கும் கிராக்கிக்கு ஏற்ப பொருட்களை உற்பத்தி செய்து அவற்றின் அளிப்பை (Supply) அதிகரிக்க முடியும் என்பதே அதற்குக்காரணம்.

ஆக, அரசு ரிசர்வ் வங்கியிடம் கடன் வாங்கினாலும் சரி, சந்தையிடமிருந்து கடன் வாங்கினாலும் சரி, அதை எதற்கு, எப்படிப் பயன்படுத்துகிறது என்பதுதான் நம்முடைய கவலையாக இருக்க வேண்டும். அரசு கூடுதலாகக் கடன் வாங்கினாலே பிரச்சினை என்று சொல்வது சரியான அணுகுமுறை அல்ல. வாங்கும் கடனை அரசு ஆக்கபூர்வமாக பயன்படுத்துகிறதா என்பதைக் கண்காணிப்பது அந்த அரசைத் தேர்ந்தெடுக்கும் மக்களின் பொறுப்பு. அரசை ஒழுங்குப்படுத்தும் முற்போக்கான மக்கள் அரசியல் மலர்வதற்காக நாம் உழைக்க வேண்டும்.

வாங்கும் கடனை அரசு புதிய உற்பத்திக் கருவிகளில் முதலீடு செய்வதே சிறந்தது என்றாலும், கிராக்கி சுணக்கம் கண்டுள்ளதன் காரணமாக மந்தநிலையில் உள்ள பொருளாதாரத்தைத் தூக்கிவிட, அரசு ரிசர்வ் வங்கி அல்லது சந்தையிடமிருந்து கடன் வாங்கி, அந்த பணத்தை நேரடியாக மக்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் அணுகுமுறை சரியானதாகும்.

உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் விற்கப்படாமல் இருக்கும் நிலையில், தனியார் தொழில் நிறுவனங்களின் உற்பத்திக் கருவிகள் முழுமையாகப் பயன்படுத்தப்படாமல் இருக்கும். அரசு கடன் வாங்கி மக்கள் மத்தியில் வாங்கும் சக்தியை உருவாக்குவதால் மீண்டும் பொருட்களுக்கான கிராக்கி ஏற்படும், பயன்படுத்தப்படாமல் இருந்த உற்பத்திக் கருவிகளைத் தொழில் நிறுவனங்கள் பொருட்களின் உற்பத்திக்காக முழுமையாக இயக்க முடியும். இதுவே முடங்கிய பொருளாதாரத்தை மீட்பதற்கான வழி.

வெள்ளி, 29 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon