மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 22 அக் 2020

தமிழகத்தில் வேலைவாய்ப்பு உருவாக்கம் கடும் சரிவு!

தமிழகத்தில் வேலைவாய்ப்பு உருவாக்கம் கடும் சரிவு!

தமிழகத்தில் பிப்ரவரி மாதத்தை ஒப்பிடும்போது, மார்ச் மாதத்திற்கான புதிய வேலைவாய்ப்பு உருவாக்கம் 56 சதவிகிதம் சரிந்திருப்பதாக மத்திய அரசு வெளியிட்ட ஊதியத் தரவு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி, பிப்ரவரி மாதம் 1,32,499 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்ட நிலையில், மார்ச் மாதத்தில் 58,948 வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. இது பிஃஎப் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் அளவிடப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்ததால் இந்த எண்ணிக்கை மேலும் குறையும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

தமிழகத்தில் 18 வயதிற்குக் குறைவானவர்கள் வேலைவாய்ப்பு உருவாக்கம் மார்ச் மாதம் 63 சதவிகிதம் குறைந்துள்ளது. பிப்ரவரி மாதம் முதல் 29-35 வயதிற்குட்பட்டவர்களுக்கு 58.9 சதவிகிதமும், 35 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 56.5 சதவிகிதமும் வேலைவாய்ப்பு உருவாக்கம் வீழ்ச்சியை சந்தித்தது.

இதுதொடர்பாக அகில இந்திய உற்பத்தியாளர்கள் அமைப்பின் முன்னாள் தேசியத் தலைவர் கே.இ.ரகுநாதன் கூறுகையில், ஊரடங்கால் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஏப்ரல் மாதம் 20 சதவிகிதமும், மே மாதம் 10 சதவிகிதமும் கூடுதலாக வீழ்ச்சியை சந்திக்கும் என்று எதிர்பார்ப்பதாக சொல்கிறார்.

“இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால் 29-35 க்கு இடைப்பட்ட நடுத்தர வயதினர் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏனெனில், இந்த வயதினரின் நிதிக் கடமைகள் அதிகம், மாற்று வேலை கிடைப்பது அவர்களுக்கு கடினமாக இருக்கும்” என்று கூறும் ரகுநாதன், மே 18ஆம் தேதிக்குப் பிறகு சுமார் 30 சதவிகித நிறுவனங்கள் மீண்டும் செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளதாகவும், வேலைவாய்ப்பு உருவாக்க சரிவு என்பது குறுகிய கால அல்லது நீண்ட கால போக்குதானா என்பது ஜூன் மாதத்தின் தரவுகளை வைத்துதான் தெரிந்துகொள்ள முடியும் என்கிறார்.

சிஐஇஎல் ஹெச்ஆர் சர்வீசஸ் நிறுவனத்தின் சிஇஓ ஆதித்ய நாராயண மிஸ்ரா, 2019-20 ஆம் நிதியாண்டின் இரண்டாவது பாதியில் பொருளாதார நடவடிக்கைகள் வீழ்ச்சியடைந்தன. குறிப்பாக மார்ச் மாதத்தில் அது அதிகமாக இருந்தது. ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் மேலும் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்கிறார். பல்வேறு நிறுவனங்கள் மார்ச் மாதத்திற்கான பிஎஃப் ரிட்டனை தாக்கல் செய்யவில்லை என்றும் அவர் கூறினார்.

எழில்

தகவல்: தி.இந்து

ஞாயிறு, 24 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon