மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 23 செப் 2020

அமித் ஷா மகன், கங்குலிக்காக மாற்றப்படும் கிரிக்கெட் வாரிய சட்டம்?

அமித் ஷா மகன், கங்குலிக்காக மாற்றப்படும் கிரிக்கெட் வாரிய சட்டம்?

தற்போது ஐசிசியின் தலைவராக இந்தியாவின் சஷாங் மனோகர் பதவி வகித்து வரும் நிலையில், இவரது பதவிக்காலம் மே மாதத்துடன் முடிவடைய இருக்கிறது. அடுத்த ஐசிசி தலைவர் யார்? என்பதே இப்போது அதிகம் கேட்கப்படும் கேள்வியாக இருக்கிறது.

கொரோனாவுக்கும் பிந்தைய புதிய சகஜ நிலைக்கு அனைத்து துறைகளும் தங்களை தயார்படுத்தி வருகின்றன. கிரிக்கெட் துறையும் அதற்கு விதிவிலக்கல்ல. தற்போதைய சூழலில் உலகக்கோப்பை டி20 போட்டிகள் தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கும் பல கிரிக்கெட் போர்டுகள் சுதாரித்துக் கொண்டு வருகின்றன. செல்வாக்கு நிறைந்த இந்திய, ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டுகளை தவிர்த்து பல நாடுகளின் கிரிக்கெட் போர்டுகள் இந்த கொரோனாவால் தள்ளாடி வருகின்றன.

இந்த சூழலில் ஐசிசியின் தலைவராக இந்தியாவின் சஷாங் மனோகர் பதவி வகித்து வரும் நிலையில், இவரது பதவிக்காலம் மே மாதத்துடன் முடிவடைய இருக்கிறது. மீண்டும் பதவியில் நீடிக்க விருப்பமில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். இதனால் அடுத்து வரக்கூடிய புதிய ஐசிசி தலைவர் மாற்றத்தை செயல்படுத்தக்கூடிய துணிச்சல் உடையவராகவும், அனுபவம் கொண்டவராகவும் இருக்க வேண்டும் என கிரிக்கெட் உலகம் எதிர்பார்த்து வருகிறது. இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின்(ஐசிசி)புதிய தலைவராக, இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய பிசிசிஐ தலைவருமான கங்குலி வரவேண்டும் என குரல்கள் வெளிப்படையாகவே ஒலிக்கத் துவங்கியிருக்கின்றன.

இது குறித்து கருத்து தெரிவித்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரிய இயக்குநரும், முன்னாள் வீரருமான கிரீம் ஸ்மித்``ஐசிசி தலைவர் பதவிக்கு கங்குலி போன்ற ஒருவர் வருவது முக்கியமான ஒன்று. கொரோனாவிற்கு பின் கிரிக்கெட்டை மீட்க வலிமையான தலைவர் வேண்டும். அதற்கு கங்குலி சரியான தேர்வாக இருப்பார். நீண்ட நாட்களுக்கு பின் தொடங்கும் கிரிக்கெட் போட்டிகளை எப்படி வழிநடத்துவது என்பது கங்குலி போன்ற அனுபவம் வாய்ந்த வீரரால் மட்டுமே முடியும். நவீனகால கிரிக்கெட்டைப் புரிந்துகொண்டு அதோடு நெருக்கமாகப் பயணித்தவரும் தலைமைப் பண்பு கொண்டவருமான ஒருவர் அதன் தலைமைப் பொறுப்புக்கு வருவது அவசியம். கங்குலி தலைமை பொறுப்பு அனைவரும் அறிந்த ஒன்று தான். கிரிக்கெட் போட்டி குறித்து அவர் நன்கு அறிந்தவர். சர்வதேச அரங்கில் ஜொலித்தவர். நம்பகத்தன்மை கொண்டவர். கொரோனாவிற்கு பின் கிரிக்கெட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது" எனக் கூறியுள்ளார்.

பிசிசிஐ தலைவராக இருக்கும் கங்குலி, ஐசிசி தலைவர் ஆவாரா என்ற கேள்வி இருந்தாலும், பிசிசிஐ பதவியில் நீடிப்பதில் கங்குலிக்கு தற்போதைய அடிப்படை சட்ட விதிகள் தடையாக இருக்கின்றன. கடந்த அக்டோபர் மாதம் பிசிசிஐ தலைவராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார் கங்குலி. பிசிசிஐ அல்லது மாநிலக் கிரிக்கெட் சங்கங்களில் தொடர்ந்து 6 ஆண்டுகள் பதவி வகித்தால், அடுத்த 3 ஆண்டுகளுக்கு அவர் எந்த நிர்வாகப் பதவியையும் வகிக்க முடியாது. இதனை 'கூலிங்க் ஆஃப் பீரியட்' என அழைப்பர். ஏற்கெனவே கங்குலி மேற்குவங்க கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்து வந்ததால், மிக விரைவில் பிசிசிஐ தலைவர் பதவியிலிருந்து விலக நேரிடும். இதனையறிந்து தான் கங்குலியும் பதவியேற்றார்.

இந்நிலையில், வாரியத்தின் சட்டத்தில் ஒரு முக்கியமான மாற்றத்தைக் கோரி பி.சி.சி.ஐ உச்சநீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டியுள்ளது. பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோருக்கு நீதிபதி லோதா பரிந்துரைத்த தேவையான 'கூலிங்க் ஆஃப் பீரியட்' கால அவகாசத்தை வழங்காமல் தங்களது மூன்று ஆண்டு காலத்தை நிர்வாகப் பணியில் இருக்குமாறு மாற்ற உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது பிசிசிஐ. இந்த விண்ணப்பத்தை பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் தாக்கல் செய்ததாக டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தில், இந்த மாற்றங்கள் டிசம்பர் 1 ஆம் தேதி ஏஜிஎம்மில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும், அரசியலமைப்பை மாற்றுவதன் மூலம் அவற்றை செயல்படுத்த ஆகஸ்ட் 9, 2018 ஆணைப்படி உச்சநீதிமன்றம் முடிவெடுக்க வேண்டுமென்றும் கூறினார். கங்குலியின் பிசிசிஐ பதவிக்காலம் முடியும் வரையில் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் முடிவெடுக்காத சூழலில் கங்குலி ஐசிசி தலைமை பதவிக்கு காய் நகர்த்தலாம் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் , அமித்ஷாவின் மகனான ஜெய் ஷாவும் தற்போது ஐசிசி தலைமை பதவிக்கு காய் நகர்த்தி வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐசிசியின் போர்டு குழுவில் 12 டெஸ்ட் அந்தஸ்து பெற்ற நாடுகளின் உறுப்பினர்கள், மூன்று அஸோசியேட் உறுப்பினர்கள், சுயேச்சையான பெண் இயக்குநர் ஒருவர் மற்றும் ஐசிசியின் தலைவர் என 17 உறுப்பினர்களும் அடுத்த தலைவரை தேர்தெடுக்க வாக்களிப்பார்கள். அதனால் செல்வாக்குமிக்க பிசிசிஐ-ஐச் சேர்ந்த ஒருவர் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவது எளிதானது.

கடந்த ஏப்ரல் மாதம், 12 முழு உறுப்பினர்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) மூன்று இணை பிரதிநிதிகளும் ஐசிசி வீடியோவில் கான்ஃபரன்சிங்கில் நடத்திய தலைமை நிர்வாகிகள் குழுக் கூட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தனர். கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு இடையேயான பாதை குறித்து அந்த விவாதத்தின் தலைப்பாக இருந்தது. அப்போது பிசிசிஐ பிரதிநிதி ஜெய் ஷாவின் சிந்தனையும் தெளிவான பேச்சும் அனைத்து உறுப்பினர்களையும் கவர்ந்ததாக அவுட்லுக் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. இக்கூட்டத்தின் முன்னேற்றங்களை அறிந்த நிர்வாகி ஒருவர், "ஜெய் ஷா தனது உரையில் மட்டும் தெளிவாக இல்லை, மாறாக, அர்த்தமுள்ள பங்களிப்பையும் அளித்தார். இது வரவேற்கத்தக்க மாற்றமாகும்" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது அவரது ஐசிசி தலைமை பதவிக்கான முயற்சியின் ஒரு செயலே என்றும் கூறப்படுகிறது.

தொற்றுநோய்க்கு முன்பே, ஐ.சி.சி அதன் நிதி இலக்குகளை பூர்த்தி செய்ய போராடியது. ஆனால் இப்போது, பி.சி.சி.ஐ இல்லாமல் ஐசிசி-யின் விஷயங்கள் மிகவும் கடினமாக இருக்கும் என ஐசிசி தரப்பு சிந்தித்து வருகின்றது. அது நிச்சயம் கங்குலி அல்லது ஜெய் ஷாவின் காய் நகர்த்தலுக்கு ஆதரவாக அமையும் என்றே கிரிக்கெட் வட்டாரங்கள் கூறுகின்றன.

-முகேஷ் சுப்ரமணியம்

ஞாயிறு, 24 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon