மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 23 செப் 2020

கொரோனா விளைவு: வேலைக்கு ஆட்கள் தேவை!

கொரோனா விளைவு: வேலைக்கு ஆட்கள் தேவை!

திருப்பூரில் தற்போது தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பனியன் கட்டுமானம், ஜவுளிக்கடை உட்பட பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

திருப்பூரில் பனியன் நிறுவனங்கள் அதிகம் என்பதால் திருப்பூர் எப்போதும் பரபரப்பாக காணப்படும். ஆனால் உலகையே புரட்டிப் போட்ட கொரோனா திருப்பூரையும் நிலைகுலைய செய்துள்ளது. கடந்த இரண்டு மாதமாக தொடரும் ஊரடங்கு காரணமாக தொழில்கள் இன்றி தென்மாவட்ட மக்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் பலர் தங்கள் சொந்த ஊருக்குச் சென்ற வண்ணம் உள்ளனர்.

இதனால் திருப்பூரில் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பனியன் நிறுவனங்கள் மட்டுமின்றி கட்டுமானப்பணி, ஜவுளிக் கடைகள், பல்பொருள் அங்காடிகள், ஓட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

திருப்பூரில் தற்போது ஊரடங்கு ஓரளவு தளர்த்தப்பட்டுள்ளதால் வீடுகள், கடைகள் போன்ற கட்டுமான பணிகள் நடந்துவருகின்றன. இதேபோல் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகரப் பகுதிகளில் ஆங்காங்கே அரசு சார்ந்த கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. ஆனால் இதற்குத் தேவையான கட்டுமானப் பணியாளர்கள் இல்லாத காரணத்தால் ஆங்காங்கே கட்டுமான பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அரசு சார்ந்த கட்டுமான பணிக்கு ஆட்கள் கிடைக்காமல் அவர்கள் மிகவும் திணறி வருகின்றனர். குறைந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்களை வைத்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல் பனியன் நிறுவனங்கள் தற்போது தொழிலில் சற்று முன்னேற்றம் காண ஆரம்பித்துள்ள நிலையில் போதிய தொழிலாளர்கள் கிடைக்காததால் தொழிலாளர்களுக்கு வலை வீசி வருகின்றனர். இதேபோல் ஜவுளி கடைகளிலும் ஆட்கள் பற்றாக்குறை இருப்பதால் தற்போது சீஸன் நேரத்தில் போதிய விற்பனையின்றி சிரமப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக ஜவுளிக் கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆங்காங்கே ஆட்கள் தேவை குறித்து விளம்பரங்கள் வைக்கப்பட்டுள்ளன. திருப்பூரில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல துடித்துக்கொண்டிருக்கும் வடமாநில தொழிலாளர்களும், சொந்த ஊர்களுக்கு சென்றுள்ள தென் மாவட்ட மக்களும் பணிக்கு திரும்பினால் மட்டுமே திருப்பூரின் நிலைமை சீராகும்.

-ராஜ்

ஞாயிறு, 24 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon