மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 23 செப் 2020

நாளை முதல் தொழிற்பேட்டைகள் இயங்க அனுமதி!

நாளை முதல் தொழிற்பேட்டைகள் இயங்க அனுமதி!

சென்னையில் 17 தொழிற்பேட்டைகள் நாளை முதல் இயங்க தமிழக அரசு அனுமதி வழங்கி இன்று (மே 24) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து மார்ச் 24 ஆம் தேதி முதல் மே 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாகத் தமிழகத்தில் பல்வேறு தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா பாதிப்பு இல்லாத மற்றும் குறைந்து வரும் மாவட்டங்களில் தளர்வுகளை அளித்து வருகிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

சலூன் கடைகள், பியூட்டி பார்லர்கள் ஆகியவை செயல்படவும் நேற்று முதல் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், நாளை முதல் தொழிற்பேட்டைகள் இயங்கவும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 தொழிற்பேட்டைகளை இயக்க, தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தினரது கோரிக்கையினை பரிசீலித்து, நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளின் எல்லைக்குட்படாத தொழிற்பேட்டைகள், அதாவது, சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 தொழிற்பேட்டைகள், 25.5.2020 முதல் அத்தொழிற்பேட்டை பகுதிகளிலேயே உள்ள 25 சதவிகித தொழிலாளர்களை மட்டும் கொண்டு செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. தடை செய்யப்பட்ட பகுதிகளிலிருந்து பணிக்கு வரும் தொழிலாளர்களுக்கு அனுமதி இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பணிக்கு வரும் தொழிலாளர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும். மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியுடன் பணி செய்வதை உறுதி செய்ய வேண்டும். காலை மாலை இரு வேளையும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்ய வேண்டும். 55 வயதுக்கு மேற்பட்டோர்கள் பணிக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும்.

தொழிலாளர்களுக்குச் சளி, காய்ச்சல், போன்ற அறிகுறி இருந்தால் அவர்களுக்கு விடுப்பு அளிக்க வேண்டும் என்று அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது.

-கவிபிரியா

ஞாயிறு, 24 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon