மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 23 செப் 2020

கொளுத்தும் வெயில்- அனல் காற்று: எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்!

கொளுத்தும் வெயில்- அனல் காற்று:  எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் கொரோனா தாக்கம் ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

ஆம்பன் புயல் தாக்கம் காரணமாகக் கடலோர மாவட்டங்களில் ஈரப்பதம் உறிஞ்சப்பட்டு வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக உள் மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. அதோடு அனல் காற்றும் வீசுவதால் மக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில், அனல் காற்று காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து வருகிறது.

தமிழகத்தில் சென்னை,மதுரை, வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருநெல்வேலி, திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதிக பட்ச வெப்ப நிலையானது 40 - 42 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் முற்பகல் 11.30 முதல் பிற்பகல் 3.30 வரை வீட்டை விட்டு வெளியே வரவும், திறந்த வெளியில் வேலை செய்வதையும் தவிர்க்க வேண்டும் என்று எச்சரித்துள்ளது.

அதுபோன்று வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது.

தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாகத் திருத்தணியில் 43 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகியிருப்பதாகவும், திருத்தணியைத் தொடர்ந்து மதுரை, திருச்சி, கரூர், வேலூர் ஆகிய பகுதிகளில் வெப்பநிலை அதிகமாக இருந்ததாகவும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

-கவிபிரியா

ஞாயிறு, 24 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon