மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 23 செப் 2020

வேலை நீக்கம் ஏன்? விகடன் அதிபர் பா.சீனிவாசன் பேட்டி!

வேலை நீக்கம் ஏன்?  விகடன் அதிபர் பா.சீனிவாசன் பேட்டி!

94 ஆவது வருடத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் விகடன் குழுமத்தில் இருந்து சுமார் 150க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள், ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்திதான் தற்போது சமூக தளங்களிலும், பத்திரிகையாளர்கள் மத்தியிலும் பேசுபொருளாக இருந்து வருகிறது. விகடன் விழாக்களில் அந்நிறுவனத்திடம் இருந்து விருது பெற்றவர்களில் சிலர், இந்த ஒட்டுமொத்த பணி நீக்கத்தைக் கண்டித்து தாங்கள் பெற்ற விருதுகளை திரும்பக் கொடுத்து வருகின்றனர்.

இந்த சிக்கலான நிலையில் விகடன் நிறுவனம் இதுகுறித்து என்ன கருதுகிறது என்பதை அதிகாரபூர்வமாக எந்த அறிக்கையும் தெரிவிக்கவில்லை. ஆனால் கடந்த மே 2 ஆம் தேதி indianjournalismreview.com என்ற இணைய தளத்துக்கு விகடன் குழும தலைவரான பா.சீனிவாசன் ஆங்கிலத்தில் அளித்த ஆடியோ பேட்டியொன்றில் கொரோனா ஊரடங்கு, அதனால் பத்திரிகை நிறுவனங்களுக்கு ஏற்பட்ட சிக்கல், வேலை நீக்கம் ஆகியவை பற்றி தன் கருத்துகளை முன்கூட்டியே விரிவாக எடுத்து வைத்திருக்கிறார்.

அவரது பேட்டியின் சில பகுதிகளின் தமிழாக்கம் இதோ...

“ஒரு தொழிலில் எது மிகச் சிறந்த நேரம் என்பதை அறியாமலேயே நாம் அந்த மிகச் சிறந்த நேரத்தை அனுபவித்திருப்போம். அதேநேரம் புலி வருது புலி வருது கதையாக, பத்திரிகைத் தொழிலுக்கு நெருக்கடி வருகிறது என்றும் பலர் சொல்லிக் கொண்டிருந்தனர். அந்த புலி இன்று வந்துவிட்டது. நாளை என்னாகும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக நம் முன்னால் வந்து நிற்கிறது. அதற்காக நாம் பரிதாபத்தை யாரிடமும் எதிர்பார்க்கவில்லை.

தமிழில் விரலுக்குத் தகுந்த வீக்கம் என்று ஒரு பழமொழி உண்டு. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம். யார் எதற்காக பாதிக்கப்படுகிறார்கள் என்பதைப் பொறுத்தது அது. நாட்டில் தொழில் செய்யும் அனைவரும் இந்த சூழலில் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நாம் விரும்புகிறோமோ இல்லையோ, new normal என்பதை நாம் புரிந்துகொண்டாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ( நெருக்கடிக்குப் பிந்தைய கால கட்டத்தைத்தான் new normal என்று பொருளாதார வட்டாரத்தில் கூறுகிறார்கள்)

எங்களுடைய 94 வருட வரலாற்றில் ஒரு மாதத்துக்கு இதழ்கள் வெளிவராமல் இருந்ததில்லை. இந்த நிலையில் ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு பழையபடி மக்கள் நம்மை தொடர்ந்து ஏற்பார்களா, விலை கொடுத்து வாங்கிப் படிப்பார்களா என்று என் மனதுக்குள்ளேயே கேள்விகள் எழுந்தன. ஏனென்றால் இந்த இடைவெளிக்குப் பின் நாம் நமது வாடிக்கையாளர்களோடு மீண்டும் அந்த கனெக்ட்டை ஏற்படுத்திக் கொள்வோமா என்ற அடிப்படையில்தான் இந்தக் கேள்வி எனக்குள் எழுந்தது. ஒவ்வொருவரது தேவைகளும் மாறிக் கொண்டே இருக்கின்றன, ஒவ்வொருவரது நோக்கங்களும் மாறிக் கொண்டே இருக்கின்றன. எனவே முப்பது வருடங்களுக்கு முன் இருந்தது போல, இருபது வருடங்களுக்கு முன் இருந்தது போல, பத்து வருடங்களுக்கு முன் இருந்தது போல, ஒரு மாதத்துக்கு  முன் இருந்தது போல வாசகர்கள் வாடிக்கையாளர்கள் மீண்டும் தொடர்வார்களா என்று எனக்குள்ளேயே நான் கேட்டுக் கொண்டேன்.

ஊரடங்கு பகுதியளவு தளர்த்தப்பட்டதில் இருந்து ஏப்ரலில் நாங்கள் மீண்டும் இதழ்களை அச்சிட்ட நிலையில், எனக்கு கிடைத்த நல்ல செய்தி என்னவென்றால், நாங்கள் இதழ்களின் பிரின்ட் ஆர்டரை (பிரதிநிதிகளின் எண்ணிக்கை) குறைத்தாலும்,  வாசகர்களுக்கு எங்களை தேடுவதில் முன்பு இருந்த அதேவேகம் இருக்கிறது என்பதுதான். இதற்கான முழு விடையும் தெரிந்துகொள்ள லாக் டவுன் முடிந்து புதிய இயல்பு நிலை திரும்பி மூன்று முதல் ஆறு மாதங்களுக்குப் பின்னரே தெரியவரும். சிலர் கொரோனா பரவல் செய்தித் தாள்கள், பத்திரிகைகள் மூலம் பரவும் என கிளப்பிவிட்டார்கள். அவர்களிடம் நான் கேட்கும் கேள்வி நீங்கள் பர்ஸுகளில் இருந்து எடுத்துக்கொடுக்கும் பணம் மூலம் வைரஸ் பரவாதபோது பத்திரிகை பேப்பர்கள் மூலம் வைரஸ் எப்படி பரவும்?” என்ற விகடன் சீனிவாசனிடம்,

“கொரோனா ஊரடங்கில் இருந்து கற்றுக் கொண்ட பாடங்கள் என்ன?” என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, இப்போது நடைபெற்று வரும் வேலை நீக்கம் பற்றிய முன் கூட்டிய எச்சரிக்கை மணியோசையை எழுப்பியிருந்தார்.

“நமது நிறுவனத்தின் ஊழியர்கள் அவர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் நம்மால் தக்க வைத்துக்கொள்ள இயலாது என்று நாம் உண்மையாக உணர்ந்துவிட்டால்... ரைட் சைஸிங் செய்வதைப் பற்றி ஒன்றுக்கு இருமுறை யோசிக்கக் கூடாது. (ரைட் சைசிங் என்றால் தேவைக்கு ஏற்றபடி நிறுவன ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்துக் கொள்ளுதல்). இந்த விவகாரத்தில் நாங்கள் நிறைய யோசிக்கிறோம். ஆனால் கொஞ்சம்தான் அமல்படுத்தியிருக்கிறோம். கொரோனா, ஊரடங்கு இதெல்லாம் இல்லையன்றால் கூட நாங்கள் கடந்த ஆறு மாதமாக ‘ரைட் சைசிங்’ செய்ய வேண்டிய கட்டாயத்தில்தான் இருக்கிறோம். இப்போது கொரோனா வந்து, ‘யோசித்துக் கொண்டே இருக்காதே செய்’ என்று சொல்லியிருக்கிறது. அதேநேரம் வெயிலின் அருமை நிழலில்தான் தெரியும் என்பதைப் போல அச்சிதழ்களின் அருமை இந்த ஊரடங்கில்தான் மக்களுக்குத் தெரிகிறது. அதை தொடர்ந்து நாங்கள் மக்களுக்குக் கொண்டு சேர்ப்போம்” என்று கூறியிருக்கிறார் பா. சீனிவாசன்.

-ஆரா

ஞாயிறு, 24 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon