மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 23 செப் 2020

ஊரடங்கில் ஊடுருவும் நாஜிகள்: ஐரோப்பாவில் கொள்ளை நோய் - 3

ஊரடங்கில் ஊடுருவும் நாஜிகள்: ஐரோப்பாவில் கொள்ளை நோய் - 3

முனைவர் க.சுபாஷிணி

உள்ளே செல்லும் முன்..

//ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் ஏற்படுத்தி வரும் சமூக, பொருளாதார, அரசியல் தாக்கங்களைப் பற்றி தொடராக எழுதி வருகிறார் முனைவர் சுபாஷிணி. சமகால தாக்கங்களை மட்டுமல்லாமல், இதற்கு முன் வரலாற்றில் தொற்று நோய் மூலம் ஐரோப்பா பெற்ற அனுபவக் கூறுகளையும் சேர்த்து, அதை சம காலத்தோடு நினைவுபடுத்தி இந்தப் பிரச்சினையை முழுமையான கோணத்தோடு அணுகுகிறார். ஏற்கனவே இரு ஞாயிறுகள் வெளிவந்த இந்தத் தொடரின் மூன்றாவது பாகம் இதோ...//

கடந்த சில வாரங்களாக ஜெர்மனியில் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைவதை ரோபர்ட் கோஹ் ஆய்வு நிறுவனம் (Robert Koch Institute) அறிக்கை வெளியிட்டுள்ளது. மார்ச் மாதத்தில் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கில் இறப்போர் எண்ணிக்கை இருந்தது. பிறகு ஏப்ரல் மாதம் 200க்கு அதிகரித்து இப்போது 27இல் இருந்து 22 என இறப்பின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் குறைந்து வருகிறது. ஒருவகையில் ஜெர்மானிய மக்கள் கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ளும் எதிர்ப்பு சக்தியைப் படிப்படியாக தங்கள் உடலில் மேம்படுத்திக் கொண்டிருக்கும் சாத்தியம் அதிகரித்துள்ளதோ என்று இது சிந்திக்க வைக்கிறது.

கடந்த வாரத்தில் எல்லை நாடுகளுக்கான போக்குவரத்துக்கான தடையை ஜெர்மானிய அரசு கைவிட்டு எல்லையைத் திறக்கத் தொடங்கியது. ஜெர்மனியின் எல்லை நாடான லுக்சும்போர்க் நாட்டுக்கான எல்லை போக்குவரத்துத் தடையை நீக்கி 15.5.2020 இரு நாடுகளுக்குமான போக்குவரத்தை அனுமதித்தது ஜெர்மனி. நெதர்லாந்துக்கான எல்லையும் திறக்கப்பட்டது. ஜெர்மனியிலிருந்து பிரான்ஸ் ஸ்விட்சர்லாந்து ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கு உறவினர்களைச் சந்திக்கச் செல்பவர்களுக்கும் அலுவலக ரீதியாகப் பயணிப்பவர்களுக்கும் எல்லைகள் திறக்கப்பட்டன. முழுமையான எல்லைத் திறப்பு அல்ல இது என்றாலும் முதல்கட்ட நடவடிக்கை எனலாம். டென்மார்க் மற்றும் பெல்ஜியம் ஆகிய இரு நாடுகளுக்குமான எல்லை போக்குவரத்து வருகிற நாட்களில் இதேபோல சில கட்டுப்பாடுகளுடன் திறக்கப்படும் என்பதை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. ஜூன் மாத மத்தியில் ஜெர்மனியின் எல்லா எல்லை நாடுகளுக்குமான எல்லை கட்டுப்பாடுகளையும் நீக்கும் முயற்சியை ஜெர்மனி தொடங்கியுள்ளது.

மிக அதிகமான பாதிப்பை எதிர்நோக்கிய இத்தாலியும் ஊரடங்கை முடிவுக்குக் கொண்டுவர ஆயத்தமாகிவிட்டது. ஜூன் 3ஆம் தேதி முதல் இத்தாலி தனது எல்லையைத் திறக்கிறது. விமானச் சேவையையும் தொடக்குகிறது. சுற்றுலாத் துறை மற்றும் விவசாயத் துறையைக் கருத்தில்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. ஒட்டுமொத்தமாக படிப்படியாக ஜூன் மாதம் தொடக்கம் ஐரோப்பா இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று தெரிகிறது. இதில் இங்கிலாந்து மட்டும் விதிவிலக்காக இருக்கலாம்.

யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் ஒரு கொள்ளை நோய் வந்து நமது இயல்பு வாழ்க்கையைப் புரட்டிப் போட்டிருக்கிறது. இது ஐரோப்பாவுக்குப் புதிதல்ல.

வரலாற்றை பின்னோக்கிச் சென்று காணும்போது ஐரோப்பா கி.பி 16ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் மீண்டும் ஒரு கொள்ளை நோய் பேரிடரை 1855ஆம் ஆண்டு சந்தித்தது. அம்மை நோய் கொப்புளங்கள் போல உடலில் தோன்றி மனித உடலின் சக்தியை உறிஞ்சியெடுத்து உயிர்களைக் கொல்லும் கொள்ளை நோய் (The Third Plague Pandemic) மீண்டும் ஐரோப்பா முழுவதையும் தாக்கியது. இந்த முறையும் இந்த வைரஸ் கிருமி சீனாவிலிருந்து தான் உருவாகி ஐரோப்பாவுக்கு மட்டுமல்ல; இந்தியா, ஹாங்காங் ஆகிய பகுதிகளிலும் பரவியது. மொத்தம் 15 மில்லியன் மக்கள் இந்தக் கொள்ளை நோய்க்குப் பலியானார்கள். அந்தக் காலகட்டத்தில் இந்த நோய் பரவலால் இந்தியாவில்தான் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் மிக அதிகமானோர் பலியானார்கள். பிரித்தானிய காலனித்துவ ஆட்சியில் இந்தியா இருந்த காலகட்டம் அது. நீண்டகாலமாக இந்த வைரஸ் தொற்று இருந்து படிப்படியாக குறைந்து இதன் தாக்கம் 1960 வரை இருந்தது என்றும் குறிப்புகள் சொல்கின்றன.

1875ஆம் ஆண்டு மீசல்ஸ் கொள்ளை நோய்த் தொற்று (Fiji Measles Pandemic) ஐரோப்பாவுக்கு வந்து சேர்ந்தது. பிஜி தீவு பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்கு வந்த பிறகு பிரித்தானியப் பேரரசின் அரசியல் குழு ஒன்று ஆஸ்திரேலியாவுக்கு விக்டோரியா மகாராணியாரின் பிரதிநிதித்துவம் பெற்றுச் சென்று பின்னர் பிஜி தீவுக்கு வந்தார்கள். இவர்களால் பிஜித் தீவு முழுமைக்கும் இந்த நோய் பரவியது. இந்தக் குழுவினரைச் சந்தித்த பூர்வகுடி இனக்குழு தலைவர்கள் அனைவருக்கும் இந்தத் தொற்று பரவி வெகு விரைவாக இது பிஜி தீவில் பல கிராமங்களில் பரவத்தொடங்கியது. ஒரு சில கிராமங்கள் முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டு மக்கள் அனைவரும் இறந்து போனார்கள். இறந்து போன மக்களின் உடல்கள் குவிக்கப்பட்டு எரியூட்ட பட்டார்கள். பிஜி தீவின் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள், அதாவது 40,000 பேர் இந்த நோயினால் அப்போது உயிரிழந்தார்கள்.

ஐரோப்பாவில் மேலும் ஒரு கொள்ளை நோய் அலை 1889ஆம் ஆண்டு ஏற்பட்டது. ரஷ்யக் காய்ச்சல் (Russian Flu) என்ற பெயர்கொண்ட இந்தத் தொற்று நோய் முதலில் சைபீரியாவிலும், பாகிஸ்தானிலும் தொடங்கி பின்னர் அங்கிருந்து ,மாஸ்கோ வரை பரவியது. அங்கிருந்து பின்லாந்து வந்த மக்களுக்கும் பரவி பின்னர் போலந்திலும் அதன் பிறகு ஐரோப்பா முழுவதும் இது பரவியது. இந்த நோயைக் கொண்டு செல்பவர்கள் பயணித்த இடங்களெல்லாம் இது பரவியது. வட அமெரிக்கா, ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. இதற்கு அடுத்த ஆண்டில் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் 360,000 பேர் இறந்து போயினர்.

கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஐரோப்பாவைக் கலங்க வைத்த ஒரு பேரிடர் என்றால் அது ஸ்பானிஷ் காய்ச்சல் (Spanish Flu) என்று அழைக்கப்படும் கொள்ளை நோய் பரவலாகும். இன்றைக்கு எப்படி கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி இருக்கிறதோ அதேபோல ஸ்பெயினில் முதலில் அடையாளம் காணப்பட்ட இந்த நோய் பின்னர் ஐரோப்பா முழுமையும் பரவி அமெரிக்கா, ஆசியா என உலகம் முழுவதும் பரவியது. ஏறக்குறைய ஐம்பது மில்லியன் மக்கள் இந்த நோய் தாக்கத்தால் இறந்து போயினர். இந்த நோயின் தாக்கம், அதற்கு அடுத்த ஆண்டே குறைந்து போனது. 1919ஆம் ஆண்டில் இந்த நோயை உருவாக்கும் கிருமி அதன் பலமிழந்து போனது. மக்கள் உடலில் இந்த வைரஸுக்கு எதிரான எதிர்ப்புச் சக்தி உருவாகிவிட்டதால் இதன் தாக்கம் பொதுமக்களை பாதிக்கச் செய்யவில்லை. இது அப்படியே மறைந்தது

இப்போதும்கூட நாம் இப்படித்தான் யோசித்துக் கொண்டிருக்கிறோம். மனிதர்கள் கொரோனா வைரஸ் கிருமிக்கு எதிரான எதிர்ப்புச் சக்தியை உடலில் உருவாக்க முடிந்தால் இந்த வைரஸ் தாக்கத்திலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்ற வகையில் கருத்துகள் பரவலாக எழுந்த வண்ணம் உள்ளன. கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் பணியும் உலகின் முக்கியமான பல நாடுகளில் மேற்கொள்ளப்படுகிறது. ஜெர்மனியின் டூபிங்கன் நகரில் உள்ள ஆய்வு நிறுவனமான CureVac கொரோனாவுக்கு எதிரான மருந்தைக் கண்டுபிடிக்கும் பணியில் பிப்ரவரி மாதம் தொடங்கி செயல்பட்டு வந்த நிலையில் அந்த நிறுவனத்தை வாங்கி அதன் கண்டுபிடிப்பை அமெரிக்காவுக்குள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் போட்ட திட்டமும் இந்தக் காலகட்டத்தில் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு செய்திதான். ஆனாலும் இந்த முயற்சி தோல்வியில் தான் முடிந்தது. கடந்த ஆண்டு க்ரீன்லாந்தை டென்மார்க்கிடமிருந்து வாங்க முயற்சித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தோல்வி கண்டுபோனது போல.

தற்சமயம் இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கொள்ளை நோய்க்கு எதிரான தடுப்பு மருந்து தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பிரிவு மேற்கொண்ட ஆய்வுகளில் Covid-19க்கு முன்னர் வந்த வைரஸ் கிருமிக்கு எதிரான மாற்று மருந்து ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதனடிப்படையில் மேம்படுத்தப்பட்ட வகையில் மேலும் துரிதமாக Covid-19 வகை வைரஸ் கிருமியை எதிர்கொள்ளும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணி செயல்பட்டு வருவதை ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தியாக வெளியிட்டது. (https://www.nytimes.com/2020/04/27/world/europe/coronavirus-vaccine-update-oxford.html) இச்செய்தியின் அடிப்படையில் மே மாத வாக்கில் ஏறக்குறைய 6000 மக்களுக்கு இந்தத் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு அது சோதனை செய்யப்படும் என்றும் தகவல் வெளியிட்டிருந்தது. இந்தச் சோதனை இப்போது தொடர்கிறது.

ஜெர்மானிய அரசு ஊரடங்கை அறிவித்து மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நோய் பரவலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென்று மே மாதம் 9ஆம் தேதி மோமூனிக் நகரிலும், மே மாதம் 11ஆம் தேதி தலைநகர் பெர்லின் நகரிலும் ஸ்டுட்கார்ட் நகரிலும் கூடிய ஊரடங்கு எதிர்ப்பாளர்கள் ஊரடங்குக்கு எதிரான தங்களது எதிர்ப்பைக் காட்டும் வகையில் திரண்டனர். சற்றும் எதிர்பாராத வகையில் நிகழ்ந்த இந்த எதிர்ப்பு உணர்வு ஜெர்மனி அரசை யோசிக்க வைக்கத் தவறவில்லை.

படிப்படியாக ஊரடங்குத் தளர்வு மே மாத தொடக்கம் முதலே ஜெர்மனியில் வரத்தொடங்கியது. இந்த ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்திக்கொண்டு நாஜி ஆதரவு சிந்தனை கொண்ட சில அமைப்புகள் ரகசியமாக தங்களின் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தத் தொடங்கிய செய்திகளும் ஊடகங்களில் வெளிவரத் தொடங்கின. அரசு இதனை மிகக் கவனமாகக் கையாண்டு இந்தச் சூழலை நாசி சித்தாந்த ஆதரவு தீவிரவாதிகள் நாட்டிற்குள் தவறான சித்தாந்தங்கள் பரவ வழிவகுக்கக் கூடாது என உடனடி நடவடிக்கை எடுப்பது பற்றிப் பேசத் தொடங்கி விட்டன. இணையத்தின் பல்வேறு கான்ஃபரன்ஸ் மென்பொருட்களைப் பயன்படுத்தி நாசி தத்துவத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் தங்களது தீவிரவாத கருத்துகளைப் பரப்புவதை முடக்கும் வகையில் அரசாங்கம் கண்காணிப்பை தீவிரப்படுத்தி இறுக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டதனால் இது பெரிய அளவில் தடுக்கப்பட்டுள்ளது.

கடந்தவாரம் ஜெர்மனியின் ஏறக்குறைய அனைத்து முக்கிய நகரங்களிலும் ஊரடங்குக்கு எதிராக தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் வார இறுதியில் மக்கள் ஒன்றுகூடினர். ஆரம்பத்தில் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் படிப்படியாக எதிர்ப்பாளர்களின்எண்ணிக்கை அதிகரிப்பதைப் பார்த்த காவல்துறையினர் சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகளை அமல்படுத்தத் தொடங்கினர். 17ஆம் தேதி மே மாதம் பெர்லின் நகரில் இப்படி ஒன்று கூடியவர்கள் தீவிரவாத நோக்கத்துடன் நடந்து கொண்டவர்கள் என்ற அடிப்படையில் 200 பேர் அன்று கைது செய்யப்பட்டனர். வைரஸுக்கு எதிராக கண்மூடித்தனமாக அடங்கிக்கிடக்கிறது அரசு என முழக்கமிட்டு எதிர்ப்பாளர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துக்கண்டனர்.

இந்தச் சூழலில் ஜெர்மனி அரசியலில் பவேரியா மாநிலத்தின் முதலமைச்சர் மார்க்குஸ் சூடர் (Markus Söder) ஊடகங்களின் கவனத்தை ஈர்த்த ஒரு அரசியல் தலைவராக வலம் வரத் தொடங்கியுள்ளார். கொரோனா காலத்தில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலமாக இருக்கின்ற பவேரியா மாநிலத்தின் முதலமைச்சர் தான் இவர். ஆரம்பம் முதல் இவர் கையாளும் நடவடிக்கைகள், ஊடகங்களில் மட்டுமல்ல பொதுமக்களின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. அந்த வகையில் ஏஞ்சலா மெர்கலுக்குப் பிறகு ஜெர்மனியின் சேன்சலராகக் கூடிய வாய்ப்பு இவருக்கு இருப்பதாகப் பேச்சு தொடங்கியிருக்கிறது. அடுத்த நகர்வுகளைப் பொறுத்துத்தான் பார்க்க வேண்டும்.

வரும் ஞாயிறு தொடரும்...

கட்டுரையாளர் குறிப்பு

முனைவர் க.சுபாஷிணி, ஜெர்மனி பாடன் ஊர்ட்டெம்பெர்க் மாநிலத்தில் டிஎக்ஸ்சி டெக்னோலஜி என்ற நிறுவனத்தின் ஐரோப்பியப் பகுதி கணினிக் கட்டமைப்புத் துறை தலைமை பொறியியலாளராகப் பணிபுரிகின்றார். இவர் தமிழ் மரபு அறக்கட்டளை என்ற பன்னாட்டு அமைப்பின் தோற்றுனர் மற்றும் தலைவருமாவார். இந்தப் பன்னாட்டு அமைப்பு உலகளாவிய தமிழர் வரலாறு, மொழி, பண்பாடு தொடர்பான ஆவணங்களை மின்னாக்கம் செய்வது, அவை தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வது மற்றும் வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாப்பு, விழிப்புணர்வு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகின்ற ஓர் அமைப்பாகும்.

பகுதி 1

பகுதி 2

ஞாயிறு, 24 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon