மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 15 ஜன 2021

இந்திய நெட்டிசன்களின் கோபத்துக்கு ஆளான இவாங்கா ட்ரம்ப்

இந்திய நெட்டிசன்களின் கோபத்துக்கு ஆளான இவாங்கா ட்ரம்ப்

பிகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தை சேர்ந்தவர் மோகன் பஸ்வான். குருகிராமில் ரிக்சா ஓட்டி வந்த இவருக்கு, கடந்த மார்ச் மாதம் விபத்தில் சிக்கி காயம் ஏற்பட்டுள்ளது. தந்தையை காண்பதற்கு அவரின் மகள் ஜோதி குமாரி வந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. எனவே தந்தையுடன் ஜோதி தங்கியுள்ளார். வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்யும்படி வற்புறுத்தியதால் சைக்கிள் மூலம் இருவரும் ஊர் திரும்ப முடிவு செய்தனர். ஜோதி சைக்கிளை ஓட்ட அவரது தந்தை பின்னால் உட்கார்ந்து பயணம் செய்தார். கிட்டத்தட்ட 1200 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சொந்த ஊருக்கு இருவரும் எட்டாவது நாளில் வந்து சேர்ந்தனர்.

இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரல் ஆனதை தொடர்ந்து இந்திய சைக்கிள் பந்தய கூட்டமைப்பு, ஜோதிகுமாரியை ஊரடங்கிற்கு பிறகு டெல்லி அழைத்து சென்று பயிற்சி அளிக்க இருப்பதாக அறிவித்தது.

இந்த செய்தி அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மகளும், ஆலோசகருமான இவாங்கா ட்ரம்பிற்கு தெரியவந்திருக்கிறது. இந்த செயலால் மிகவும் கவரப்பட்ட அவர், அதை பற்றி ட்விட்டரில் குறிப்பிட இந்திய சமூக வலைதள வாசிகள் கோபத்துடன் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். ஊரடங்கு காலத்தில் புலம்பெயர் தொழிலாளி ஒருவரது வறுமையை சாதனை என்று கூறியதாக பலரும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஜோதி மற்றும் அவரது தந்தையின் புகைப்படத்தை ட்விட்டரில் வெள்ளிக்கிழமை பகிர்ந்த இவாங்கா, ”15 வயது ஜோதிகுமாரி காயமடைந்த தனது தந்தையை சொந்த ஊருக்கு கொண்டு செல்வதற்காக ஆயிரத்து 200 கிலோ மீட்டர்களை ஏழு நாட்களில் மிதிவண்டியில் பயணித்திருக்கிறார். இது அவருடைய பாசத்துக்கும் மனோதிடத்துக்கும் கிடைத்த சாதனை. இது இந்திய மக்களின் மனதை மட்டுமல்லாமல் சைக்கிள் பந்தய கூட்டமைப்பின் மனதையும் கவர்ந்துள்ளது” என்று தெரிவித்திருந்தார்.

இவாங்காவின் இந்த ட்வீட்டுக்கு பதிலளிக்கும் விதமாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, ”வறுமையின் காரணத்தால் அந்த சிறுமி ஜோதி செய்த சைக்கிள் பயணம், ஆர்வத்தினால் அவர் செய்ததை போல புகழப்படுகிறது. அரசாங்கம் அவளைப் பாதுகாக்க தவறி விட்டது. இதை ஒரு வெற்றியாக கொண்டாட முடியாது” என்று கூறியுள்ளார்

உமர் அப்துல்லா மட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கான இந்தியர்களும் இவாங்காவின் ட்வீட்டிற்கு தங்களுடைய எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

- பவித்ரா குமரேசன்

சனி, 23 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon