மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 29 நவ 2020

கிச்சன் கீர்த்தனா: வெந்தயக் கஞ்சி!

கிச்சன் கீர்த்தனா: வெந்தயக் கஞ்சி!

இன்றைய இளம்பெண்கள் சிறந்து விளங்க உடல் பலம் முக்கியம். அதற்கு இந்த வெந்தயக்கஞ்சி உதவும். பெண்களுக்கு மட்டுமல்ல... வளரிளம் பருவத்தினருக்குத் தேவையான ஊட்டச்சத்தைத் தரும் இந்தக் கஞ்சி, உடல் சூட்டைத் தணிக்கும். மலச்சிக்கலைப் போக்கும். இதில் கரையும் நார்ச்சத்து அதிகம். இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கும். இரும்புச்சத்து அதிகமுள்ளதால் நரம்புகளை வலுப்படுத்தி நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். இன்சுலின் சுரப்பைச் சரிசெய்யும். ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் உற்பத்திக்கு உதவும். பொட்டாசியம் சத்தும் அதிகமுள்ளதால் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும்.

என்ன தேவை?

வெந்தயம் - ஒரு கைப்பிடி அளவு

பச்சரிசி - 200 கிராம்

பூண்டு - 8 பல்

உளுந்து - ஒரு டேபிள்ஸ்பூன்

தேங்காய் (துருவியது) - ஒரு டேபிள்ஸ்பூன்

பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்

சீரகம் - அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

தண்ணீர் - 4 - 5 டம்ளர்

எப்படிச் செய்வது?

முதலில் அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றைக் கழுவி 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு அதனுடன் பூண்டு, துருவிய தேங்காய், பெருங்காயத்தூள், சீரகம், கறிவேப்பிலை, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து ஐந்து விசில் விட்டு இறக்கவும். சத்தான, குளிர்ச்சியான வெந்தயக் கஞ்சி தயார். இதை சூடாகப் பருகவும்.

வெள்ளி, 22 மே 2020

chevronLeft iconமுந்தையது